தண்ணீர்ப் பன்னா (தண்டிப்பன்னா) நாக்கண்டம்
(Inshore lizardfish)
பார்வைக்கு பல்லிக்கும், மீனுக்கும் பிறந்த உயிர்
போல தோன்றும் ஒரு மீன் இனம் தண்ணீர்ப் பன்னா.
இதன் தலை பல்லியைப் போலவே இருக்கும். இதன் மாறுகண்கள், அலிகேட்டர் முதலையைப் போல நம்மைக் கண்டு
முறைக்கும். தண்ணீர்ப் பன்னாவின் வாயில் மட்டு மல்ல, வாயின் மேல் அண்ணத்திலும், ஏன் நாக்கிலும் கூட பற்கள்
இருக்கும்.
தண்ணீர்ப் பன்னாக்களில் 36 வகை மீன்கள் இருந்தாலும்,
இருவகை மீன்களே குறிப்பிடத்தகுந்தவை. அதில் ஒன்று கரையோரம் கடல்தரையில் காணப்படும் சிறிய தண்ணீர்ப் பன்னா.
கடலின் 15 பாவம் (Fathom) அதாவது 90 அடி ஆழத்தில் இந்த மீன் காணப்படும்.
தனி மீனாக, பார்களை விட அதிகமாக மணல் வெளிகளிலேயே
இது தென்படும்.
பழுப்பு நிறத்துடன் அவ்வப்போது நிமிரும் முதுகுத் தூவிகளுடன்
இது காணப்படும். பாதி உடலை மணலில் புதைத்து உருமறைப்பு செய்து, இருந்த இடத்தில் இருந்தே இரையை இது வேட்டையாடுவதுடன், இந்த நிமிர்ந்த முதுகுத் தூவியால் எதிரிகளிடம் இருந்து தப்பவும் செய்யும்.
தண்ணீர்ப் பன்னாக்களில் ஆண் மீனைவிட பெண்மீனே பெரியது. ஏறத்தாழ
ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடிய மீன் இது. அடிப்புற முன்தூவியால்
அவ்வப்போது இது மணலைக் கிளறியபடி இருக்கும். இரை அருகே வந்தால்
மின்னல் வேகத்தில் தண்ணீர்ப் பன்னா, இரையைத் தாக்கும்.
இப்படி திடீரென முன்னோக்கிப் பாய்ந்து இரையைக் கவ்வ, இதன் வாலும், பக்கத் தூவிகளும் சிறகுகள் போல இந்த மீனுக்கு உதவுகின்றன. பெரிய வாயால்
தண்ணீர்ப் பன்னா, இரையை முழுதாக விழுங்கவும் செய்யும்.
நெத்தலி, மீன், கணவாய்,
கடல்புழுக்கள் இந்த மீனின் முதன்மை உணவு.
கடலில் நீந்தாமல் மணல் தரையில் தத்தித்தவழ்ந்து செல்லக்கூடிய
மீன் தண்ணீர்ப் பன்னா. இதன் அடிப்புற முன்தூவிகள் கால்கள் போல பயன்படுகின்றன.
தண்ணீர்ப் பன்னாவின் சதை மாவு போன்றது. சென்னையில் இந்த வகை மீன், கிழங்கான் மீன்
என்றுகூறி விற்கப்படுவதுண்டு.
தண்ணீர்ப் பன்னாக்களில் சற்று ஆழ்கடல் வாழ் தண்ணீர்ப் பன்னாக்களும்
உள்ளன. உழுவாக்கரை என தமிழிலும், (Snake fish) பாம்புமீன்
என ஆங்கிலத்திலும் இவை அழைக்கப்படுகின்றன. பாம்பு போன்ற மூக்கு
இருப்பதால் பாம்பு மீன் என்ற பெயர், இவற்றுக்கு வழங்குகிறது.
வாய் முழுக்க ஆணி போன்ற பற்கள் கொண்ட இவை, இரண்டடி
நீளம் வரை வளரக் கூடியவை. கன்னப் பொருத்துகளில் இவற்றுக்கு சதைப்பற்றான
ஒரு குமிழ் உண்டு. உழுவாக்கரை உண்பதற்கு ஏற்ற மீனல்ல.
அதனால், மீனவர்கள் இதைப் பிடித்தால் பெரும்பாலும்
இரை மீனாகப் பயன்படுத்துவார்கள்.
No comments :
Post a Comment