67. அம்மணி உழுவை (Whale shark).
உலகின் மிகப்பெரிய மீன் இனம் இதுதான். தமிழகத்தின் தென்கடல் பகுதியில் அம்மணி உழுவை
என்றும், தமிழகத்தின் வடகடல் பகுதிகளில் பெட்டிச்சுறா என்றும் இது அழைக்கப்படுகிறது.
முழுநிலா காலத்துக்கு
ஒரு வாரத்துக்குப்பிறகு பவளப்பாறைகள் லட்சக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை வெளிவிடும்.
கடலின் மேற்பரப்பில் வந்து மிதக்கும் இந்த முட்டைகளை, கிரில் (Krill) எனப்படும்
இறால் போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் இரை கொள்ளும். பிளாங்டன்களுடன் கலந்து மிதக்கும்
கிரில்களை உண்ண அம்மணி உழுவை அங்கு வந்து சேரும்.
அம்மணி உழுவை ஹோம்ராஸ் என்னும் வகைப்பாட்டைச் சேர்ந்த உணவுக்குப் பயன்படாத மீன். இதைப் பிடித்து கரைக்கு கொண்டுவந்தால் அதன் தசை தண்ணீர்
போல உருகும். விரைவில் மீன் கரைந்து ஒன்றுமில்லாமல் கொளகொளத்துப் போய்விடும்.
முப்பதடி நீளமும்,
40 டன் எடையும் கொண்ட அம்மணி உழுவை, சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில், டென்னிஸ் பந்தளவு
எண்ணற்ற புள்ளிகள் கொண்டது. எங்கிருந்து வந்தது என்பது தெரியாமலேயே இது திடீரென கடலில்
தோன்றி நீந்துபவர்களை திகைக்க வைக்கும்.
அம்மணி உழுவையை
முதன்முறையாக கடலில் பார்ப்பவர்களை அதன் பிரம்மாண்ட புள்ளிப் பொறித்த தோற்றம் கண்டிப்பாக
பயமுறுத்தும்.
மிக மெதுவாக கடலில்
நீந்தும் அம்மணி உழுவை, மனிதர்களின் அண்மையை வெறுப்பதில்லை. மனிதர்களுக்கு எந்த தீங்கும்
இது இழைத்ததில்லை. இது நீந்திச் செல்லும்போது இதன் அருகில் நீந்தும் யாரையும் இது தாக்கியதும்
இல்லை. இத்தனைக்கும் 4 ஆயிரம் பற்ககளைக் கொண்ட மீன் இது.
அம்மணி உழுவையின்
முக்கிய உணவு பிளாங்டன்தான். நெத்தலி போன்ற சிறுமீன்களையும் இது உணவாகக் கொள்ளும்.
இதன் பிரம்மாண்டமான வாய் கடல்நீரை வடிகட்டி, அதில் உள்ள பிளாங்டன்களை மட்டும் உணவாக
எடுத்துக் கொள்ளும்.
அம்மணி உழுவை சில
வேளைகளில் தெரியாத்தனமாக படகுகள் மீது மோதி விடுவதும் உண்டு. சிலவேளைகளில் மீன்பிடி
படகை இது விடாமல் பின்தொடரவும் செய்யும். அம்மணி உழுவை முட்டையிடுகிறதா? குட்டி போடுகிறதா
என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிர்.
அம்மணி உழுவை பார்மீன்
இல்லை என்றாலும் அடிக்கடி கடல்
பார்களுக்கு வந்து செல்லக்கூடிய மீன்.
No comments :
Post a Comment