ஆமைப்பூச்சி (Mole Crab)
அலைகடலைப் பொறுத்தவரை அங்கே ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் பல. கரையோர
உயிரினங்களும் பல. அலை ஆர்ப்பரித்து தரையோடு தாளமிடும் இடத் தில்கூட சில கடலுயிர்கள்
வாழ்கின்றன. ‘அலை மடக்கும்‘ இடத்தில் வாழும் இந்த சிற்றுயிர்களில் ஒன்று ஆமைப்பூச்சி.
ஆங்கிலத்தில் இதன் பெயர் மோல் கிரேப் (Mole Crab). அறிவியல் பெயர் எமரிட்டோ அனலோகா
(Emerite Analoga).
அழகின் சிரிப்பு என்ற கவிதை நூலில் பாவேந்தர் பாரதிதாசன், கடல் என்ற
தலைப்பில் எழுதிய கவிதையில்,
‘வெள்ளலை கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளைகள் ஓடி ஆடி
பெரியதோர் வியப்பைச் செய்யும்‘
என எழுதியிருப்பார். இப்படி வெள்ளலை கரைக்கு வந்த மீண்டும் திரும்பும்
போது தென்படும் ஒரு சிறு உயிரினம்தான் ஆமைப்பூச்சி.
ஆமைப்பூச்சிக்கு தமிழில் ஏராளமான பெயர்கள் இருக்கின்றன. எலிப்பூச்சி,
மச்ச நண்டு, கடல்எலி, உறல், பொத்திப்பூச்சி என்பன அவற்றுள் சில, குமரி மாவட்ட கடல்பகுதிகளில்
ஆமைப்பூச்சி, உறை என அழைக்கப் படுகிறது.
அலை கரையில் வந்து மோதிவிட்டு திரும்பிச் செல்லும்போது மணலில் V
வடிவத்தில் வரிகள் தோன்றும். அங்கு முறுமுறுவென காற்றுக் குமிழி களும் தோன்றும். அப்படித்
தோன்றினால், அந்த இடத்தில் மணலுக்குள் ஆமைப் பூச்சி பதுங்கியிருக்கிறது என்று பொருள்.
ஆமைப்பூச்சி ஓர் அங்குல நீளமுள்ள உயிர். அலையடிக்கும் அலைவாய்க்
கரையில் ஈரமணலில் மட்டுமே இது வாழும். உலர் மண்ணில் வாழாது. உலர்ந்த மண்ணில் ஆமைப்பூச்சிக்கு
உண்ண எதுவும் கிடைக்காது.
அலை அடித்து திரும்பும் போது ஆமைப் பூச்சியின் கண்கள் வெளியே தள்ளும்,
இறகுத் தூவல் போன்ற ஆண்டெனாக்கள், அங்குமிங்கும் தென்னை ஓலைகள் போல அசைந்தாடி, அலை
நீரில் பாசித் துணுக்குகளைத் தேடி உணவாக்கும். அலை வடியும் போது ஆமைப்பூச்சி உடனடியாக மண்ணுக்குள்
புதைந்து மறைந்து கொள்ளும்.
ஆமைப்பூச்சி இப்படி அவசரமாக மண்ணுக்குள் புதைந்து கொள்ள காரணம் உள்ளது.
சற்று தாமதித்தால் கூட இது, கடற்பறவைகளுக்கு இரையாக வாய்ப்புள்ளது. இதனால், அலைதிரும்பும்
போது கண்ணிமைக்கும் வேகத்தில் ஆமைப்பூச்சி மணலைத் தோண்டி உள்ளே புகுந்து கொள்கிறது.
பின்னங்கால்களால் மணலைத் தோண்டி, பின்பக்கமாகத்தான் ஆமைப்பூச்சி மணலுக்குள் நுழையும். பின்னங்கால்கள் இப்படி மணலைத் தோண்டும் போது, முன்னங்கால்கள்
துடுப்புகள் போல அதற்குப் பயன்படுகின்றன.
உண்மையில் ஆமைப்பூச்சி, அதன் வாலால் தனக்கு கீழிருக்கும் மணலை அடித்து
அதை திரவம் போல ஆக்குகிறது. பாதித் திரவநிலைக்கு மணல் வரும்போது சூழஉள்ள மணல் துகள்களை
ஆமைப்பூச்சி மேலே தள்ளுகிறது. பூகம்பத்தின் போது, ஒரு வீட்டைச்சுற்றி நிலம் அதிரும்போது
அந்த வீடு மண்ணுக்குள் புதையும் இல்லையா? அந்த தத்துவப்படி ஆமைப்பூச்சி மணலுக்குள்
புதைந்து கொள்கிறது. இவையெல்லாம் கண் இமைக்கும் வேகத்தில் நடந்து முடிந்து விடுகிறது.
ஆமைப்பூச்சி, நண்டு, வெட்டுக்கிளி போல வெளிஉடற்கூடு
(Exoskeleton) கொண்ட உயிரினம். நண்டுகளைப் போல ஆமைப்பூச்சிகளும் உடற் கூட்டை அவ்வப்போது
கழற்றும். அந்த உடற்கூடுகள் நூற்றுக்கணக்கில் கரையொதுங்கும். பலர் அதை இறந்த ஆமைப்பூச்சிகளின்
உடல்கள் என நினைத்துக் கொள்வார்கள்.
அலைவாய் கரையில் விளையாடும் சிறுவர் சிறுமிகளுக்கு ஆமைப் பூச்சியைப்
பிடிப்பது ஒரு விளையாட்டு. சிலருக்கு ஆமைப்பூச்சி உணவாவதும் உண்டு. ஆமைப் பூச்சிகளை
சமைத்தும், ஏன் பச்சையாக ‘கறுக் முறுக்‘ என கடித்து உண்பவர்களும் இருக்கிறார்கள். வரிக்கொடுவா
மீன்களைத் தூண்டிலில் பிடிக்க ஆமைப்பூச்சி, சிறந்த தூண்டில் இரை யாகவும் பயன்படும்.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் திரு மோகனரூபன்
ReplyDeleteநான் தற்சமயம் ஜோ டி குருஸ் எழுதிய ஆழிசூழ்உலகு படிச்சிட்டு இருக்கேன்
அந்த நாவல்ல வருகிற பெயர்தெரியாத மீன்களை உங்க வலைப்பூ மூலமாக தெரிஞ்சிகிறேன்
அதேபோலதான. அந்த நாவலில் ஆம்பூச்சி பிடிக்கும் சிறுவர்கள் பத்தி படிச்சிட்டு உங்க கடற்களஞ்யமான நளியிறு முந்நீருக்கு வந்தேன்
எனக்கு திருப்திகரமான அருமையான விளக்கம்
உங்களது இந்த முயற்சிக்கு எனது அன்பும் ரொம்ப நன்றியும்
உங்க பகிரி எண் கொடுங்க உங்கிட்ட நான் பேசனும்
நன்றி
வணக்கம் திரு. அலையாத்தி செந்தில். மிக காலம்தாழ்ந்து தங்கள் கருத்துப் பதிவைப் பார்க்கிறேன். தங்கள் அன்புக்கும், ஆர்வத்துக்கும் என் நன்றி. எனது செல்லிடப்பேசி எண். 98413 64236
ReplyDeleteஎனது பகிரி எண்ணும் இதுவே.
Delete