கச்சு உழுவை (Atlantic Guitarfish) (Rhinobatos
lentiginosus)
உழுவைகளில் சிறிய இனம் கச்சுழுவை அல்லது கச்சு உழுவை. ஆழ்கடல்களைத்
தவிர்த்து, கரைக்கும் 90 அடி ஆழத்துக்கும் இடையே கச்சு உழுவை காணப்படும். வாலை ஆட்டிஆட்டி
சுறாவைப் போலவே இது நீந்தும். மற்ற உழுவைகள், திருக்கைகளைப் போல இல்லாமல் தலையை சற்றுத்
தூக்கியபடி நீந்துவது கச்சு உழுவையின் பழக்கம்., திருக்கைகளைப் போல கடலடி மணலில் கச்சு
உழுவை புதையவும் செய்யும்.
இந்த மீனின் மேற்பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறம். அடிவயிறு
வெள்ளை அல்லது வெளிர்மஞ்சள். உழுவைக்களுக்கே உரித்தான விதத்தில் வாலில் பின்னிரு தூவிகள்
காணப்படும். 56 முதல் 80 மொண்ணைப் பற்களும் கச்சு உழுவைக்கு உண்டு. கச்சு உழுவையின்
வாலில் முள் எதுவும் இருக்காது.
கச்சு உழுவையின் முதன்மை அடையாளம், அதன் முகத்தின் நுனியில்
V வடிவில் உள்ள ஒளிஊடுருவும் கண்ணாடி போன்ற இரு பகுதிகள்தான். பனை நுங்கு போல இவை தோற்றம்
தரும் இந்த ஒளி ஊடுருவும் பகுதிகளால், கச்சு உழுவைக்கு என்ன பயன் என்பதை, அறிவியல்
உலகம் இதுவரை விளக்கவில்லை.
கடலடியில் நண்டு, சிப்பி, இறால் போன்றவற்றை உண்ணும் கச்சு உழுவை,
மனிதர்களைக் கண்டால் விலகியோடும். கச்சு என்றால் தமிழில் கசப்பு என்ற பொருளும் உண்டு.
கச்சு உழுவை மிகவும் உண்ணத்தக்க மீன் அல்ல. சற்று கசப்பான மீனினம் இது. அதிலும் குறிப்பாக
கச்சு உழுவையின் தோலை அகற்றும்போது, தப்பித் தவறி அதன் குறிப்பிட்ட சில நரம்புகளில்
வெட்டுப்பட்டால், கச்சு உழுவை, வேம்பு போல இன்னும் கசப்பானதாக மாறி விடும்.
No comments :
Post a Comment