ஒமுரா திமிங்கிலம்
(Omura Whale)
கடல்வாழ் திமிங்கிலங்கள் பேருருவம் கொண்டவை.
அடிக்கடி கடல்மேல் துள்ளிப் பாய்ந்து தங்கள் இருப்பை வெளியுல குக்குத் தெரிவிக்கும் பழக்கம்
உள்ளவை. ஆனால் இருக்கும் இடம் தெரியாமல், மனிதக் கண்களில் படாமல் உலவும் ஒரு சில திமிங்கில
இனங்களும் உள்ளன. அதுபோன்ற திமிங்கிலங்களில் ஒன்று ஒமுரா (Omura). இதன் அறிவியல் பெயர்
Balaenoptera Omurai).
‘ஒமுரா‘….இந்த பெயரைக் கேட்டதுமே இது ஏதோ ஜப்பான்காரரின்
பெயர் போல இருக்கிறதே என்று உங்களுக்கு ஐயம் ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஐயம் ஏற்பட்டிருந்தால்
உங்கள் ஐயப்பாடு சரியானதுதான். அடிக்கடி கண்ணில் படாத இந்த திமிங்கிலம் ஜப்பான் அருகே
2003ஆம் ஆண்டு முதலில் அடையாளம் காணப்பட்டது. ஜப்பான் கடலில் அடிக்கடி தென்பட்டதால்,
அந்த நாட்டின் திமிங்கில வல்லுநரான ஹிட்டியோ ஒமுராவின் பெயர் இந்தத் திமிங்கிலத்துக்குச்
சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இது ஜப்பான் நாட்டு திமிங்கிலம் என்று கருதப்பட்டாலும்கூட, ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஒமுராக்கள் அதிகம்
வாழும் பகுதி இந்தியப் பெருங்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவு கடற்பகுதி என்பது பின்னர் தெரியவந்தது.
உலகின் நான்காவது
பெரிய தீவு நாடான மடகாஸ்கர் அருகே ஒமுரா திமிங்கிலங்கள் அதிகம் நடமாடுகின்றன. அதிலும்
மடகாஸ்கர் பகுதி ஒமுராக்கள் சில அந்தப் பகுதியிலேயே தங்கி வாழ்வதாகவும், சில வலசை போவதாகவும்
நம்பப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு தெற்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒமுராவின் நடமாட்டம்
அதிகம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒருமுறை ஈரான் நாட்டில் ஓர் ஒமுரா கரையொதுங்கி
இருக்கிறது.
வெப்பக் கடல் திமிங்கிலமான ஒமுரா இந்திய –பசிபிக்
கடல்பகுதி களில் மட்டுமே இதுவரை தென்பட் டுள்ளது. ஒமுரா திமிங்கிலம் 33 முதல் 35 அடி
நீளம் வரை வளரக் கூடியது. நீண்ட குறுகலான உடல் கொண்டது. ஆரம்பத்தில் ஒமுரா வைப் பார்த்தவர்கள்
இதை பிரு தெஸ் (Bryds) திமிங்கில இனத்தின் உட்பிரிவைச் சேர்ந்ததாகக் கருதி னார்கள். பின்னர்
இது தனி இனம் என உறுதி செய்யப்பட்டது. பிருதெஸ் (Bryds) திமிங்கிலத்தின் தலைப் பகுதியில்
நீளமான மூன்று மேடுகள் காணப்படும். ஆனால் ஒமுராவின் தலையில் ஒரே ஒரு நீளமேடு மட்டுமே
காணப்படுகிறது.
ஒமுராவின் வலது பக்க தாடையில் சமச்சீரற்ற வெள்ளைநிற
வடுவும், இடது பக்க தாடையில் இருண்ட குறிகள் கொண்ட சமச்சீரற்ற வடுவும் இருப்பதை சிலர்
கவனித்துள்ளனர்.
திமிங்கிலங்கள் பொதுவாகக் கூடி வாழ்பவை. ஒமுரா
திமிங்கிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், மிகவும் நெருக்கமாக சேர்ந்து வாழாமல் சற்று
விலகி தனித்தனி குழுக்களாக ஒமுரா வாழ்கிறது. ஒவ்வொரு ஒமுராவும் மற்ற ஒமுராவுக்குப்
போதிய இடம் விட்டு கூப்பிடு தொலைவில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
ஒமுரா திமிங்கிலம் என்ன வகை உணவை உண்கிறது
என்பது இது வரை புரியாத புதிராக விளங்கு கிறது. தாடையை பெரிதாக விரித்து அதிக அளவில்
இது கடலடி கலங்கல் சேற்று நீரை உள்வாங்கி வெளி விடுகிறது. இதன்மூலம் கடல் சேற்று நீரில்
உள்ள சிறுமீன்கள் இதர கடலுயிர்களை இது வடிகட்டி உண்கிறதா? அல்லது கடல்நீரில் உள்ள கண்ணுக்குத்
தெரியாத கிரில் (Krill) எனப்படும் சிறு கூனிப்பொடியை இது வடிகட்டி உண்கிறதா என்பது அறிவியலாளர்களுக்கு
இன்னும் திட்ட வட்டமாகத் தெரியவில்லை.
நமது உலகப்பந்தில் 70 விழுக்காடுப் பகுதி கடல்தான்
என்ற நிலையில், உலகக் கடலின் வெறும் ஐந்து விழுக்காடு பரப்பளவு மட்டுமே இதுவரை ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஞ்சிய பெரும்பகுதிகளும் ஆராயப் பட்டால் ஒமுரா திமிங்கிலம் போல இன்னும்
பல அரிய கடலுயிர்கள் கண்டறியப்பட வாய்ப்பு உள்ளது.
No comments :
Post a Comment