பெரிய விலங்கு… சிறிய உணவு...
நமது புவிக்கோளத்தில் வாழும் மிகப் பெரிய பாலூட்டி, நீலத்திமிங்கிலம்.
திமிங்கில இனங்களில் மிகப்பெரியதும் நீலத் திமிங்கிலம்தான். கடலுக்கு அடியில் காணும்போது
நீலம்தோய்ந்த நிறத்தில், இது தெரிவதால் நீலத் திமிங் கிலம் எனப் பெயர் பெற்றது. கடல்மட்டத்துக்கு
மேலே இந்த பேருயிர் சாம்பல் நிறமாகத் தோன்றும்.
வயிற்றின் அடிப்பகுதியில் நுண்ணுயிர்கள்
பெருவாரியாக வாழ்வதால், நீலத் திமிங்கிலத்தின் அடிப்பகுதி வெளிர் மஞ்சள் நிறமாக விளங்கும்.
நீலத்திமிங்கிலம் 100 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் பொதுவான
நீளம் 60 முதல் 80 அடி. இந்த பெருந்திமிங்கிலத்தின் எடை 100 முதல் 170 டன்கள் வரை. நீந்தும் வேகம் மணிக்கு 5 முதல் 25 மைல்கள்.
பேருருவம் கொண்ட நீலத்திமிங்கிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை மில்லியன்
கிலோ கலோரிகள் தேவை. திமிங்கிலத்தின் இந்த பெரும் பசிக்காக இயற்கை படைத்திருக்கும்
சின்னஞ்சிறு உயிர்தான் கூனிப்பொடி (Krill).
கூனிப்பொடி எனப்படும் நுண்ணிய இறால்கள், 1 முதல் 2 சென்டி மீட்டர்
வரை வளரக்கூடியவை. சில கூனிப்பொடிகள் 6 அங்குலம் வரை வளரக் கூடியவை.
இரவு வேளையில், கூனிப்பொடிகள் ஒளிவீசியபடி இரைதேடி கடல் அடியில்
இருந்து கடல்மட்டம் நோக்கி பெருந்திரளாகப் படையெடுக்கும். இரை கிடைக்காத வேளைகளில்
பகல் நேரத்திலும்கூட இவை கடல்பரப்பு நோக்கி படையெடுத்து வரும். கூனிப்பொடிகள் பெருந்திரளாக
மொய்ப்பதால் கடல் சில இடங்களில் நிறம் மாறி தோன்றவும் வாய்ப்புண்டு.
கூனிப்பொடிகள் இப்படி ஒளிவிட்டு மின்ன என்ன காரணம்? முதல் காரணம்,
கடலின் அடிஆழத்தில் இருந்து இரவு நேரத்தில் இவை ஒளி கக்கியபடி வந்தால், இவற்றுக்கு
கீழே அடியாழத்தில் உள்ள மீன்களால் கூனிப்பொடிக் கூட்டத்தைத் தெளிவாகக் கண்டுகொள்ள முடியாது.
அவை மங்கலாகத் தெரியும். இதனால் மீன்களுக்கு இரையாகாமல் கூனிப்பொடிகள் தப்பிக் கின்றன.
மேலும், ஒளி வீசுவதன் மூலம் கூனிப்பொடிகள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு
கொள்ளவும், இணை சேரவும் முடிகிறது.
இந்த சின்னஞ்சிறு கூனிப்பொடி கூட்டமே, பென்னம் பெரிய திமிங்கிலங்
களின் உணவு. கூனிப்பொடி கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் நீலத் திமிங்கிலம் 330 அடி வரை
கடலில் தாழும். கடலுக்குள் முக்குளித்தபடி கூனிப்பொடி கூட்டத்தை குறிவைத்து, வாயைத்
திறந்தபடி மேலேறி வரும். பின்னர் தன் பிரம்மாண்ட வாயால் கூனிப்பொடிக்கூட்டத்தை கடல்நீருடன்
திமிங்கிலம் அள்ளிக் கொள்ளும்.
இப்படி அள்ளும் போது கூனிப்பொடிகள் மட்டுமின்றி, சிறுமீன்கள், கணவாய்கள்,
வெங்கணா மீன்களின் முட்டைகள், புழுப்பருவ நண்டுகள், சிறு இறால்கள், ஏன் சில கடற்பறவைகள்
கூட திமிங்கிலத்தின் வாய்க்குள் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
நீலத்திமிங்கிலம் போன்ற பலீன் வகை பல்லில்லா திமிங்கிலங்களுக்கு,
பற்களுக்குப் பதில் பலீன் (Baleen) என்ற உறுப்பு காணப்படும். நாம் பல் தேய்க்கப் பயன்படுத்தும்
குச்சம் (Brush) போன்ற இந்த சீப்பு வடிவிலான பலீன், திமிங்கிலத்தின் வாயில் பற்களுக்குப்
பதிலாக அமைந்திருக்கும்.
கூனிப்பொடி கூட்டத்தை வாயால் விழுங்கியதும், இந்த பலீன்கள் சிறைக்
கம்பிகளாக மாறி கூனிப்பொடி மற்றும் இதர இரைகளை
சிறைப்படுத்தும். இப்போது தனது நாக்கால் கடல்நீரை பலீன்கள் வழியாக திமிங்கிலம் வெளியே
தள்ளும். எஞ்சிய கொஞ்சம் நீரை முதுகில் உள்ள ஊதுதுளை வழியாகவும் திமிங்கிலம் பீய்ச்சிடியடிக்கும்.
பின்னர் இரையை நாக்கால் உள்ளே தள்ளி விழுங்கும்.
நீலத்திமிங்கிலம் இப்படி நாள் ஒன்றுக்கு உணவாக்கும் கூனிப்பொடிகளின்
எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? நாள்தோறும் 8 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட 40 மில்லியன் கூனிப்பொடிகளை
நீலத்திமிங்கிலம் உணவாக்கிக் கொள்கிறது.
எவ்வளவு பெரிய பிரம்மாண்ட உயிருக்கு எவ்வளவு சிறிய உணவு?
(கூனிப்பொடி பற்றிய சில தரவுகள் நமது வலைப்பதிவில் ஏற்கெனவே இடம்
பெற்றுள்ளன)
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமை தோழர்
ReplyDelete