மட்டி உழுவை (Bowmouth Guitarfish) (Shark ray) (Rhina
aneylostoma)
கனடா நாட்டுக்கார்களை, ‘ஸ்வெட்டர் (கம்பளி உடை) அணிந்த மெக்சிகோ
காரர்கள்‘ என வேடிக்கையாக அழைப்பதுண்டு. அதேப்போல திருக்கை மீனுக்குத் ‘தட்டையான சுறா‘ என்று வேடிக்கையான ஒரு பெயர் உண்டு.
இந்த திருக்கையையும், சுறாவையும் கலந்து செய்த கலவைதான் உழுவை
மீன் (Guitar Fish).
பட்டை (Bark) என்ற சொல்லில் இருந்து வந்தவைதான் படகு, படங்கு
என்ற சொற்கள். பட்டையான துணியைப் படங்கு (பதாகை) என்பார்கள். பட்டையாக இருப்பதால் உழுவை
மீனுக்குத் தமிழில் ‘படங்கன்‘ என்ற பெயரும் உண்டு. ஆங்கில இசைக்கருவியான கிதார் போல
இருப்பதால் ஆங்கிலத்தில் இது கிடார்மீன் என வழங்கப்படுகிறது.
‘நளியிரு முந்நீர்‘ வலைப்பூவில் நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல
சுறாவுக்கும், திருக்கைக்கும் ஆதிமூதாதை ஒரு பழங்கால மீன்தான். அந்த பழங்கால மீனில்
இருந்து கிளைத்து வந்தவைதான் சுறாவும், திருக்கையும்.
இந்த இரு இன மீன்களுக்கும் இடையில் ஓர் இணைப்புச் சங்கிலிபோலத்
திகழ்பவை உழுவை மீன்கள் (Guitar Fish).
சுறா போன்ற உயர்ந்த முதுகுத்தூவிகள், வலிமையான வால், சுறாபோன்ற
பின்பாதி, அதேவேளையில் திருக்கையைப் போன்ற முகம், முன் உடல் இவைகள்தான் உழுவை மீன்களின் அடிப்படை அங்க அடையாளங்கள்.
உழுவைகளில் பலவகைகள். புள்ளி உழுவை, கச்சுழுவை,
பால் உழுவை, கள் உழுவை, பூந்தி உழுவை…. இப்படி உழுவைப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த உழுவை
இனத்தில் ஒரு வகைதான் ‘மட்டி உழுவை‘ (Bowmouth guitarfish).
திருக்கை இனத்தைப்போலவே மட்டி உழுவைக்கும், அதன் வாய், செவுள்
திறப்புகள் போன்றவை உடலின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும்.
மட்டி உழுவையின் முதன்மை அடையாளம் வில்போல வளைந்த அதன் அரைவட்ட
வாய். அடுத்தபடியாக அதன் முகத்து முட்கள்.
பழங்காலத்தில் போர் யானைகளுக்கு முள்பதித்த ‘முகப்படாம்‘ மாட்டுவது
போல, மட்டி உழுவையின் முகத்தில் தடித்த முட்களைக் கொண்ட ஒரு ‘முகப்படாம்‘ உண்டு. கண்களுக்கு
அருகிலும், அதற்கு சற்று அப்பாலும் இந்த முள்வரிசைகள் காணப்படும்.
மட்டி உழுவையின் உடல் முழுக்க பற்கள் பதித்ததுபோன்ற தோல்
போர்த்தப்பட்டிருக்கும். பார்வைக்கு இது வெல்வெட் போன்ற தோற்றத்தைத் தரும்.
போர்த்தப்பட்டிருக்கும். பார்வைக்கு இது வெல்வெட் போன்ற தோற்றத்தைத் தரும்.
மட்டி உழுவையின் முதுகுத்தூவிகள் சுறா மாதிரி உயரமாவை. இதனால்
‘சுறாத்தூவி உழுவை‘ என்ற பெயரும் கூட மட்டி உழுவைக்கு உண்டு.
இந்த முக்கோணத் தூவிகளில் இரண்டாவது தூவி, முதல் தூவியை விட
சற்று சிறியது. வலிமையான மட்டிஉழுவையின் வால், அதன் உடல்முன்பாதியை விட நீளமானது. வாலின்
மேற்புறதூவி, சுக்கான் தூவியை விட பெரியது.
குட்டியாக இருக்கும்போது பழுப்பு வண்ணமாக இருக்கும் மட்டி உழுவை
வளர்ந்ததும், வெளிறிய சாம்பல் நிறத்துக்கு மாறும். குட்டியாக இருக்கும் போது இதன் இருகண்களுக்கும்
இடையே தொடுபாலம் போல விளங்கும் கரும்பட்டைகள் வயதானதும் வெளிரத் தொடங்கும்.
மட்டி உழுவையின் பக்கத்தூவிகளில், நீலவிளிம்பிட்ட கரும்புள்ளிகளும்,
முதுகுத் தூவிகளில் வெண்புள்ளிகளும் காணப்படும்.
மட்டி உழுவை 2.9 மீட்டர் நீளம் வளரலாம். இதன் நிறை 135 கிலோ.
எல்லா உழுவைகளையும் போலவே மட்டி உழுவையும், ஆழ்கடலைத் தவிர்த்து,
ஆழம் குறைந்த மணற்பாங்கான கடல்பகுதியில், பார்களை அண்டி வாழும். மணலைக் கிளறி இரைபிடிக்கும்.
வலிமையாக நீந்தக்கூடிய மட்டி உழுவை, இரவுநேரத்தில் அதிகம் நடமாடும். ஒரு மீட்டர் முதல்
20 மீட்டர் ஆழத்தில் இது அதிகம் சுற்றித்திரியும்.
மட்டிஉழுவையின் கண்கள், ஏறத்தாழ மனிதர்களின் கண்களைப் போன்றவை.
ஆனால், மட்டி உழுவையின் வாய்க்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல்
தலையின் மேற்பாதியில் கண்கள் அமைந்திருப்பதால், மோப்பத் திறனால் இது இரையைப் பிடிக்கும்.
மட்டி உழுவையின் அலைவரிசைப் போன்ற தட்டைப்பற்கள், கடல்தரையில் பதிந்திருக்கும், நண்டு, அடல்மீன், கணவாய் போன்றவற்றை, காஃபி இயந்திரம் போல அரைத்துத் தள்ளக்கூடியவை. முள்போர்த்திய
தலையால் இரையை முட்டிமுட்டி அதை வாய்க்குள் கொண்டு வந்து இது இரையாக்கும்.
மட்டி உழுவையின் முதன்மை உணவு அடல்மீன்கள் (Sole). மட்டி உழுவையின்
முதன்மை எதிரி வரிப்புலியன் சுறா. இதன் முள்வரிசை கொண்ட தலை, எதிரியிடம் இருந்து தற்காத்துக்
கொள்ள உதவுகிறது.
உழுவைகள் பொதுவாக மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடி ஒளியக் கூடியவை.
அந்த வரிசையில் சற்று வித்தியாசமானது மட்டி உழுவை.
கொசுறு தகவல்: மட்டி உழுவை 2 முதல் 11 குட்டிகளைப் போடக்கூடியது.
வணக்கம் அண்ணா இந்த மட்டிஉழுவை அம்மணி உழுவை போல உண்ண தகுந்த மீன் இல்லையா தண்ணீருக்கு வெளியே கொண்டுவந்தால் குழைந்துவிடும் தன்மை கொண்டதா?
ReplyDeleteஇது அம்மணி உழுவை போலவே உடல் முழுவதும் புள்ளி காணபடுகிறதே
வணக்கம் தம்பி. தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது போல இது மிகவும் தாமதமான பதில். மன்னிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteமட்டி உழுவை 32 கிலோ வரை எடையுள்ளது. ஆனால், அதன் வால்பகுதியில் மட்டுமே உண்ணத்தகுந்த அளவுக்கு சிறிதளவு இறைச்சி இருக்கும். மட்டி உழுவையின் தோலை உரிக்க 3 மணிநேரம் வரை ஆகும்.
மேலும், மட்டி உழுவை அதன் தோல்வழியாக சிறுநீரை வெளிச் செலுத்தும் என கருதப்படுகிறது. இதனால் துர்நாற்றம் மிகுந்த மட்டி உழுவையை யாரும் உண்ண விரும்ப மாட்டார்கள். தங்கள் கேள்விக்கு நன்றி.