Saturday, 3 March 2018


ஜான் டோரி (John Dory)

பெருங்கடல் மீன்கள் பலவற்றுக்குப் பெயரே இல்லை என்றால் நமக்கு வியப்பாக இருக்கும். ஆம். மனிதர்களுக்குத் தெரிந்த, அவர்களிடையே புழக்கத்தில் உள்ள மீன்களுக்கு மட்டுமே வணிக காரணங்களுக்காக பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி ‘பெயரில்லா பிச்சைகள் ‘கடலில் ஏராளம்.
அதேப்போல, அந்நியக் கடல்மீன்களுக்கும் பெரும்பாலும் பெயர் இருக்காது. அந்த வகையான மீன்களில் ஒன்று ஜான் டோரி.
ஏதோ ஆங்கில துரையின் பெயர் போல இருக்கும் ஜான் டோரி அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறங்களிலும், நடுநிலக்கடலிலும் (மத்திய தரைக் கடலிலும்) காணப்படுகிறது. ஐரோப்பிய பகுதி ஜான் டோரிக்கு Zeus Faber என்பது அறிவியல் பெயர்.
அதேப்போல, இந்திய-பசிபிக் கடல் பகுதியில் ஜப்பான் அருகேயும் ஒரு ஜான் டோரி உண்டு. அதன் அறிவியல் பெயர்  Zeus Japonicus.
டோரி (Dory) இன மீன்கள் யாவுமே கடலின் நடுஆழ மீன்கள். உடலின் நடுவே கறுப்புநிற பொட்டும், அந்த பொட்டைச்சுற்றி மஞ்சள் நிற விளிம்பும் இருப்பது டோரி மீன்களின் தனிஅடையாளம்.
அதுபோல, முதுகுத்தூவியில் 8 முதல் 10 முள்தூவிகள் நூலிழைகள் போல நீண்டு, ஏதோ தோரணம் போல மிதப்பதும், முதுகிலும், அடிவயிற்றிலும் வரிசைக் கட்டிநிற்கும் சிறு முட்களும் டோரி மீனின் அடையாளங்கள். நமது ஜான் டோரியும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஜான் டோரி மீனுக்கு தமிழில் தும்பி மீன், துமித்த மீன் என்ற பெயர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது உறுதியான தகவல் இல்லை. சரிவரத் தெரியாத ஒன்றை நான் பதிவிட விரும்பவில்லை.
ஜான் டோரி 2 அடி நீளமுள்ள நடுஆழ மீன். சில வேளைகளில் கடல்மட்டத்திலும், சில வேளைகளில் 650 அடி ஆழத்திலும் இந்த மீன் காணப்படும். எப்போதும் வெங்கணா  (Herring) மீன்கூட்டத்தைப் பின்தொடர்ந்த படி ஜான் டோரி இருக்கும். வேகமாக நீந்தக்கூடிய மீனான ஜான்டோரி, சிறுமீன்களை நெருங்கி குழாய் போன்ற வாயால் அவற்றை திடீரென உறிஞ்சக் கூடியது.
ஜான் டோரியின் உடல்முழுக்க அழகிய பொடிச் செதிள்கள் திகழும். ஆனால் அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம்.
முதிர்ந்த மீன்களின் முதுகில், ஏற்கெனவே கூறியது போல 8 முதல் 10 கதிர்த்தூவிகளும், அவற்றின் முனைகளில் நீண்ட நூலிழைகளும் காணப்படும்.
ஜான் டோரியின்  உடல் நடுவே உள்ள பெரிய கறுப்புப்பொட்டு அழகானது. தங்கமஞ்சள் நிறத்தில் விளிம்புடன் காணப்படும் இந்தப் பொட்டு, பெரிய கொல்மீன்களிடம் இருந்து ஜான் டோரி மீன் தப்ப உதவுகிறது. இந்த கரும்பொட்டை மீனின் கண்ணாக நினைத்து பெரிய கொல்மீன் குறிவைத்து தாக்கும்போது, சிறிய சேதத்துடன் ஜான் டோரி தப்பிப்பிழைக்க வாய்ப்புள்ளது.
இந்த கறுப்புப்புள்ளியில் விரல் நுண்வரிகளும் உண்டு. இந்த விரல்வரிகள், (ரேகை), இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித இராயப்பரின் (St. Peter) விரல்வரியாகக் கருதப்படுகிறது(!)
இயேசு கிறிஸ்துவின் ஆணைக்கிணங்க, புனித இராயப்பர், கலிலேயா கடலில் இந்த ஜான் டோரி மீனைப் பிடித்ததாகவும், அதன் வாயில் இருந்து காசை எடுத்தபின் அதை மீண்டும் விட்டதாகவும் ஓர் ஐதீகம் உண்டு. அப்போது இராயப்பரின் விரல்வரி ஜான் டோரி மீனின் மீது பதிந்ததாகவும் நம்பப்படுகிறது.
ஜான் டோரி மீனின் சதை வெள்ளை நிறமானது. சுவையான உண்ணத்தகுந்த மீன் ஜான் டோரி. ஆனால் சிலர் இதை உண்பார்கள். சிலர் உண்ண மாட்டார்கள்.

No comments :

Post a Comment