Thursday, 12 October 2017

தீவுகளும் கடல் உயிர்களே..

கடலையும், கடல் உயிரினங்களையும் போல கடல்தீவுகளும் உயிர் உள்ளவையே.
மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளைப் பற்றி இப்போது ஒரு சிறிய பருந்துப் பார்வை பார்க்கலாம்.
தூத்துக்குடிக்கு மிக அருகே உள்ள தீவு முசல் தீவு என அழைக்கப்படும் முயல் தீவு (Hare Island). தூத்துக்குடியுடன் ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் இங்கே ஒரு சிறிய கிறிஸ்துவத் தேவாலயம் உண்டு. இப்போது, தூத்துக்குடி நகரோடு சாலை வழியே இணைக்கப்பட்டிருக்கும் இந்தத் தீவுராஜ தீவுஎனவும், கலங்கரை விளக்கம் அமைந்திருப்பதால்கோபுரத் தீவுஎனவும் அழைக்கப்படுகிறது.
முயல்கள் அதிகம் இருந்ததால் இந்த தீவுக்கு முயல்தீவு என்ற பெயர் வந்திருக்கலாம்.
70களில் இந்தத் தீவில் இறங்கி இலந்தைப் பழம் பறித்துத் தின்றதையும், இரவில் அழுங்கு (Ant eater) எனப்படும் எறும்புத்தின்னி ஒன்று, வள்ளத்தில் ஏறி பரபரப்பூட்டியதையும் நண்பர் ஒருவர் என்னிடம் நினைவுகூர்ந்தார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள மற்றொரு தீவு வான் (Van) தீவு. இங்கே ஆயிரக்கணக்கான சொரிமீன்கள் கூட்டம் கூட்டமாக கரையேறி இறந்து கிடந்த காட்சியை இன்னொரு நண்பர் மலரும் நினைவுகளாக விவரித்திருக்கிறார்.
தூத்துக்குடிக்கு அருகே இருந்த பாண்டியன் தீவு, புன்னையாடு(?) தீவு போன்றவை துறைமுக விரிவாக்கத்தால் அழிந்து போனதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து வடகிழக்கே கரை பிடித்து ராமேசுவரம் நோக்கிச் சென்றால் காசுவார் (Kasuvar) தீவு, விலங்குச்சல்லி மற்றும் கரைச்சல்லி தீவுகள்.
விலங்குச் சல்லியை, விலாங்கு சல்லி என்பவர்களும் இருக்கிறார்கள். விலாங்கு என்பது ஒருவகை கடல்மீன் என்பதால் இந்த தீவுக்கு விலாங்குச் சல்லி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று அவர்களது கருத்து. ஆனால், தென் தமிழக கடற்புறங்களில் கரை என்பதற்கு எதிர்ப்பதம் விலங்கு. எனவே கரைச்சல்லி தீவுக்கு எதிரே இருக்கும் இந்த தீவை விலங்குச்சல்லி என்பதே சரியானது. பொருத்தமானது.
வேம்பாறு தாண்டி வாலிநோக்கம் வரை சென்றால் உப்புத்தண்ணித்தீவு, நல்ல தண்ணிதீவு மற்றும் புழுவுணிச்சல்லி (Pulvinichalli) தீவுகள். நல்லதண்ணீர்த் தீவு பெயருக்கேற்ப நீர்வளத்துடன் தென்னை மரங்கள் செறிந்த தீவு.
இங்கே கடலோரம் வாழும் கறுப்பு கலந்த இளஞ்சிவப்பு நிற கடல் அட்டை, கையில் எடுத்தவுடன் விறைப்பாகி, பின்னர் காற்றுபோன பலூன் போல தொய்ந்துவிடக் கூடியது. உணவாகப் பயன்படாத இந்தவகை கடல் அட்டைகள் நல்ல தண்ணீர்த்தீவு அருகே அதிகம்.
நல்ல தண்ணீர்த்தீவு அருகே களித்தீவு என்ற மணற்பாங்கான வெளி உண்டு.
புழுவுணி சல்லித் தீவைப் பொறுத்தவரை அதை புலிவன் சல்லி என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், புழுவுணி என்பது மணலில் வாழும் சிறிய பூச்சியினம். மணலில் உட்கார்பவர்களை, மூட்டைப் பூச்சி போல கடித்து புழுவுணிகள் ரத்தம் குடிக்கக் கூடியவை. புழுவுணி பூச்சிகள் காரணமாகவே இந்தத் தீவுக்கு புழுவுணிச்சல்லி (Pulvinichalli) என்ற பெயர் வந்திருக்கலாம்.
கீழக்கரைக்குத் தெற்கே அனல்பார் தீவு, வாலிமுனைத்தீவு, அப்பாத்தீவு, பூவரசன்பட்டித்தீவு, தலையாரித்தீவு, வலைத்தீவு, முள்ளித்தீவு போன்றவை உள்ளன.
வலைத்தீவில் கிழத்தேரியம்மாள் (கித்தேரியம்மாள்) (புனித காதரைன்) கோவில் உண்டு.
இன்னும் ஹோர் தீவு (Haro) (Hare) (Horo) மணலித்தீவு (Manoli),  மாகாளிப்பட்டித்தீவு (Mahalipatti), பூமறிச்சான் தீவு,  புலிவலசைத் தீவு, குருசடைத் தீவு, சிங்கித்தீவுகளும் இருக்கின்றன.
மணலித் தீவிலும், தலையாரித் தீவிலும் சுண்ணாம்பு படிவங்கள் அதிகம்.
மணலித் தீவில் கலம் கட்டி மீன்பிடிக்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது.
(முழங்கால் அளவுக்கு கடல்நீர் விரிந்து பரந்து அங்கு மீன்கள் செறிந்திருந்தால் அது கலம். தூத்துக்குடியில் கொக்குமேய்ஞ்சான் கலம் உண்டு)
அனல் பார் தீவுக்கு ஆனைப்பாறைத் தீவு என்ற பெயர் உண்டு. இங்கு பாறைகள் அதிகம்.
பூமறிச்சான் தீவு, 3 தீவுகள் கொண்ட ஒரு கூட்டம். இந்தத் தீவுக்குப் பள்ளிவாசல் தீவு என்ற பெயரும் உள்ளது.
சிங்கித் தீவு அல்லது சிங்களே தீவு, முன்பு சிங்கள மீனவர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக கருதப்படுகிறது.
குருசடை அல்லது குருசடித் தீவில் பூவரசு மரங்கள் அதிகம்.
மக்கள் வாழாத இந்தத் தீவுகளில், ஆழிப்பேரலைக்குப்பின் விலங்குச்சல்லி, பூவரசன்பட்டி தீவுகள் மாயமாய் மறைந்து விட்ட.. அண்மையில் வான்தீவு  இரண்டாக உடைந்து நீரில் மூழ்கியது தெரிய வந்திருக்கிறது. கடல் கொண்ட நம் குமரிக்கண்டமான லெமூரியாவும் ஒருவேளை இப்படித்தான் மறைந்திருக்குமோ என்னவோ?

No comments :

Post a Comment