சிங்கி இறால்
(Spiny Lobster)
‘நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வளர்க‘, என்று வாழ்த்துவார்களே.
இதுபோன்ற வாழ்த்துக்கு மிகப் பொருத்தமான உயிர் சிங்கி இறால்தான் (Spiny Lobster). அது
ஏன் என்பதை பிறகு சொல்கிறேன்.
இறால் இனத்தில் பற்ப ல வகைகள் இருப்பது தெரிந்ததே. இதில் Krill என்பது
கூனிப்பொடி யையும், Shrimp என்பது கூனி இறாலையும், Prawn என்பது இறாலையும், Lobster
என்பது சிங்கி இறாலையும் குறிக்கும்.
இறால்களில் பெரிய இனமான சிங்கி இறால்களில், கிளிச்சிங்கி,
தாழைச் சிங்கி, மணிச் சிங்கி, தூள்பட்டைச் சிங்கி, மட்டைச் சிங்கி, பச்சை நிறச் சிங்கி,
ராஜா ராணி சிங்கி என ஏறத்தாழ 60 வகைகள் உள்ளன.
சிங்கி இறால்கள் கடலடியில் சகதிப் பகுதியிலும், பார்அடர்ந்த கடற்
கோரைகள் மிகுந்த பகுதிகளிலும் வசிக்கும். சிங்கி இறாலின் உடல் 19 பாகங்களால் ஆனது.
ஒவ்வொரு பாகத்தையும் கனத்த தோடு மூடி யிருக்கும். ஒவ்வொரு பாகமும் இணையும் இடத்தில்
உள்ள தோல் மெல்லியது. இதன் மூலம் சிங்கி இறாலால் வளையவும், நெளியவும் முடிகிறது. நண்டைப்
போலவே சிங்கி இறாலும் அதன் வெளி உடற்கூட்டை அவ்வப்போது கழற்றக் கூடியது. உடற் கூட்டை
கழற்றும் ஒவ்வொரு முறையும் சிங்கி இறால் 20 விழுக்காடு வளரும்.
சிங்கி இறாலின் முதன்மை அடையாளமே ஆண்டெனா போன்ற அதன் நீண்ட இரு உணர்
கொம்புகள்தான். சாட்டை போல நீளமான இந்த உணர் கொம்புகள் சிங்கி இறாலின் மிகப்பெரிய ஆயுதம்.
சிங்கி இறாலின் இந்த உணர்கொம்புகள் சில வேளைகளில் சிங்கி இறாலின் நீளத்தை விட அதிகமாக
இருக்கும்.
இவை தவிர, இரு சிறிய உணர் கொம்புகளும் சிங்கி இறாலுக்கு உண்டு. கடலில்
அசைவுகளை கண்டுகொள்ளவும், கடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளவும்
இந்த சிற்றுணர் கொம்புகள் சிங்கி இறாலுக்குப்
பயன்படுகின்றன.
சிங்கி இறால், வெப்பப் பகுதி கடல்களில் வாழக்கூடிய உயிர். வெப்பம்
அதிகரிக்கும் போது சிங்கி இறால் கரையை நோக்கி வரும். குளிர் மிகுந்தால், ஆழ்கடல் நோக்கி
இது நகரும். கடலில் குளிரும், கொந்தளிப்பும், அதிகரித்தால், சிங்கி இறால்கள் ஒன்றன்பின்
ஒன்றாக ஒரே வரிசையில் ஆழ்கடல் நோக்கி, கடலடியில் நகர்ந்து ஊர்வலமாகச் செல்லும். இந்த
ஒற்றை வரிசையை ‘கியூ‘ என ஆங்கிலத்தில் சொல் வார்கள்.
சிங்கி இறால் இரவில் நடமாடும் உயிர். மீன், நண்டு, மட்டி, சிப்பி,
கடல் நத்தை, மூரை (Urchin) போன்றவை இதன் உணவு. பசி அதிகமாகி இரை கிடைக்காவிட்டால் சிறிய
சிங்கி இறால்களை, பெரிய சிங்கி இறால்கள் தின்னும்.
சுறா, திருக்கை, கணவாய், பன்னா (Cod) போன்ற மீன்கள் சிங்கி இறாலின்
முதன்மை எதிரிகள். இதில் வரிக்கொடுவா மீன், சிறிய சிங்கி இறால்களை அப்படியே உயிருடன்
இரையாக விழுங்கக் கூடியது.
சிங்கி இறால் பின்பக்கமாகவும் நீந்த வல்லது. எதிரியைக் கண்டால்,
வாலை அடித்து பின்பக்க மாகவும் இது நீந்தித் தப்பிக்கப் பார்க்கும். உடல் முழுவதும்
உள்ள முன்னோக்கிய முட்கள் சிங்கி இறாலுக்கு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பைத் தருகின்றன.
எதிரி நெருங்கினால், தனது நீளமான உணர்கொம்புகளை உடலில் தேய்த்து, ‘கிரீச்‘ என்ற சத்தத்தை
உண்டாக்கி, சிங்கி இறால் எதிரியை பயமுறுத்தும். உணர்கொம்புகளை சாட்டை போல பயன்படுத்தி
எதிரியை அடித்து காயப்படுத்தி விரட்டவும் செய்யும்.
சிங்கி இறாலின் உணர்கொம்பு முறிந்து போனால் அது மீண்டும் வளர்ந்து
விடும். உணர் கொம்புகள் முழுமையாக வளர, குறிப்பிட்ட கால கட்டத்தில், 3 முதல் 4 முறை
சிங்கி இறால், தோடு கழற்ற வேண்டியிருக்கும். அதுபோல எதிரியின் பிடியில் உணர்கொம்பு
சிக்கிக் கொண்டு இனி தப்ப முடியாது என்று தெரிந்தால், சிங்கி இறால், உணர்கொம்பைக் கழற்றிவிட்டு
தப்பிக்கும். உணர் கொம்புகள் மட்டுமின்றி சிங்கி இறாலுக்கு அதன் வாலும் ஓர் ஆயுதம்.
வாலால் அடித்தும் இது எதிரியை மிரட்டும். கடற்காய்களை வாலால் அடித்து, உடைத்து சாப்பிடும்.
சிங்கி இறாலின் பார்வைத் திறன் குறைவு. ஆனால், மோப்பத்திறனும், சுவையறியும்
திறனும் அதிகம். சிங்கி இறாலின் இரத்தம் மனித இரத்தம் போல சிவப்பு நிறம் இல்லை தெளிந்த
நீர் போல இதன் இரத்தம் இருக்கும்.
சிங்கி இறால்களில் ஆண் இறாலை சேவல் என்றும், பெண் இறாலை கோழி என்றும்
அழைப்பார்கள். சிங்கி இறாலின் வாலில் உள்ள சதை மிகவும் சுவையானது என்பதால் இப்படி சேவல்
என்றும் கோழி என்றும் சிங்கி இறால்கள் அழைக்கப்படுகின்றன.
சிங்கி இறால்களின் வாலடியில், உடலை ஒட்டியுள்ள முதல் இணை
Swimmeret பாகம் கல் போல இருந்தால் அது ஆண் சிங்கி. இறகு போல மென்மையாக இருந்தால் அது
பெண்சிங்கி.
பெண் சிங்கி இறால், அதன் வாலில் பல ஆயிரம் முட்டைகளைச் சுமக்கக்
கூடியது. இதனால், பெண்சிங்கி இறாலின் வால், ஆணின் வாலைவிட பெரியது. பிரகாசமான ஆரஞ்சு
நிறத்தில் குண்டூசி தலை அளவுள்ள 8 ஆயிரம் முதல் 17 லட்சம் முட்டைகளை பெண்சிங்கி இறால்
அதன் வாலில் சுமக்கும். பொரிக்காத நிலையில் இந்த முட்டைகள் கருப்புக் கோடு போலத் தோன்றும்.
சிங்கி இறாலைப் பிடிக்கும் மனிதர்கள் அதன் முட்டைகளையும் உண்பார்கள்.
இந்த முட்டைகளை ஓராண்டு காலம் கூட வாலில் சுமந்து செல்லும் பெண்
சிங்கி, கடலில் தகுந்த வெதுவெதுப்பு நிலை ஏற்படும்போது, முட்டைகளைப் பொரிக்கச்
செய்யும். முட்டைகளில், இருந்து வெளிவரும் லார்வா வடிவ புழுக்கள், 4 முதல் 6 வாரங்களுக்கு
கடல் நீரின் மேல் மிதக்கும். அவற்றில் பல மீன்களுக்கும், கடற்பறவைகளுக்கும் இரையாகும்.
0.1 விழுக்காடு லார் வாக்களே உயிர்பிழைக்கும். அவை கடலில் அமிழ்ந்து, சிங்கி இறால்களாக
உருவெடுக்கும்.
இப்போது இறுதிக்கட்டத்துக்கு வருவோம். சிங்கி இறால்கள் 100 முதல்
150 ஆண்டுகள் கூட உயிர்வாழக்கூடியவை. ஒவ்வொரு முறை ஓடுகளை கழற்றி புதுஓடு மாற்றும்
போதும் சிங்கி இறால் புத்துயிர் பெற்று, புது வாழ்வை அடைகிறது. ஓடு கழற்றுவதன்மூலம்
சிங்கி இறால்கள் மீண்டும் மீண்டும் இளமை அடைகின்றன. மூப்படைந்து சிங்கி இறால்கள் இறப்பதேயில்லை.
சிங்கி இறால்கள் முதிர்ச்சி அடைந்தாலும் அவற்றின் பசி குறையாது.
உணவின் அளவையும் சிங்கி இறால் குறைத்துக் கொள்ளாது. அதன் உயிர்ப் பரிமாணமும் மாறாது.
சிங்கி இறாலுக்கு இனப்பெருக்கத்தில் ஆர்வமோ, திறனோ குறையாது. உடல்நலமும் கெடாது.
இயற்கையாக வாழும் சிங்கி இறால், மீனவர்களால் பிடிக்கப்பட்டோ,
அல்லது சுறா, கணவாய் போன்ற மீன்களுக்கு இரையாகியோ இறந்தால் தான் உண்டு. மற்றபடி நூறாண்டுகளை
கடந்து நோய் நொடியில்லாமல் சிங்கி இறால் சிறப்பாக வாழும்.
No comments :
Post a Comment