உலுக்கு (Electric Ray)
உலுக்கு எனப்படும் மின்சாரத் திருக்கை களில் உலகம் முழுக்க 30க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
இவற்றில் ஆறடி நீளம் முதல் ஓரடிக்கும் குறைவான உலுக்கு மீன்களும் உள்ளன.
சிமிழ், அம்மணத்திருக்கை என்பன உலுக்குக்கு உள்ள வேறு பெயர்கள்.
உலுக்கில் சிலவகை மீன்கள் சிறிய கண்கள் கொண்ட மீன்கள். சில இன உலுக்குகள் பார்வையற்ற மீன்கள். ஆம், கடலடியில் கலங்கிய மண்டிப் பகுதியில் வாழும் உலுக்குகளுக்கு பெரிய அளவில் பார்வைத் திறன் எதுவும் தேவையில்லை.
உலுக்கு இனங்களில் சில ஆழ்கடல்களில் காணப்படும். சில கடலோரமாக வாழ்க்கை நடத்தும். உலுக்கு பெரிதாக நீந்தாது. வாலைப் பயன்படுத்தி அவ்வப்போது மெதுவாக நகரும். அடிக்கடி மணலில் புதைந்து கொள்ளும். உலுக்கு மீன்களுக்கு மற்ற திருக்கை இன மீன்களைப் போன்ற நீண்ட சாட்டை வால் கிடையாது. மிகக் குட்டையான வால் கொண்ட மீன் இது.
உலுக்கின் தோல் மென்மையானது. மற்ற இனத் திருக்கைகளுக்கு இருப்பதைப் போல உலுக்கின் தோல் முரடானது அல்ல.
தோலின் மீது பல்வேறு குறிகள் காணப்படும். சுறா, திருக்கை போல உலுக்கும் முட்டையிடாமல் நேரடியாக குட்டி ஈனும்.
உலுக்கின் சிறப்பம்சமே
அதன் மின்சாரத் தாக்குதல்தான். கடலில் மின்சார விலாங்கு
(Electrical Eel) மீனுக்கு அடுத்த படி அதிக மின்உற்பத்தி செய்து தாக்கு தல்
நடத்தும் மீன் நமது உலுக்குதான்.
உலுக்கின் முன்பாகத்தை நேர்கோடாக வகிர்ந்தால் அந்த கோட்டின் இருபுறமும் உள்ள தசைத்திசுக்களில்தான் உலுக்கின் மின்னுற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. இந்த இரு மின்னுற்பத்தி உறுப்புகளின் எடை உலுக்கின் மொத்த எடையில் ஆறில் ஒரு பகுதி.
இந்த மின்உற்பத்தி நிலையம், அறுகோண வடிவில் தேன்கூடு போல எண்ணற்ற அறைகளுடன் அமைந்திருக்கும். இந்த அறுகோண அறைகளின் சுவர்கள் நாரிழையால் உருவாக்கப்பட்டவை. இணைப்புத் தசைத்திசுக் களால்
பகுக்கப்பட்ட இந்த அறைகள் கூழ்மம் போன்ற ஒன்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இந்த அறைகளுக்குள் எண்ணற்ற மின்தகடுகள் புதைக்கப்பட்டிருக்கும்.
ஓர் அறுங்கோண அறைக்குள் 150 முதல் 5 லட்சம் வழவழ தட்டுகள் இருக்க வாய்ப்புண்டு. இந்த ஒவ்வொரு அறையும், உலுக்கு மீனின் மூளையுடன்
நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த சிற்றறைகள் ஒவ்வொன்றும் ஒரு மின்கலம் (பேட்டரி) போல செயல்படக் கூடியவை. கீழிருந்து மேலாக மின்சாரம் பாயும் விதத்தில் மிக நெருக்கமாக செல்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இரு சிறப்பு உறுப்புகளையும், உலுக்கு மீனின் 4 மத்திய நரம்பு மண்டலங்கள் கட்டுப் படுத்துகின்றன.
இந்த அறுங்கோண மின்கலத்தில்
கீழ்ப்பகுதி தட்டு எதிர்மறை (நெகட்டிவ்). மேற்பகுதி தட்டு நேர்மறை (பாசிட்டிவ்).
எந்த ஒரு வேகமான இயக்கமும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்பது தெரிந்ததுதான். அதன் அடிப்படையில் இந்த செல்கள் உள்இயக்க விசையை விரைவுபடுத்துவதால் அதன்மூலம் உலுக்கு மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது.
ஒரு பெரிய உலுக்கின் மின் உறுப்பில், பல லட்சம் நுண்ணறைகள் இருக்க வாய்ப்புண்டு. உலுக்கு நினைத்தால் ஒரே நேரத்தில் எல்லா அலகு களையும் இயக்கி, 220 வோல்ட் மின்னாற்றலை வெளியிட முடியும்.
இந்த விந்தையான ஆற்றலைப் பயன் படுத்தி உலுக்கு அதன் இரையை வேட்டையாடுகிறது. இரை மீனின் மீது படர்ந்து மின்தாக்குதல் நடத்தி நிலை குலைய வைத்து அதைக் கொன்று உண்ணுகிறது. எதிரிகளை பயமுறுத்தி விரட்டவும் மின்னாற்றலை உலுக்கு பயன்படுத்துகிறது.
உலுக்கு, அடுத்தடுத்து தொடர்ந்து மின்னாற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தால் அதன் மின்கலம் தளர்ச்சியடையும். உலுக்கும் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் பலமிழக்கும். அதன்பிறகு சற்று ஓய்வெடுத்தபின் மீண்டும் மின்தாக்குதலைத் தொடரும்.
இருட்டில் குறைந்த அளவு மின்ஆற்றலை வெளிப்படுத்தி உலுக்கு மீன் மற்ற உலுக்கு மீன்களோடு தகவல் தொடர்பு கொள்வதாகவும் நம்பப் படுகிறது.
உலுக்குக்கான கிரேக்க பெயர்ச்சொல் Narke. நார்காட்டிக் (Narcotic) என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. தமிழிலோ, மின்ஆற்றல் மூலம்
ஓர் உலுக்கு உலுக்குவதால் நம் உலுக்கு மீனுக்கு ‘உலுக்கு‘ என்ற பெயர் வந்திருக்கலாம்.
ஓர் உலுக்கு உலுக்குவதால் நம் உலுக்கு மீனுக்கு ‘உலுக்கு‘ என்ற பெயர் வந்திருக்கலாம்.
Just started reading this blog... Very good information in Tamil with
ReplyDeletetamil names...Well done thiru. Mohana Ruben. Thank you and Keep it up.
நன்றி. மகிழ்ச்சி.
ReplyDelete