கொண்டை கிளிஞ்சான் (Humphead Parrotfish)
மிகப்பெரியது கொண்டை கிளிஞ்சானே. ஒரு
சில கிளிஞ்சான்கள் நாய் அளவுக்கு வளரக்கூடியவை.
பச்சைக்கிளி போலவே இச்சைக்குரிய பச்சை நிறம் கொண்ட மீன் இது. மற்ற
கிளிஞ்சான்களைப்போல கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் எதுவும் கொண்டைக்கிளிஞ்சானிடம் இல்லை.
Bolbometopon muricatum என அறிவியல் பெயரில் அழைக்கப்படும்
கொண்டைக் கிளிஞ்சான், பார்கள் மற்றும் கடல்கோரைகளின் நடுவே வாழக்கூடியது.
எப்போதும் ஏறத்தாழ 75 மீன்கள் கொண்ட கூட்டமாகவே இது திரியும்.
4.3 அடி நீளமும், 46 கிலோ
வரை எடையும் இருக்கக் கூடி மீன் இது. மெதுவாக வளர்ந்து, நீண்டகாலம் வாழக்கூடியவை
கொண்டைக் கிளிஞ்சான்கள். 40 ஆண்டுகாலம் வரை உயிர்வாழும்.
கொண்டைக்கிளிஞ்சானின் முதன்மை அடையாளம், அதன்
செங்குத்துத் தலையில் உள்ள புடைப்பு போன்ற வீக்கம்தான். சிறுமீன்களுக்கு
இந்த நெற்றிப் புடைப்பு இருக்காது. வளர்ந்த பிறகே புடைப்பு உருவாகும்.
தலையில் உள்ள இந்த புடைப்பு காரணமாகவே ‘கொண்டைக்கிளிஞ்சான்‘
என்ற பெயர் இந்த வகை மீனுக்கு இலங்குகின்றது.
எல்லா வகை கிளிஞ்சான்களையும் போலவே கொண்டைக்கிளிஞ்சான் மீனுக்கும்
பார்கள்தான் உணவு. கிளி மாதிரியான அலகால், பார்களில் உள்ள
Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை ஓட்டுடன் இது கொறித்து உண்ணும்.
பார்களின் மேல் படியும் வண்டல், கசண்டுகள்,
பாசிகளையும் இது உணவாக்கும்.
பெரிய தலையால் இது பார்களை முட்டி உடைத்துத் தூளாக்கி, பின்
உடைந்த பார்த்துண்டுகளை வாயில் இட்டு உண வாக்கும். அலகின் பின்புறம்
அடித்தொண்டையில் உள்ள பல்லால் இரையை பசைபோல அரைத்து கூழாக்கி உண்ணும். இதன் கழிவு வெண்மணலாக வெளியேறும்.
நிலவுபோன்ற வெண்மணல் விரிந்த உலகக் கடற்கரைகள் அனைத்தும் ஒருவகையில்
பார்த்தால் கிளிஞ்சான் மீன்களில் கழிவுகள்தான் என்பது வியக்க வைக்கும் உண்மை.
தலையால் பார்களை முட்டி உடைப்பதுடன், இதே
தலையால் ஆண் கொண்டைக் கிளிஞ்சான்கள், ஆடுகள் போல முட்டிமுட்டி
சண்டையிடுவதும் உண்டு. மீன் கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவது
என்பதற்காகவும், மனம் விரும்பிய பெண்மீனை அடைவதற்காகவும் இந்த
சண்டை நடக்கலாம்.
கொண்டைக் கிளிஞ்சான் மீன்கள், இரவில் கூட்டமாகவே தூங்கும்.
குறிப்பிட்ட ஒரு குகை, அல்லது மூழ்கிய படகு போன்றவை
இவற்றின் படுக்கை அறைகள். கடலடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தையே
தூங்கும் இடமாகப் பாவிப்பது கொண்டைக் கிளிஞ்சான் மீன்களின் வழக்கம். இளம் கொண்டைக் கிளிஞ்சான்கள், சற்று ஆழமான கடலைத் தவிர்த்து
கடலோர கடற்புற்களின் நடுவே வாழும்.
கொண்டைக்கிளிஞ்சான் உள்பட எந்த வகை கிளிஞ்சானாலும் கடற்பார்கள்
அழிவதில்லை. அவை செறிவுடன் வளரவும், கடலில் புதிய பார்கள்
தோன்றவும் கிளிஞ்சான்கள் உதவுகின்றன. (கிளிஞ்சான்கள் பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில்
ஒரு பதிவு உள்ளது.)
No comments :
Post a Comment