Friday, 9 March 2018



கோலா (‘பறக்கும் மீன்‘)

மீன்கள் நீந்தப் பிறந்தவை. ஆனால், கோலா மீன்கள் கடல்நீரில் இருந்து அவ்வப்போது, விட்டு விடுதலையாகி சிட்டுப்போலபறக்கும்பழக்கம் உள்ளவை. இதனால்பறக்கும் மீன்என்றும் கோலா அழைக்கப்படுகிறது.
கோலா ஒரு பெருந்திரள் மீன். அதாவது மாப்பு மீன். கோலாக்களில் மொத்தம் 40 முதல் 64 வகைகள் உள்ளன. சிறிய தேநீர்க் கோப்பை அளவுள்ள கோலா முதல் 18 அங்குல நீளம் வரை பல்வேறு நீள அகலங்களில் கோலா மீன்கள் திகழ்கின்றன.
கோலாக்கள் வெப்பக் கடல்மீன்கள். கடலில் இவற்றுக்கு சூரை (Tuna), கொப்பரக் குல்லா (Black Marlin), தளப்பத்து (Sail fish) போன்ற எதிரி மீன்கள் ஏராளம். இந்த எதிரிகளிடம் இருந்து தப்பவே அவ்வப்போது கடல்மேல்பறக்கும்வித்தையை கோலா மீன்கள் கைக்கொள்கின்றன.
கோலா மீன்களின் இருபக்க கன்னத்தூவிகள் சிறகு போல நீளமானவை. கண்ணாடி போன்றவை. சில வகை கோலாக்களுக்கு கன்னத்தூவிகள் போக உடலின் பின்புறம் இன்னும் இரு தூவிகளும் இலங்கும்.
மீன்களின் வாலில் உள்ள இரு தூவிகளில் கீழ்த்தூவியை அதாவது வால்அடித் தூவியை, ‘சுக்கான் தூவிஎன்பார்கள். கோலா மீன்களின் சுக்கான் தூவி வாலின் மேல்தூவியை விட நீளமானது. கோலா காற்றில்பறப்பதற்குஅதன் தூவிகளைப் போல இந்த சுக்கான் வாலும் மிகவும் பயன்படுகிறது.
கோலா மீன்பறக்கமுடிவு செய்து விட்டால், நீருக்கு அடியில் வேகமாக நீந்தி, கடலின் மேற்பரப்பை நோக்கி மணிக்கு 37 மைல் வேகத்தில் விரையும். அப்போது அதன் சிறகு போன்ற தூவிகள் உடலுடன் இறுக்கமாக ஒட்டியிருக்கும். நீர்மட்டத்தைக் கிழித்து கோலா மீன் மேலேறும்போது இந்த சிறகுத்தூவிகள் விரிந்து அதிரத் தொடங்கும். போதாக்குறைக்கு கோலாவின் சுக்கான் வால்தூவி, அதன் பங்குக்கு நொடிக்கு 50 முறை படபடக்கத் தொடங்கும்.
விளைவு? போதுமான வேகம் கிடைத்ததும் கோலா மீன் கடலை விட்டு வெளியேறிபறக்கத்தொடங்குகிறது. கோலா பறக்கும்போது கடைசியாக கடல்நீரை விட்டு வெளியே வருவது அதன் வால்தான்.
கடல்நீரை விட்டு 4 அடி உயரம் வரை எழும்பிப்பறக்கும்கோலா, 655 அடி வரைபறக்கக்கூடியது.
கோலா மீனால் 30 நொடிக்குமேல்பறக்கமுடியாது. கோலாவின் வேகம் படிப்படியாகக் குறைந்து மணிக்கு 20 முதல் 25 மைலாக அது மாறும்போது, மீனின் பறக்கும் உயரம் குறைந்து மீண்டும் அது கடல்மட்டத்தை நோக்கி நெருங்கத் தொடங்கும். அப்போது  நீரை முதலில் தொடுவது கோலா மீனின் வாலாகத்தான் இருக்கும். அப்போது மீண்டும் வால் துடிதுடித்து கோலா மீன் மீண்டும்பறக்கதுணைபுரிகிறது. இப்படி விட்டுவிட்டு கால் மைல் தொலைவு வரை கோலா மீனால்பறக்கமுடியும்.
கோலா மீன் உண்மையில் பறக்கிறதா என்றால் இல்லை. அது சிறகுகளை அடித்து பறப்பதில்லை. காற்றில் சறுக்கியபடி செல்கிறது. பேரலையின் உச்சியில் இருந்து பறக்கும்கோலா மீன்கள் சிலவேளைகளில் வெறும் 4 அடி உயரம் மட்டுமல்ல,. 15 அடி உயரம் வரை கோலாகலமாகபறக்கமுடியும். இப்படி மிகவும் உயரபறக்கும்கோலா மீன்கள்தான் சில வேளைகளில் கப்பல்தளத்தில் விழுந்து மாலுமிகளுக்கு உணவாக மாறுகின்றன.
கோலா மீன்கள் முரல்வகை மீன்களுக்கு நெருங்கிய உறவுக்கார மீன்கள். முரல்களைப் போலவே கோலா மீன்களும் வெளிச்சத்தால் கவரப்படுபவை என்பது கூடுதல் செய்தி. (முரல்களைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் உள்ளது.)

No comments :

Post a Comment