Thursday, 29 November 2018


மிக நீ….ளமான உயிரினம்

Lion mane Jelly fish
முருக பெருமான். ஔவை மூதாட்டியின் முன்னிலையில் தோன்றி, ‘உலகில் பெரியது எதுவோ? உலகில் அரியது எதுவோ‘ என்று கேட்டது போல, உங்களிடம் யாராவது, “பெருங் கடல்களில் வாழும் உயிரினங் களில் மிக நீ…..ளமான உயிரினம் எது?“ என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?
ஏதாவது ஒருவகை திமிங்கிலமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அப்படி நினைத்தால் அது தவறான விடை.
உண்மையில், உலகின் மிக நீளமான கடலுயிர், Lion mane Jelly fish எனப்படும் ஒரு வகை சொறியினம்தான். இந்த சிங்கப் பிடரி சொறி (இழுது) 36.6 மீட்டர் நீளத்துக்கு அதாவது 120 அடி நீளத்துக்கு (!) விழுது போன்ற நீளமான உணர்விழைகளைக் கொண்டது. மெடூசாவின் கூந்தல் போன்ற இந்த உயிரினமே கடலின் மிகநீளமான உயிரினம்.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெறும் மிகநீளமான கடலுயிரினம் நீலத் திமிங்கிலம் (Blue Whale). இதன் நீளம் 33 மீட்டர். அதாவது 108 அடி. இந்தப் பட்டியலில் மூன்றாவதாக இடம்பெறத்தக்கது விந்து திமிங்கிலம் எனப்படும் ஸ்பெர்ம் திமிங்கிலம் (Sperm Whale). இதன் நீளம் 24 மீட்டர் (78.7 அடி).
நீலக்கடல்களின் நீளமான நான்காவது உயிரினம் எது என்று கேட்டால் அது 18.8 மீட்டர், அதாவது 61.68 அடிவரை நீளமுள்ள அம்மணி உழுவை (Whale Shark). ஐந்தாவது நீளமான உயிரினம் மேய்ச்சல் சுறா (Basking Shark). மேய்ச்சல் சுறாவின்  நீளம் ஏறத்தாழ 12.27 மீட்டர் (40.2 அடி).
நீளமான உயிரினப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெறுவது பெரும்பீலிக் கணவாய். இதன் நீளம் ஏறத்தாழ 12 மீட்டர் (39 அடி).
இதற்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தை பசிபிக் கடல் பெருங்கணவாய் பெறுகிறது. இதன் நீளம் 9.8 மீட்டர் (32 அடி). எட்டாவது இடத்துக்கு சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய Giant Oarfish. இதன் நீளம் 8 மீட்டர் (26 அடி).
நீலத் திமிங்கிலம்
நீளமான கடலுயிரினங்களில் 9ஆவது இடத்தைப் பெறுவது Great white Shark எனப்படும் பெருஞ்சுறா அல்லது பெரு வஞ்சுறா. இதன் நீளம் 7 மீட்டர். அல்லது 22.96 அடி.
பத்தாவது இடத்தை யானைத் திருக்கை என தமிழில் வழங்கப்படும் மண்டா ரே (Manta Ray) பெறுகிறது. வளர்ந்த யானைத்திருக்கையின் நீளம் பெருஞ் சுறாவின் அதே நீளம்தான். அதாவது 7 மீட்டர். அல்லது 22.96 அடி.
இவற்றில் அம்மணித்திருக்கை, பெருஞ்சுறா, பெருங்கணவாய், மேய்ச்சல் சுறா, ஆனைத்திருக்கை போன்ற கடலுயிர்கள் பற்றிய தகவல்களை நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் காண முடியும்.
(அம்மணித்திருக்கை Oct, 2015, July 4, 2018, ஆனைத்திருக்கை Ap.28, 2016. மேய்ச்சல் சுறா Feb 25, 2017, பெருஞ்சுறா May 10, 2017, பெருங்கணவாய் May 29, 2017)

Wednesday, 28 November 2018


முரா திமிங்கிலம் (Omura Whale)


கடல்வாழ் திமிங்கிலங்கள் பேருருவம் கொண்டவை. அடிக்கடி கடல்மேல் துள்ளிப் பாய்ந்து தங்கள் இருப்பை வெளியுல குக்குத் தெரிவிக்கும் பழக்கம் உள்ளவை. ஆனால் இருக்கும் இடம் தெரியாமல், மனிதக் கண்களில் படாமல் உலவும் ஒரு சில திமிங்கில இனங்களும் உள்ளன. அதுபோன்ற திமிங்கிலங்களில் ஒன்று ஒமுரா (Omura). இதன் அறிவியல் பெயர் Balaenoptera Omurai).
‘ஒமுரா‘….இந்த பெயரைக் கேட்டதுமே இது ஏதோ ஜப்பான்காரரின் பெயர் போல இருக்கிறதே என்று உங்களுக்கு ஐயம் ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஐயம் ஏற்பட்டிருந்தால் உங்கள் ஐயப்பாடு சரியானதுதான். அடிக்கடி கண்ணில் படாத இந்த திமிங்கிலம் ஜப்பான் அருகே 2003ஆம் ஆண்டு முதலில் அடையாளம் காணப்பட்டது. ஜப்பான் கடலில் அடிக்கடி தென்பட்டதால், அந்த நாட்டின் திமிங்கில வல்லுநரான ஹிட்டியோ ஒமுராவின் பெயர் இந்தத் திமிங்கிலத்துக்குச் சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இது ஜப்பான் நாட்டு திமிங்கிலம் என்று கருதப்பட்டாலும்கூட, ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஒமுராக்கள் அதிகம் வாழும் பகுதி இந்தியப் பெருங்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவு கடற்பகுதி என்பது பின்னர் தெரியவந்தது. 
உலகின் நான்காவது பெரிய தீவு நாடான மடகாஸ்கர் அருகே ஒமுரா திமிங்கிலங்கள் அதிகம் நடமாடுகின்றன. அதிலும் மடகாஸ்கர் பகுதி ஒமுராக்கள் சில அந்தப் பகுதியிலேயே தங்கி வாழ்வதாகவும், சில வலசை போவதாகவும் நம்பப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு தெற்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒமுராவின் நடமாட்டம் அதிகம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒருமுறை ஈரான் நாட்டில் ஓர் ஒமுரா கரையொதுங்கி இருக்கிறது.
வெப்பக் கடல் திமிங்கிலமான ஒமுரா இந்திய –பசிபிக் கடல்பகுதி களில் மட்டுமே இதுவரை தென்பட் டுள்ளது. ஒமுரா திமிங்கிலம் 33 முதல் 35 அடி நீளம் வரை வளரக் கூடியது. நீண்ட குறுகலான உடல் கொண்டது. ஆரம்பத்தில் ஒமுரா வைப் பார்த்தவர்கள் இதை பிரு தெஸ் (Bryds) திமிங்கில இனத்தின் உட்பிரிவைச் சேர்ந்ததாகக் கருதி னார்கள். பின்னர் இது தனி இனம் என உறுதி செய்யப்பட்டது. பிருதெஸ் (Bryds) திமிங்கிலத்தின் தலைப் பகுதியில் நீளமான மூன்று மேடுகள் காணப்படும். ஆனால் ஒமுராவின் தலையில் ஒரே ஒரு நீளமேடு மட்டுமே காணப்படுகிறது.
ஒமுராவின் வலது பக்க தாடையில் சமச்சீரற்ற வெள்ளைநிற வடுவும், இடது பக்க தாடையில் இருண்ட குறிகள் கொண்ட சமச்சீரற்ற வடுவும் இருப்பதை சிலர் கவனித்துள்ளனர்.
திமிங்கிலங்கள் பொதுவாகக் கூடி வாழ்பவை. ஒமுரா திமிங்கிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், மிகவும் நெருக்கமாக சேர்ந்து வாழாமல் சற்று விலகி தனித்தனி குழுக்களாக ஒமுரா வாழ்கிறது. ஒவ்வொரு ஒமுராவும் மற்ற ஒமுராவுக்குப் போதிய இடம் விட்டு கூப்பிடு தொலைவில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
ஒமுரா திமிங்கிலம் என்ன வகை உணவை உண்கிறது என்பது இது வரை புரியாத புதிராக விளங்கு கிறது. தாடையை பெரிதாக விரித்து அதிக அளவில் இது கடலடி கலங்கல் சேற்று நீரை உள்வாங்கி வெளி விடுகிறது. இதன்மூலம் கடல் சேற்று நீரில் உள்ள சிறுமீன்கள் இதர கடலுயிர்களை இது வடிகட்டி உண்கிறதா? அல்லது கடல்நீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிரில் (Krill) எனப்படும் சிறு கூனிப்பொடியை இது வடிகட்டி உண்கிறதா என்பது அறிவியலாளர்களுக்கு இன்னும் திட்ட வட்டமாகத் தெரியவில்லை.
நமது உலகப்பந்தில் 70 விழுக்காடுப் பகுதி கடல்தான் என்ற நிலையில், உலகக் கடலின் வெறும் ஐந்து விழுக்காடு பரப்பளவு மட்டுமே இதுவரை ஆராயப்பட்டுள்ளது. இந்நிலையில், எஞ்சிய பெரும்பகுதிகளும் ஆராயப் பட்டால் ஒமுரா திமிங்கிலம் போல இன்னும் பல அரிய கடலுயிர்கள் கண்டறியப்பட வாய்ப்பு உள்ளது.

Tuesday, 20 November 2018


பெலிஸ் நீலத்துளை (Belize Blue Hole)

கடலில் பவழப்பாறைகள் மிகுந்திருக்கும் பகுதிகளில் உள்ள ஆழக்குழிகளை தாவு என அழைப்பார்கள். உலகக் கடல்களில் பல்வேறு இடங்களில் பெரிய அளவு தாவுகள் காணப்படு கின்றன. விண்வெளியில் இருப்பதாகக் கருதப் படும் கருந்துளைகள் (Black Holes) போல, கடல் களில் காணப்படும் இவை நீலத்துளைகள்  (Blue Holes) என அழைக்கப்படுகின்றன.
மத்திய அமெரிக்காவின் வடகிழக்கு மூலை யில் உள்ள பெலிஸ் (Belize) நாட்டில், கரிபியன் கடற்பகுதியில் இதுபோன்ற அழகிய நீலத்துளை ஒன்று காணப்படுகிறது. பெலிஸ் (Belize) நாட்டு கடற் கரையில் இருந்து அறுபது மைல் தொலைவில், அங்குள்ள கலங்கரை விளக்க பார்க்கடல் பகுதியின் நட்ட நடுவில் உள்ள பவழப்பாறையில் இந்த துளை அமைந்துள்ளது.
இந்த நீலத்துளையின் குறுக்களவு 318 மீட்டர் (1,043 அடி). ஆழம் 124 மீட்டர் (407 அடி). கடைசி பனியுகத்தின் (Ice Age) இறுதிக்கட்டத்தில், ஏறத்தாழ 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கடல்நீர் மட்டம் மிகவும் தாழ்ந்திருந்த காலத்தில், இந்த நீலத்துளை உருவாகியதாகக் கருதப்படுகிறது.  
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல்ஆய்வாளரான ஜாக்கிவ் குஸ்தோ (Jacques Cousteau), 70களில், இந்த நீலத்துளையின் அருமை பெருமைகளை வெளி யுலகுக்குக் கொணர்ந்தார்.
களவா மீன்
பெலிஸ் நீலத்துளைக்கு அப்படி என்னதான் சிறப்பு? இந்த நீலத் துளைக்குள் முக்குளித்தால் 200 அடி வரை கடல்நீர் தெளிவாகக் கண்ணாடி போலிருக்கும். அதன் பின் மெல்ல மெல்ல ஒளி மங்கும். பனிக்குகைகளின் கூரை களில் பனி படர்ந்து தொங்கி அப்படியே உறைந்து பனிச்சிற்பம் போல மாறி நிற்கும் அல்லவா? அதுபோல பெலிஸ் நீலத்துளையின் உட்புறம், தூண் போன்ற நீளமான கல் துளிப் படிவங்கள், கசிதுளிவீழ்ச்சிகளைப் பார்க்கலாம். அவற்றில் சில 40 அடி நீளமானவை.
பெலிஸ் நீலத்துளைக்குள் கடலுயிர்களுக்கும் பஞ்சமில்லை. பவழப்பாறை பகுதிகளில் சுற்றித்திரியும் பலவகை சுறாக்கள், பெரிய பெரிய களவா மீன்கள் (Groupers), பார்க்கடலுக்கே உரித்தான பலவகை வண்ண மீன்கள் இங்கே வாழ்கின்றன.
Neon goby
மான்கொம்பு பவழம் எனப்படும் Elk horn பவழச்செடி, மனிதமூளை போன்ற Brain பவழச்செடி போன்றவையும் இங்கு செழித்து வளர்கின்றன. நீலத்துளையின் அடிப்புறத்தில் சிறுமணற்குன்றுகளும், கல்படுக்கைகளும் உள்ளன. யுனெஸ் கோவின், உலக பாரம்பரிய களங் களுக்கான பட்டியலில், பெலிஸ் நீலத் துளையும் இடம்பிடித்துள்ளது.

Friday, 16 November 2018


குழிமீன் (Stonefish) (Synanceia)

உலகிலேயே மிக நஞ்சுள்ள ஒரு மீன் எது என்றால் அது குழிமீன் என்று அழைக்கப் படும் சாமீன்தான் (Stonefish). ஆங்கிலத்தில் இது கல்மீன் (Stonefish) என அழைக்கப் படுகிறதுஇதுகூட இந்த மீனுக்கு  மிக பொருத்தமான பெயர்தான்.
குழிமீன் அல்லது கல்மீன், கடலடியில் பாறைகளின் அருகே தனிமீனாக காணப் படும். பார்வைக்கு அச்சுஅசலாக ஒரு கல் போலவோ பாறைத் துண்டு போலவோ இது காட்சி தந்து, கண்களை ஏமாற்றும்

குழிமீனின் உடல் முழுவதும் தடிப்புகள், தசைத்துருத்தல்கள் இருப்பதால் பார்வைக்கு இது கல்போலவே தெரியும். போதாக்குறைக்கு, பழுப்பும் சாம்பலும் கலந்த வண்ணத்தில், உடல் முழுக்க சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறத்திட்டுகளுடன் குழிமீன் இருப்பதால் கல் போல நடிப்பது இந்த மீனுக்கு மிகவும் எளிது
பாதி உடல் மணலில் புதைந்த நிலையில், புழுதிபடிந்த ஒரு கல்சிற்பம் போல குழிமீன் காட்சி தரும். சில குழிமீன்கள் மீது பாசி கூட வளர் வதுண்டு. ஆகவே, கைதேர்ந்த முக்குளிப்பு வீரர்களால் கூட இந்த மீனை கடலடியில் கண்டுபிடித்து விட முடியாது. இரை மீன்களாலும் குழிமீனை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த மீனின் உருமறைப்பு (Camouflage) இருக்கும்.
கதிர்த்தூவிகள் கொண்ட நச்சுமீனான குழிமீன், அருகில் வரும் சிறு மீன்களை இரையாக்கி உண்ணக் கூடியது. தன் வாய்க்குள் அடங்கக் கூடிய சிறுமீன்கள் வரும் வரை குழிமீன் பொறுமையாகக் காத்திருக்கும். தன் உடல் எவ்வளவு நீளம் இருக்கிறதோ அந்த அளவு தொலைவுக்குள் இரை வந்ததும், திடீரென உயிர்பெற்று மின்னல் வேகத்தில் இது இரைமீனைத் தாக்கும். சின்ன வாயசைவு மூலம் வாயை மேல் நோக்கி நகர்த்தி கண்ணிமைக்கும் நேரத்தில் இது இரையை விழுங்கும். பலம் வாய்ந்த வாய் கொண்டும், தாடைகளைக் கொண்டும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தி இரையை இது உறிஞ்சி முழுதாக விழுங்கி விடும்.
குழிமீனின் தாக்குதல் வேகம் வியக்க வைக்கக் கூடியது. 0.015 நொடி வேகத்தில் இது இரையைப் பிடிக்கக் கூடியது (!)
குழிமீனால் வேகமாக நீந்த முடியாது என்ற நிலையில், பல மணிநேரம் வரை இது இரைக்காக காத்திருக்கும். இரை தப்பிச் செல்ல முயன்றால் சட்டென வேகம் எடுத்து நீந்தி இரையை இது விழுங்கும். மேல்நோக்கி எகிறியும், தலைகீழாகப் பாய்ந்தும் புழுதிபறக்க குழிமீன் இரைபிடிக்கும்.
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்பதைப்போல மறைந்திருந்து தாக்கும் மர்ம மீன் இது. தன்னைவிட பெரிய மீன்களை குழிமீன் கண்டு கொள்ளாது.
குழிமீன் உலகிலேயே மிக அதிக நஞ்சுள்ள மீன் என முன்பே கூறிவிட்டோம். இந்த மீனின் முதுகுத்தூவியில் 13 கூரிய, வலுவான முட்கள் உள்ளன. தடித்த தோலு றைக்குள் இந்த முட்கள் இருக்கும். ஒவ்வொரு முள்ளின் அடியிலும் ஒன்று அல்லது இரண்டு நஞ்சுப்பைகள் இருக்கும்.
குழிமீனை யாராவது சீண்டினால் உடனே தனது முதுகு முட்களை அது உயர்த்தும். ஆனால், குழிமீன் தனது நிலையை (Position) குழிமீன் மாற்றிக் கொள்ளாது. இரையை பாய்ந்து பிடிக்கும் போது மட்டுமே தனது நிலையை மாற்றும்.
எதிரிகள் யாராவது மிரட்டினால், அல்லது தெரியாமல் யாராவது குழி மீனை மிதித்துவிட்டால், குழிமீனின் முட்கள் எதிரியின் மீது பாய்ந்து தைக்கும். அப்போது நஞ்சுப் பைகள் நசுங்கி, அதில் உள்ள நஞ்சு, முள்கள் உள்வழியாக மேலேறி, எதிரியின் உடலுக்குள் பாய்ந்துவிடும்.
குழிமீன் இரையைப் பிடிக்க ஒருபோதும் அதன் நஞ்சைப் பயன்படுத்தாது. தன்னை இரையாக்க வரும் சுறா, திருக்கை மீன்களிடம் இருந்து தப்பவே முட்களையும், நஞ்சையும் குழிமீன் பயன்படுத்துகிறது. குழிமீனின் நஞ்சு மிகவும் கொடியது. சிலவேளைகளில் கடலோரம் நீரில் இறங்கி நடக்கும் மனிதர்கள் அணிந்திருக்கும் காலணியையும் தாண்டி குழிமீனின் முட்கள் மனிதர்களின் கால்களை துளையிடக் கூடியவை.
குழிமீனின் நஞ்சு கொடிய வேதனையைத் தருவதுடன், தசைத்திசுக்களை செயலிழக்க வைத்து, மூச்சுவிடுவதில் சிக்கலை ஏற்படுத்தி, இதயத்தை இயங்காமல் செய்யக் கூடியது. குழிமீனின் முட்களால் குத்துப்பட்டவருக்கு வெந்நீர் மூலம் முதலுதவி அளித்தால் வலி சற்று நீங்கும். ஆனாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை. இல்லாவிடில் பாதிக்கப்பட்டவர் ஒரு மணிநேரத்தில் உயிரிழக்க வாய்ப்புள்ளது.
குழிமீனின் முட்கள் முறியாது என்று ஒரு கருத்தும், முள்ளில் உள்ள ஒரு சிறிய கொளுக்கி போன்ற அமைப்பு குத்துப்பட்டவரின் உடலில் தங்கும் எனவும் இருவேறு கருத்துகள் உள்ளன.
சரி, குழிமீனின் தாக்குதலால் ஏற்படும் வலி எப்படி இருக்கும்? அதைப்பற்றி வருணிக்கிறார் ஒருவர். ‘பெரிய சுத்தியல் ஒன்றால் காலில் ஓங்கி அடித்து, உடனே அரம் கொண்டு மாறி மாறி காலில் பலமாகத் தேய்த்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும்‘ என்கிறார்  முள்குத்தை அனுபவித்த ஒருவர். குழிமீன் தாக்குதலுக்குப்பின் நாலைந்து நாள்கள் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றாலும்கூட அதன் பிறகும் நீண்டகாலத்துக்கு வலி நீடிக்கும்.
குழிமீன்களில் ஐந்து வகைகள் உள்ளன. சில குழிமீன்கள் நஞ்சற்றவை. ஓரடி முதல் ஓரடிக்கும் சற்று கூடுதலாக இவை வளரக்கூடியவை. சிறிய கண்களும், இரண்டு கிலோ வரை எடையும் கொண்ட குழிமீன் இனங்கள், ஆஸ்திரேலியாவின் வடகடலிலும், இந்திய பசிபிக் கடல்களிலும் காணப் படுகின்றன. ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இவை உயிர்வாழும்.
கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை செய்தான்என்ற பாட்டு குழிமீனைப் பொறுத்தவரை கொஞ்சம் கூட பொருத்தமில்லாத பாட்டு.
அதேவேளையில், ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்என்ற பழமொழி வேண்டுமானால் குழி மீனுக்கு சற்றுப் பொருந்தலாம். ஆனால், இந்தப் பழமொழியில் நாய் என்பதற்குப் பதில் மீன் என்ற சொல்லை நாம் சேர்க்க வேண்டும்.
குழிமீன், தண்ணீருக்கு வெளியே ஒரு நாள் (24 மணிநேரம்) வரை உயிர் வாழக் கூடியது என்பது இந்த மீனைப்பற்றிய சிறப்புத் தகவல்.

Sunday, 11 November 2018


அறிய அரிய தகவல்கள்
    கியு வி யே திமிங்கிலம்

 1.   கியு-வி-யே (Cuvier) திமிங்கிலம். பிரான்ஸ் நாட்டு இயற்கை ஆய்வாளரின் Cuvier-ன் பெயரால் இந்த வாத்து மூக்குத் திமிங்கிலம் இப்படி அழைக்கப்படுகிறது. ‘கியு-வி-யேஎன்பது‘தான் இந்த திமிங்கிலத்தின் பெயருக் கான சரியான உச்சரிப்பு. உலகில் உயிர் வாழும் பாலூட்டிகளில் மிக அதிக ஆழத்தில் முக்குளிக்கக் கூடிய திமிங்கிலம் இது. பத்தாயிரம் அடி (2,992 மீட்டர்) ஆழத்துக்கு கடலில் இது முக்குளித்து அங்கே 2 மணி நேரம் வரை தங்கியிருக்கும். மூச்செடுக்க மீண்டும் கடல் மட்டத்துக்கு வர சில நிமிடநேரம் இதற்கு போதும்.

    2.       முரல்…..ஊசிவாய் கொண்ட முரல் வகை மீன்கள் ஓசை மற்றும் வெளிச்சத்தைக் கண்டால் அதை நோக்கி பாயக் கூடியவை. எனவே சில ஆசிய நாடுகளில் மீனவர்கள் அவர்களது மீன்பிடி படகில், வாழைத்தண்டில் படல்வேலி அமைத்து, அதன் பின்புறம் இருந்து ஓசை எழுப்பி இந்த மீனைப் பிடிப்பார்கள். முரல் மீனை சமைக்கும் போது அதன் எலும்புகள் பச்சை கலந்த நீலநிறமாகத் தெரியும். ஜப்பானியர்கள் முரல் மீனை பச்சையாகக் கூட உண்பார்கள். முரல் மீன், ‘ஏழைகளின் கொப்புரக்குல்லா மீன்‘ (Marlin) என அழைக்கப்படுகிறது.
    3. கிளிஞ்சான் (Parrtofish). வாழ்நாளில் பலமுறை நிறம் மாறும். பாலினமும் மாறும்.
    4.  வண்ணாத்திமீன் (Butterfly fish). இரவில் பார் இடுக்குகளில் ஒளியும். அப்போது வேறுவிதமான வண்ணங்களைக் காட்டும்.
    5. பெரும்பாரை மீன் (Giant Trevally). பசிபிக் கடலின் தீவு நாடான ஹவாயின் பண்பாட்டில் இந்த மீன் ஒன்றரக் கலந்தது. ஆண்மை மற்றும் வீரத்தின் அடையாளமாகவும், தெய்வத்தன்மை பொருந்திய தாகவும் பெரும்பாரை கருதப்படுகிறது. பெண்கள் இந்த மீனை உண்ண மாட்டார்கள்.
    6.  அய்லஸ், பறளா என்றெல்லாம் தமிழில் அழைக்கப்படும் டால்பின் மீன் (Dolphin fish), இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டின் சான்டோரினி பகுதி சுவரோவியங்களில் இடம்பெற்ற பெருமைக்குரியது.

Friday, 9 November 2018


கருங்குழவி ஓங்கல் (Killer Whale)

சென்னை உள்பட வடதமிழக கடலோரங்களில் டால்பின் (Dolphin) எனப்படும் ஓங்கலுக்கு, குழவி வேடன் என்றொரு பெயர் உண்டு. ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கப் பயன்படும் குழவியைப் பார்த்திருப்பீர்கள்தானே? அந்த குழவியைப் போலவே உருண்டு திரண்ட உடலமைப்புடன், இதர மீன்களை வேட்டை யாடுவதால் குழவி வேடன் என்ற பெயர் ஓங்கலுக்குப் பொருத்தமான பெயர்தான்.
ஓங்கல்களில் மொத்தம் 35 இனங்கள் தேறும். அந்த 35 இனங்களில் மிகப் பெரிய ஓங்கல் இனம் என்று பார்த்தால் அது கருங்குழவி எனப்படும் கில்லர் வேல் ஓங்கல்தான். பெருங்கடல்களின் மிகப்பெரிய வேட்டைக்கார பாலூட்டி இதுதான். உலகில் தற்போது உயிர்வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய அளவு மூளையுள்ள இரண்டாவது உயிரும் கருங்குழவி ஓங்கல்தான்.
கருங்குழவி ஓங்கலின் ஆங்கிலப் பெயரான கில்லர் வேல் என்ற சொல் இதை திமிங்கிலம் என்று குறிப்பிடுகிறது. ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல கருங்குழவி திமிங்கிலம் அல்ல. இது ஓங்கல் இனத்தைச் சேர்ந்த பாலூட்டி.  பல்லுள்ள பெரிய வகை ஓங்கலான கருங்குழவி, பார்க்க திமிங்கிலம் போன்று பெரிதாக இருப்பதால் இது ‘கொல்லும் திமிங்கிலம்‘ எனப் பெயர் எடுத்துள்ளது.
இன்னொருபுறம் இந்தப் பெயரின் பின்னால் வேறொரு சுவையான தகவல் உள்ளது. கருங்குழவி ஓங்கல், பலீன் வகையைச் சேர்ந்த திமிங்கிலங்களை யும் வேட்டையாடக் கூடியது. ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் (Basque) இன திமிங்கில வேட்டைக்காரர்கள், இது திமிங்கில வேட்டையாடுவதைப் பார்த்து, அவர்கள் மொழியில் ‘அசசின் பாலனோ‘ (Asesin balleno) (திமிங்கிலக் கொல்லி) என்று பெயரிட, ‘வேல் கில்லர்‘ என பொருள்படும் இந்தப் பெயர் நாளடைவில் தலைகீழாக மாறி ‘கில்லர் வேல்‘ என்றாகி விட்டது.
கருங்குழவி ஓங்கலின் இன்னொரு பெயர் ஓர்கா (Orca). இந்தப் பெயரும் ஒரு வியப்பூட்டும் பெயர். இது தீமை செய்பவர்களைத் தண்டிக்கும், பாதாள உலகத்தில் வாழும் ரோமானியக் கடவுள் ஒருவரின் பெயர்! பீப்பாய் வடிவத்தில் இருப்பதால் ஓர்கா என்ற பெயர் வந்ததாகவும் கூட சொல்வார்கள்.
கருங்குழவி ஓங்கல் மிளிரும் கருப்பு வண்ண உடலில் வெள்ளை வடிவங்கள் வரைந்தது போலத் தோற்றம் தரும். மிக அழகான இந்த ஓங்கல் இனம் அழகுடன் ஆபத்தும் நிறைந்தது.
கருங்குழவி ஓங்கல்களில் ஆண், 6 முதல் 8 மீட்டர் நீளம் வரை இருக்கும். (20 முதல் 26 அடி). ஏன் 32 அடி நீள ஓங்கல்கூட உண்டு. ஆண் கருங்குழவி ஓங்கல்களின் எடை 3,600 முதல் 5,400 கிலோ எடை. பெண் ஓங்கல்கள் 5 முதல் 7 மீட்டர் நீளமும், ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 700 கிலோ எடையும் கொண்டவை.
கருங்குழவி ஓங்கல்களில் சில, சிறிய பள்ளி பேருந்து அளவுக்குப் பெரியவை. பிறந்த குட்டிகள் பிறக்கும்போதே மூன்று மனிதர்களின் மொத்த எடையைக் கொண்டவை.
கருங்குழவி ஓங்கலின் வாழ்நாள் 29 ஆண்டுகள். ஆனால் மீன்காட்சியகம் ஒன்றில் ஒரு கருங்குழவி ஓங்கல், 109 வயது வரை வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறது.
கடலின் மிகப்பெரிய வேட்டை விலங்கு கருங்குழவி ஓங்கல்தான். கூட்டமாக வேட்டையாடும் கருங்குழவி ஓங்கல்கள், சுறாக்களில் மிகப்பெரிய சுறாவான, பெருஞ்சுறா என்படும் பெருவஞ்சுறாவைக் கூட (Great White Shark) உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். (இதுபற்றிய பதிவு பெருஞ்சுறா என்ற தலைப்பில் நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு.)
திமிங்கிலங்களும் கூட, கருங்குழவி ஓங்கல்களிடம் இருந்து தப்ப முடியாது. ஆவுளியா, திருக்கை, ஆமை, கணவாய், கடற்பறவைகள் என 140 வகை கடல் உயிர்களை கருங்குழவி ஓங்கல் இரையாக்கக் கூடியது.
கருங்குழவி ஓங்கல் கூட்டத்தை பாட் (Pod) என்பார்கள். இதில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒவ்வொரு வகையான உணவுப்பழக்கம் உண்டு. கருங்குழவி ஓங்கல் கூட்டம், தாய்வழி சமூகமாகச் செயல்படும். ஒரு கூட்டத்தில் ஐம்பது ஓங்கல்கள் வரை இருக்கும். தனது வாழ்நாள் முழுவதையும் ஒரே கூட்டத்திலேயே இவை கழிக்கும். கட்சி மாறாது.
குடும்ப பாடல் போல ஒவ்வொரு கூட்டத்துக்கும் என்று குறிப்பிட்ட தனித் தனி குரலொலி உண்டு. கடலில் பிரிந்து திரியும் கூட்டம் ஒன்று இந்த குரலொலி மூலம் மீண்டும் ஒன்றுசேர்ந்து கொள்ளும். இந்த குறிப்பிட்ட குரலொலி, தலைமுறை தலைமுறையாக, பாரம்பரியமாகத் தொடரும். புதிதாகப் பிறந்த குட்டி, தாயிடம் இருந்து இந்த தனித்துவமான குரலொலி யைக் கற்றுக் கொள்ளும். . தன் கூட்டத்துடன் தகவல் பரிமாற கருங்குழவி ஓங்கல் சீழ்க்கை (விசில்) உள்பட பல்வேறு ஒலிகளைக் கையாளும். தாடைகளை ஒன்றுடன் ஒன்று தட்டியும் ஓசை எழுப்பும்.
கருங்குழவி ஓங்கல்களின் ஆண்கள், வளர்ந்து பெரிதான பிறகும்கூட ‘அம்மா பிள்ளைகளாக‘ தாயுடன் நெருக்கமாக வாழும். கூட்டமாக திட்டமிட்டு இவை இரையை வேட்டையாடும். காயமடைந்த, நோயுற்ற, முதிர்ந்த ஓங்கல்களை கூட்டத்தின் மற்ற ஓங்கல்கள் உணவூட்டி காப்பாற்றும்.
கருங்குழவி ஓங்கல்கள், கருங்கடல், பால்டிக் கடல், ஆர்ட்டிக் கடலின் ஒரு சில பகுதிகள் தவிர, உலகக் கடல்கள் அனைத்திலும் காணப் படுகின்றன. திமிங்கிலங்களைப் போல கருங்குழவி ஓங்கலின் தோலுக்கு அடியிலும் பிளப்பர் (Blubber) எனப்படும் கொழுப்புப் படலம் உண்டு. இதனால் குளிர்க்கடல்களில் கூட கம்பளிக் கோட்டு போட்டது போல இதனால் குளிர்தாங்க முடிகிறது. மேலும், இரையைத் தின்ற உடனே அதை உடல்சக்தியாக மாற்றிவிடும் ஆற்றல் இந்த வகை ஓங்கலுக்கு உண்டு. அதன்மூலம் ஏற்படும் உடல் வெப்பத்தால் குளிரைத் தாங்க முடிகிறது.
பிறஇன ஓங்கல்களைப் போலவே கருங்குழவி ஓங்கலாலும் கடலில் முழுத்தூக்கம் தூங்க முடியாது. அவ்வப்போது கடல்மட்டத்துக்கு வந்து மூச்செடுக்க வேண்டியிருப்பதால் ஓங்கல்கள் அரைத்தூக்கம் மட்டுமே தூங்கும். அந்த வகையில், கருங்குழவி ஓங்கலும் ஒரு கண்ணைத் திறந்து கொண்டு லேசான பூனைத்தூக்கம் போடும். அப்போது ஓங்கலின் பாதி மூளை மட்டுமே வேலை செய்யும். ஓங்கல் இடது கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கினால், அதன் வலதுபக்க மூளை வேலை செய்கிறது என்று பொருள்.
கருங்குழவி ஓங்கல்களின் முதுகுத் தூவி ஆறடி உயரம் (!) கொண்டது. முதுகுத்தூவி எலும்பற்றது. அடர்த்தியான இணைப்புத் திசுக்களால் ஆனது. ஆண் ஓங்கல்களின் தூவி செங்குத்தாக நேர் எழுந்து நிமிர்ந்து நிற்கும். பெண் ஓங்கலின் தூவி, சற்று சிறியதாக அரிவாள் போல வளைந் திருக்கும். இந்த நீண்ட முதுகுத்தூவி மூலம் மணிக்கு 29 மைல் வேகத்தில் கருங்குழவி ஓங்கலால் வேகமாக நீந்த முடியும். சோர்வும், மனஅழுத்தமும் ஏற்பட்டால் இந்த முதுகுத்தூவி, சற்று தளர்ந்து, குலைந்து காணப்படும்.
மணிக்கு 29 முதல் 30 மைல்வேகத்தில் நீந்துவதால் கடலில் எந்த ஓர் உயிரையும் கருங்குழவி ஓங்கலால் விரட்டிப்பிடிக்க முடியும். துள்ளிப் பாயவும், பாய்ந்த நிலையில் அப்படியே திரும்பவும் இந்தவகை ஓங்கலால் முடியும். கூம்பு வடிவிலான 50 கூர்ப்பற்களால், பெரிய சுறாவைக் கூட ஒரே கடியில் இரண்டாக்க கருங்குழவி ஓங்கலால் முடியும். கடலில், பாலூட்டிகளை வேட்டையாடி உண்ணும், ஒரே ஓங்கலினம் இதுதான். பிற இன ஓங்கல்களையும் கருங்குழவி ஓங்கல் கொன்று தின்னக் கூடியது.
கருங்குழவி ஓங்கலுக்கு முகர்திறன் இல்லை. கண்பார்வை மற்றும் ஒலிமூலம் பார்க்கும் ஈக்கோ லொக்கேஷன் திறமை மூலம் இது இயங்கு கிறது. இதன் கண்பார்வை நாயின் பார்வையை விட கூர்மையானது. இதன் ஈக்கோ லொக்கேஷன் திறமை வவ்வாலை விட அதிகமானது.
கருங்குழவி ஓங்கல் அரிதாக மனிதர்களைத் தாக்கும். கடலில் மனிதர்கள் உள்பட எந்த ஓர் உயிருக்கும் கருங்குழவி ஓங்கல் அஞ்சாது.  மீன் காட்சியகங்களில் இவை அதிக அளவில் வளர்க்கப்பட்டு வித்தை காட்டப் பயன் படுத்தப்படுகின்றன. அறிவுக்கூர்மை மிகுந்த கருங்குழவி ஓங்கல்கள், எளிதாக எதையும் கற்றுக்கொள்ளும் திறமை கொண்டவை. மனிதர் ஒருவரை முதுகில் சுமந்து கொண்டு குறிப்பிட்ட உயரத்துக்கு கருங்குழவி ஓங்கலால் துள்ள முடியும்.
முன்பே கூறியது போல, கருங்குழவி ஓங்கல் கூட்டம், கடலில் பெருஞ் சுறாவைக் கூட பிரித்து மேய்ந்துவிடும். கடலில் இந்த மாபெரும் பாலூட்டிக்கு இயற்கையான எதிரி என்று யாரும் இல்லை. கருங்குழவி ஓங்கல்கள் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போனால்தான் உண்டு. மற்றபடி இவை நீண்டகாலம் இனிதே வாழக்கூடியவை.

Sunday, 4 November 2018


புல் உண்ணும் சுறா!



கொம்பன் சுறாவை நமக்குத் தெரியும். சிலர் Hammerhead Shark என்ற அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழ்ப்‘படுத்தி‘, ‘சுத்தித் தலைச் சுறா‘ என்று அதைச் சொல்வார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.
கொம்பன் சுறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வகை சுறா ‘பில்லைச் சுறா‘. இதை திரவிமூக்கு சுறா, ஆளுபிடியான் என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் Bonnethead Shark.
சுறாக்கள் என்றாலே ஊன் உண்ணிகள், இறைச்சித் தின்னிகள் என்றுதான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விந்தையிலும் விந்தை யாக பில்லைச்சுறாக்கள் கடற்புற்களையும் உண்ணுகின்றன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. என்னது? சுறாவில் கூட சைவ சுறா உண்டா என்று உலகமே வியந்து போய் நிற்கிறது.
பில்லைச்சுறாக்கள், கடலோர கோரைப்புல்வெளியில் திரிபவை. வளர்ந்த ஆண் சுறா ஓரடி முதல் மூன்றடி நீளம் இருக்கலாம். பெண் சுறா ஐந்தடி வரை வளரக்கூடியது. பில்லைச் சுறாவின் நிறம், பசுஞ்சாம்பல் முதல் கரும்பழுப்பு  வரை. சுறாவின் அடிப்பகுதி வெளிறிய நிறம் கொண்டது. எடை 5.9 கிலோ.
பில்லைச் சுறாவின் தலை, கொம்பன் சுறாவின் தலையைப் போல நீண்டு நிற்காமல், குறுகிய தோற்றம் கொண்டது. தலையின் முன்பகுதி வட்ட மாகத் தோற்றம் தரும். இதனால் Shovel Head Shark என்ற பெயரும் பில்லைச் சுறாவுக்கு உண்டு. கொம்பன் சுறாவின் மூச்சுத்துளை அதன் தலையில் நீளமான ஒரு பள்ளத்தில் காடிவெட்டாக (Groove) அமைந்திருக் கும். ஆனால், பில்லைச் சுறாவுக்கு அப்படி இருக்காது. பில்லைச் சுறாவின் கண்களின் அருகே மூச்சுத்துளைகள் அமைந்திருக்கும்.
பில்லைச்சுறா முழுக்க கடலோர கோரைப்புல் வெளியில் சுற்றித்திரிந்து கண்ணில் படும் நண்டு, இறால், சிறுமீன், கணவாய், மட்டி (Clam) போன்ற வற்றை உணவாக்கும். வரிப்புலியன் உள்பட சிலவகை சுறாக்களுக்கு பில்லைச் சுறாவும் உணவாகும். அதிக பற்கள் நிறைந்த சுறாவாக இருந்தாலும் கூட பில்லைச்சுறா பயந்த குணம் கொண்டது. மனிதர் களுக்கு ஆபத்தற்றது. எந்தத் தீங்கும் செய்யாதது.
இந்த பில்லைச்சுறாதான் புல் உண்ணு கிறது என்ற புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்த சுறாவின் 56 விழுக்காடு உணவே கடற்புற்கள்தான் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பாரம் பரிய உணவான இறைச்சியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு பில்லைச்சுறா எப்படி ஓர் அனைத்துண்ணியாக மாறி யது என்று யாருக்கும் புரியவில்லை. அனைவரையும் இது ஆச்சரியப் படுத்தி வருகிறது.
கடல் ஆமைகளில் பச்சை ஆமைகள் புல்மேய்பவை. சில வகை கடல் ஆமைகளின் குட்டிகள் ஆரம்பத்தில் அனைத்துண்ணிகளாக இருந்து விட்டு, பிறகு முழுக்க முழுக்க புல்மேயும் தாவர உண்ணிகளாக மாறும். ஆனால், பில்லைச் சுறா, எப்படி சுறா இனத்தில் பிறந்து விட்டு அனைத்துண்ணி யாக மாறியது என்று அறிவியலாளர்களுக்கே புரியவில்லை.
பில்லைச்சுறாக்களின் வயிற்றுக் குடலை அறிவியலாளர்கள் ஆராய்ந்த போது உள்ளே புற்கள் இருப்பது தெரியவந்தது. பில்லைச்சுறா, புற்களுக்கு இடையே நண்டு, இறால், சிறுமீன் போன்ற இரைகளை விரட்டும்போது தவறுதலாக ஒரு வாய் புல்லை கவ்வியிருக்கலாம், அது வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது.
ஆனால், கடற்புற்கள், பில்லைச்சுறாவின் 56 விழுக்காடு உணவு என்பதும், இளம் சுறாக்கள்தான் அதிக அளவில் புல்மேய்கின்றன என்பதும் இப்போது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.
இறைச்சி உணவை சுறாவின் வயிறு செரிப்பது போல புல்லின் சத்துக் களையும் பில்லைச்சுறாவின் வயிறு செரித்துக் கொள்கிறது. சுறாவின் குடலில் உள்ள Microbiome இதற்கு உதவுகிறது.
அருங்காட்சியகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் ஒரு கணவாயின் மீது 90 விழுக்காடு கடற்புல்லைச் சுற்றி அதை பில்லைச்சுறாவுக்கு கொடுத்த போது சுறா அதை ஆவலுடன் தின்றது. சுறாவின் கழிவை சிறிய கண்ணிகள் கொண்ட நுண்வலையால் சேகரித்து ஆராய்ந்தபோது புல்லை சவைத்து, அதில் உள்ள மாச்சத்து (Starch), நொதி (Enzyme) போன்றவற்றை சுறா உட்கொண்டு தனதாக்கி இருப்பது தெரியவந்தது. தரையில் வாழும் பல்லியின் புல்செரிப்புத் திறன் 30 விழுக்காடுதான் என்ற நிலையில், பில்லைச்சுறாவின் புல்செரிப்புத்திறன் 50 விழுக்காடு என்ற அதிசயத் தகவலும் தெரிய வந்தது. 
இந்த ஆய்வில் இன்னும் ஒரு படி மேலே போய், ஓர் மீன் அருங்காட்சியகத்தில் கடற்புற்களை வளர்ந்தார்கள். சோடியம் பைகார் பனேட்டுடன், குறிப்பிட்ட ஒரு கார்பன் ஐசோடோப்பையும் நீரில் கரைய விட்டார்கள். இவற்றை கடற்புற்கள் உள்வாங்கின. இதன்மூலம் ஒரு வித்தியாசமான வேதியியல் அடையாளத்தை அவை பெற்றன.
இப்போது அதே தொட்டிக்குள் 5 பில்லைச்சுறாக்கள் விடப்பட்டன. மூன்று வாரங்கள் கழித்து அவற்றின் உடலில், ரத்தத்தில் அந்த குறிப்பிட்ட ஐசோ டோப்புக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் பில்லைச் சுறாக்கள் புல் உண்ணுகின்றன என்பது ஐயத்துக்கு இடமின்றி எண்பிக்கப்பட்டது. புல்லின் சத்துக்கள் சுறாவின் ஊனில் கலந்து, அதன்மூலம் சுறா  வளர்கிறது என்பதும் அதன் எடை கூடுகிறது என்பதும் நூறு விழுக்காடு உறுதியாகி விட்டது.
கொம்பன் சுறாக்கள் அழிந்து வரும் அரிய இனமாகிவிட்ட நிலையில், அதன் உறவுக்கார மீனான பில்லைச்சுறா நல்லவேளை அழியும் ஆபத்தில் இல்லை. புல் உண்ணும் பழக்கம் காரணமாக பில்லைச்சுறா நெடுங்கடலில் நீடுவாழும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதே வேளையில் கடல்புல்வெளிகள் நாளுக்கு நாள் அழிந்து வருவதால் அவர்கள் கவலை கொள்ளவும் செய்கிறார்கள்.