Sunday, 17 September 2017

ஓலைவாலன் திருக்கை (இலைத்திருக்கை) (Cowtail Stingray) (Pastinachus Sephen)

வாலில் ஓலையைக் கட்டிவிட்டது போல கடலில் உலாவரும் ஒரு திருக்கை ஓலைவாலன் திருக்கை. வடதமிழக கடலோரங்களில் இதற்கு ‘இலைத் திருக்கை என்ற பெயரும் உண்டு. தட்டு போன்ற பெரிய உடலும், தடித்த வாலும் கொண்ட ஒலைவாலன் திருக்கை, வால்முனையில் கூரிய முள் அல்லது முட்கள் கொண்டது. அதன் மூலம் எதிரிகளைக் குத்தவும் கூடியது.
ஓலைவாலன் திருக்கையின் உடல்தட்டு, கரும்பழுப்பு நிறத்தில் வட்டம் சேர்ந்த சற்று முக்கோண வடிவம் கொண்டது. கட்டித்திருக்கை, சங்குவாயன் திருக்கைகளைப் போல இதன் முதுகு மிக மேடானதும் அல்ல, அட்டணைத் திருக்கையையைப் போல மிக சமமானதும் அல்ல.

விரிந்த சிறகுகளைப் போன்ற உடலைப் பயன்படுத்தி, கடலடியில் மண்ணை விசிறி, உள்ளிருக்கும் நண்டு, மூரைகளை ஓலைவாலன் திருக்கை உணவாக்கும். 
ஓலைவாலனின் கண்கள் சிறியவை. இடைவெளி கொண்டவை. மணலில் ஓலைவாலன் புதைந்திருந்தால் கண்கள் மட்டும் வெளியே துருத்தியபடி இருக்கும். ஓலைவாலனின் கண்களுக்கு மிக அருகிலேயே மூச்சுத்துளை அமைந்திருக்கும். உடலின் மேற்புறத்தில் மூச்சுத்துளை இருப்பதால் அதற்குள் தப்பித்தவறிக்கூட கடல்மணல் புக வாய்ப்பில்லை. கண்களால் இரையைக் காண முடியாது என்பதால், ஏனைய திருக்கைகளைப் போல, ஓலைவாலன் திருக்கையும் மோப்பத் திறனைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கும்.
ஓலைவாலன் திருக்கை 3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதன் உடல் அகலம், நீளத்தை விட அதிகமானது. உடலின் குறுக்களவு 1.8 மீட்டர் வரை இருக்கலாம். மற்ற திருக்கை களின் முட்களைப் போலவே ஓலைவாலனின் முள்ளும் மெல்லிய சவ்வுத்தோல், பசை மற்றும் நச்சுத்திரவத்தால் போர்த்தப்பட்டி ருக்கும். எந்த திருக்கையும் எதிர்படும் மனிதர் களை வேண்டி விரும்பி முள்ளால் குத்துவ தில்லை. இது ஓலைவாலன் திருக்கைக்கும் பொருந்தும். ஆழம் குறைந்த கடல்பகுதியில் நடந்து வரும் மனிதர்கள் தப்பித்தவறி எதிர்ப்பட்டு, போதிய நேரம் தந்தால், ஓலைவாலன் திருக்கை வழியை விட்டு விலகிச் சென்றுவிடும் மாறாக, தெரியாமல் அதன் உடலை மிதித்தால், வாலை வளைத்து முள்ளால் குத்தும். வாலை மிதித்தால் காலடியில் இருந்து நழுவி விலகி, முள்ளால் இது தாக்கும். வாலை வளைத்து ஓலைவாலன் திருக்கை குத்தும் குத்து, மனிதர்களின் முழங்காலுக்கு மேலே  தொடை வரை பாயக்கூடியது. சில திருக்கை முள் குத்துகளை விட ஓலைவாலனின் நச்சுமுள் குத்து, அதிக கடுகடுப்பை அளிக்கக் கூடியது. இதன் முள்ளில் நுண்கிருமிகள் நிறைந்திருப்பதால் தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு. முட்கள் முறிந்தால் 5 அல்லது 6 மாதங்களில் புதிய முட்கள் வளர்ந்து விடும்.

ஓலைவாலன் திருக்கைகள் கடலை விட்டு வெளியேறி சிற்றாறுகள், நன்னீர் ஓடைகளுக்கும் அவ்வப்போது செல்வ துண்டு. நன்னீரில் கூட ஓலைவாலன் திருக்கையால் வாழ முடியும். நன்னீர் நிலைகளுக்குச் செல்வதன்மூலம் உடலில் பதிந்திருக்கும் ஒட்டுண்ணிகளை ஓலைவாலன் திருக்கையால் நீக்கிக் கொள்ள முடியும். இந்த குறிப்பிட்ட கால சிறிய சுற்றுலாவுக்குப் பிறகு ஓலைவாலன் திருக்கை மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும். 

No comments :

Post a Comment