பருந்தலகு ஆமை, அழுங்காமை (Hawks bill turtle)
பருந்து போன்ற அலகு |
பருந்தலகு ஆமை எனப்படும் அழுங்காமையைப் பற்றி நமது வலைப்பூவில்
ஏற்கெனவே ஒரு பதிவு உள்ளது. இருப்பினும் புதிய தரவுகளுடன் இந்தப் புதிய பதிவு.
பருந்தலகு ஆமை, எலிமூஞ்சி ஆமை, ஆமையோட்டு
ஆமை (Tortoise Shell Turtle)… இப்படிப் பல பெயர்களில் அழைக்கப்படும்
அழுங்காமை வண்ணமயமான ஓடு கொண்டது. இந்த ஆமையோடு, கடலின் தட்பவெப்பநிலைக்கு
ஏற்ப நிறம் மாறக் கூடியது.
பருந்தலகு ஆமை தனித்து வாழக்கூடியது. இரண்டு அல்லது இரண்டரை அடி நீளமே உள்ள இந்த
ஆமை வேகமாக நீந்தக்கூடியது.
ஆமைகளில் மிக வேகமாக நீந்தக்கூடிய ஆமை இதுதான்.
கடலில் மிகநீண்டதொலைவுக்கு ஒரே மாதத்தில் 1800 கிலோ
மீட்டர் தொலைவு வரை இது வலசை செல்லும். ஆனால் 65 அடி ஆழத்துக்கு கீழே இது காணப்படாது.
அழுங்காமை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில்
ஈடுபடும். 50 ஆண்டுகள் வரை (மனிதர்கள் அனுமதித்தால்) உயிர்வாழும்.
வேகமான நீச்சல்.. |
பருந்தலகு ஆமை எனப்படும் அழுங்காமை, அதன் அலகால் பார்மீதுள்ள
சிறிய கண்ணாடி ஊசிகள் போன்ற ஸ்பாஞ்ச் என்ற உயிரை அகற்றி உண்ணும். சொறிமீன் (இழுதுமீன்),
கடல் சாமந்திகளுடன் பவழப்பாறைகளின் சிறுதுண்டுகளையும் இது கொறித்துத் தின்னும்.
அழுங்காமையின் இந்த செயல் மற்ற பார்வாழ் மீன்களுக்கு உணவு கிடைக்க வழிவகை
செய்கிறது.
இந்த வகை ஆமைக்குப் பற்கள் கிடையாது என்ற நிலையில் இதன் அலகே
இரையுண்ண இதற்கு மிகவும் பயன்படுகிறது. பார் இடுக்குகளில் அலகை நுழைத்து இரைகளை
இது தேடித் தின்னுகிறது.
அழகான ஓடு! |
ஆண்டுக்கு 1,200 வரை ஸ்பாஞ்ச்சுகளை அழுங்காமை உண்பதால் அவற்றின்
எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு பவழப்பார்களின் சமநிலை பாதுகாக்கப்படுகிறது. ஸ்பாஞ்ச்சு களுக்கு
அழுங்காமையைத் தவிர இயற்கையாக வேறு எதிரிகள் யாரும் இல்லை. மற்ற உயிரினங்கள் இந்த கண்ணாடி
ஊசிகள் போன்ற உயிரினத்தை தின்னத் தயங்கும் நிலையில், அழுங் காமை ஒன்றே இதன் ஒரே
கொல்லுயிராக இருந்து, பார்களைக் காக்கிறது.
ஸ்பாஞ்ச் எனப்படும் ஊசி உயிரினத்தின் நஞ்சு, அழுங்காமையை
ஒன்றும் செய்யாது. ஆமை உண்ணும் நஞ்சு அதன் உடலில் பத்திரமாகச் சேகரித்து வைக்கப்படுகிறது.
ஆமைகளில் மிகமிக அழகான ஓடு கொண்ட ஆமை அழுங்காமைதான். இதன்
செம்பழுப்பு நிற மேல்ஓடு, கூழாங் கற்கள் பதித்த கூரை போலவும், அடிப்புற ஓடு பொன்போலவும்
திகழும்.
ஊர்வன இனத்தில் ஒளிரும் தன்மையுடன் (biofluorescent) கூடிய ஒரே உயிரினம் அழுங்காமைதான்.
மஞ்சள், பிங்க், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, பர்ப்பிள் நிறங்களில்
அழுங்காமையால் ஒளிர முடியும்.
No comments :
Post a Comment