Monday, 29 May 2017

பெருங்கணவாய் (Giant Squid)

பிரம்மாண்ட பீலிக்கணவாய்…
வட்டக்கண்கள்.. எட்டுக்கால்கள்…
கடலில் நீந்திய களேபரம்..
ஆம்னி (Omni) பஸ்சை நமக்கு நல்லாவே தெரியும். ஆனா, ஆக்டோபஸைத் (Octopus) தெரியுமா? அதுவும் ஒருவகை பஸ்தான்னு நினைச்சுறாதீங்க. கடல்ல வாழும் கணவாய்க்குத்தான் ஆக்டோபஸ்ஸுன்னு பேரு. அதில் ஒருவகைதான் பிரம்மாண்டமான பீலிக்கணவாய் (Giant Squid). ஜப்பான் கடலை அப்படி ஒரு பிரம்மாண்ட பீலிக்கணவாய் எப்படி கலக்கியதுன்னு இப்பப் பார்க்கலாம்..

ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோ. இங்கே உள்ள டோயாமா (Toyama) வளைகுடா பகுதிக்கு ஓர் அழையா விருந்தாளி வந்திருந்தார். அவர் வேற யாருமில்லைங்க..12 அடி நீளத்தில் இருந்த பெரிய பீலிக்கணவாய்த்தான் அந்த விருந்தாளி.
ஆக்டோபஸ்ங்கிற பீலிக்கணவாயில் ஒருவகையானது ஸ்குயிட் (Squid). நம்ம தமிழ்மொழியில் அதை பீலிக்கணவாய்ம்பாங்க.
8 பெரிய தும்பிக்கைகளுடன் நீளவாக்கில் இது அறுபதடி நீளம் வரை வளரக்கூடியது. அப்படி ஒரு பீலிக்கணவாய்க் குட்டிதான், டோயாமா (Toyama) வளைகுடா பக்கம் வந்து, அங்கே கடல்ல நீந்திக்கிட்டிருந்தவங் களுக்கு ஒரு ‘ஹலோ‘ சொன்னது.
அகினோபு கிமுரா (Akinobu Kimura)ங்கிற ஜப்பான்காரர் பலே கில்லாடி. இந்த வாய்ப்பை அவர் சரியா பயன்படுத்திக்கிட்டார். நீர்மூழ்கி உடைகள், கடலுக்குள் படம் பிடிக்கிற காமிராவெல்லாம் விற்கிற அவர், நீர்புகாத காமிரா துணையுடன் கடலுக்குள் குதிச்சு, பீலிக்கணவாயைப் பின்தொடர்ந்து படம் பிடிக்க ஆரம்பிச்சார்.
கணவாய்க்கு அவரை ரொம்ப பிடிச்சுப்போச்சோ என்னவோ? 8 கால்களை வைச்சு அவரை வளைக்கப் பார்த்தது. அதோடு ‘குபுக்‘குன்னு நீல மையையும் கக்கியது. எப்படியோ அதன் அன்புப் பிடியில் சிக்காமல் தப்பிப் பிழைச்சு, அதை ஆழ்கடல் பக்கமா விரட்டினதாச் சொல்றாரு அகினோபு கிமுரா.
இந்த வகை பெரும் பீலிக்கணவாய்கள், கடலுக்கு அடியில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் வாழக்கூடியவை. நம்மை மாதிரி மனிதக்கண்களில் இவை  மாட்டுறதே அதிசயம். ஒரு ஆம்னி பஸ் அளவுள்ள இந்த குட்டிக் கணவாய், ஜப்பான் நாட்டை எட்டிப்பார்த்துட்டு போனதால, ஜப்பான் முழுக்க இப்ப இந்த குட்டிக் கணவாயைப் பற்றித்தான் பேச்சு.
 
இப்ப விஷயத்துக்கு வருவோம்…
பெருங்கடல்களில் திமிங்கிலம் அளவுக்குப் பெருங்கணவாய்கள் உண்டு என்பதை ஆரம்பத்தில் சிலர் நம்பவே இல்லை. அது ஏதோ புராண கால புளுகு என்றே நினைத்து வந்தார்கள்.
ஆனால், 1925ஆம் ஆண்டு ஒரு ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் வயிற்றில் ஒரு பெரிய பீலிக்கணவாயின் 2 தும்பிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்ட போதுதான், பெரும்பீலிக்கணவாய் என்று ஒன்று உண்டு என உலகம் நம்ப ஆரம்பித்தது. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் உள்ள கடற்கரையில் பேருந்து அளவுக்கு மிகப்பெரிய பீலிக் கணவாய் ஒன்று இறந்த நிலையில் கரைஒதுங்கியபோதுதான் இவ்வளவு பெரிய பெருங்கணவாய்களும் கடலில் இருப்பது உறுதியானது.
2004ஆம் ஆண்டுதான் உயிருள்ள ஒரு பெருங்கணவாயின் ஒளிப்படம் முதன்முதலாக எடுக்கப்பட்டது.
நன்கு வளர்ந்த பெருங்கணவாய், குறுக்குவாக்கில் ஒரு மீட்டர் நீளமும், அடி முதல் நுனிவரை 8 மீட்டர் நீளமும் இருக்கலாம்.
கணவாய்களின் கால்களுக்கே உரித்தான வட்டவடிவ உறிஞ்சான்கள்
பெரும் பீலிக்கணவாய்க்கும் உண்டு. இந்த உறிஞ்சானைப் பயன்படுத்தி தோசைக்கல் முதல் உழவுஇயந்திர சக்கரம் அளவுக்கு பெரிய வட்டவடிவ காயங்களை பீலிக்கணவாயால் ஏற்படுத்த முடியும்.
சிறுகணவாய்கள், இரவு நேரங்களில் படகுகளில் ஏறி பூனைபோல நடைபழகலாம். அதுவே, இருபதடி நீளம், ஒரு டன் எடைகொண்ட பீலிக்கணவாயால், கடலுக்குள் இருந்தபடி ஒரு பெரிய படகை கால்களால் கவ்வி, அதை கடலுக்குள் இழுத்துக் கொள்ள முடியும்.
இவ்வளவு பெரிய உடலுள்ள பெரும் பீலிக்கணவாய்கள், ஏனோ மனிதக் கண்களின் படாமல் மறைந்து வாழ்வதையே விரும்புகின்றன.
ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் முதன்மை இரை இந்த பெரும் பீலிக் கணவாய்கள்தான்.
இந்தக் கணவாய்களைப் பிடிக்க ஸ்பெர்ம் திமிங்கிலம் 2 மைல் ஆழத்துக்குக் கூட சென்று, அங்கே ஒன்றரை மணிநேரம் வரை தங்கியிருக்கும்.
சில பீலிக்கணவாய்கள் ஏறத்தாழ ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் அளவில் கூட இருக்கும். அதன் கண்கள் மட்டும் ஓர் உணவுத்தட்டு அளவுக்குப் பெரிதாக இருக்கும். இரைதேடிச் செல்லும் திமிங்கிலம், கணவாயைக் கண்டதும், அதை விழுங்க முயலும். கணவாய் மட்டும் சளைத்ததா என்ன? 8 கால்களாலும் திமிங்கிலத்தின் உடலை இறுகப்பிடித்துக் கொண்டு விழுங்கப்படாமல் அது தப்பிக்கப் பார்க்கும். இந்த இரு பேருருவங்களுக்கும் இடையில் கடலடியில் நடக்கும் சண்டை, மனிதக் கண்கள் எதுவும் பார்க்க முடியாத சண்டை.
ஸ்பெர்ம் திமிங்கிலங்களுக்குப் பற்கள் இருப்பதால், நேரம் வாய்க்கும் போதெல்லாம் அது பீலிக்கணவாயின் தும்பிக்கைகளைத் துண்டித்து விழுங்கும். பதிலுக்கு, பீலிக்கணவாய், அதன் பெரிய தும்பிக்கைகளில் உள்ள வட்டவடிவ உறிஞ்சான்களால், வண்டிச்சக்கரம் அளவுக்குப் பெரிய காயங்களைத் திமிங்கிலத்துக்கு ஏற்படுத்தும். இந்த மரணப் போராட்டத்தில் வலிவுள்ளது வெல்லும்.
படகோனியா பல்மீன்
சரி. ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் இரை பெரும் பீலிக்கணவாய். அப்படியானால் பெரும் பீலிக்கணவாய்களின் இரை என்ன? சூரை மீன், படகோனியா பல்மீன் போன்றவையே பெரும் பீலிக்கணவாய்களின் இரை.

விலை உயர்ந்த இந்த வகை படகோனியா (Patagonia) பல்மீன்களை ‘வெள்ளைத் தங்கம்‘ என்பார்கள். ‘படகோனியா மீன்‘ எனப் பெயர் எடுத்ததால் இந்தவகை மீன்கள் ஆர்ஜென்டினா நாட்டு கடல்பகுதிகளில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலக உருண்டையின் தென்முனை கடலில், ஏன் இந்தியப் பெருங்கடலின் தென்பாதியிலும் கூட இந்த மீன்கள் காணப்படுகின்றன. 

Monday, 22 May 2017

கொண்டை கிளிஞ்சான் (Humphead Parrotfish)



கிளி போன்ற அலகு கொண்ட மீன்களான கிளிஞ்சான்களில் (Parrotfish)
மிகப்பெரியது கொண்டை கிளிஞ்சானே. ஒரு சில கிளிஞ்சான்கள் நாய் அளவுக்கு வளரக்கூடியவை.
பச்சைக்கிளி போலவே இச்சைக்குரிய பச்சை நிறம் கொண்ட மீன் இது. மற்ற கிளிஞ்சான்களைப்போல கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் எதுவும் கொண்டைக்கிளிஞ்சானிடம் இல்லை.
Bolbometopon muricatum என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் கொண்டைக் கிளிஞ்சான், பார்கள் மற்றும் கடல்கோரைகளின் நடுவே வாழக்கூடியது.
எப்போதும் ஏறத்தாழ 75 மீன்கள் கொண்ட கூட்டமாகவே இது திரியும்.
4.3 அடி நீளமும், 46 கிலோ வரை எடையும் இருக்கக் கூடி மீன் இது. மெதுவாக வளர்ந்து, நீண்டகாலம் வாழக்கூடியவை கொண்டைக் கிளிஞ்சான்கள். 40 ஆண்டுகாலம் வரை உயிர்வாழும்.
கொண்டைக்கிளிஞ்சானின் முதன்மை அடையாளம், அதன் செங்குத்துத் தலையில் உள்ள புடைப்பு போன்ற வீக்கம்தான். சிறுமீன்களுக்கு இந்த நெற்றிப் புடைப்பு இருக்காது. வளர்ந்த பிறகே புடைப்பு உருவாகும். தலையில் உள்ள இந்த புடைப்பு காரணமாகவே கொண்டைக்கிளிஞ்சான்என்ற பெயர் இந்த வகை மீனுக்கு இலங்குகின்றது.
எல்லா வகை கிளிஞ்சான்களையும் போலவே கொண்டைக்கிளிஞ்சான் மீனுக்கும் பார்கள்தான் உணவு. கிளி மாதிரியான அலகால், பார்களில் உள்ள Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை ஓட்டுடன் இது கொறித்து உண்ணும். பார்களின் மேல் படியும் வண்டல், கசண்டுகள், பாசிகளையும் இது உணவாக்கும்.
கொண்டைக் கிளிஞ்சான் அதன் கிளி போன்ற அலகால் பார்களைக் கொறிக்கும் ஓசை, நாம் காதால் கேட்கக் கூடிய ஓசை.
பெரிய தலையால் இது பார்களை முட்டி உடைத்துத் தூளாக்கி, பின் உடைந்த பார்த்துண்டுகளை வாயில் இட்டு உண வாக்கும். அலகின் பின்புறம் அடித்தொண்டையில் உள்ள பல்லால் இரையை பசைபோல அரைத்து கூழாக்கி உண்ணும். இதன் கழிவு வெண்மணலாக வெளியேறும்.
நிலவுபோன்ற வெண்மணல் விரிந்த உலகக் கடற்கரைகள் அனைத்தும் ஒருவகையில் பார்த்தால் கிளிஞ்சான் மீன்களில் கழிவுகள்தான் என்பது வியக்க வைக்கும் உண்மை.
தலையால் பார்களை முட்டி உடைப்பதுடன், இதே தலையால் ஆண் கொண்டைக் கிளிஞ்சான்கள், ஆடுகள் போல முட்டிமுட்டி சண்டையிடுவதும் உண்டு. மீன் கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காகவும், மனம் விரும்பிய பெண்மீனை அடைவதற்காகவும் இந்த சண்டை நடக்கலாம்.
கொண்டைக் கிளிஞ்சான் மீன்கள், இரவில் கூட்டமாகவே தூங்கும். குறிப்பிட்ட ஒரு குகை, அல்லது மூழ்கிய படகு போன்றவை இவற்றின் படுக்கை அறைகள். கடலடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தையே தூங்கும் இடமாகப் பாவிப்பது கொண்டைக் கிளிஞ்சான் மீன்களின் வழக்கம். இளம் கொண்டைக் கிளிஞ்சான்கள், சற்று ஆழமான கடலைத் தவிர்த்து கடலோர கடற்புற்களின் நடுவே வாழும்.

கொண்டைக்கிளிஞ்சான் உள்பட எந்த வகை கிளிஞ்சானாலும் கடற்பார்கள் அழிவதில்லை. அவை செறிவுடன் வளரவும், கடலில் புதிய பார்கள் தோன்றவும் கிளிஞ்சான்கள் உதவுகின்றன. (கிளிஞ்சான்கள் பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் ஒரு பதிவு உள்ளது.)

Tuesday, 16 May 2017

கச்சு ழுவை (Atlantic Guitarfish) (Rhinobatos lentiginosus)

 
உழுவைகளில் சிறிய இனம் கச்சுழுவை அல்லது கச்சு உழுவை. ஆழ்கடல்களைத் தவிர்த்து, கரைக்கும் 90 அடி ஆழத்துக்கும் இடையே கச்சு உழுவை காணப்படும். வாலை ஆட்டிஆட்டி சுறாவைப் போலவே இது நீந்தும். மற்ற உழுவைகள், திருக்கைகளைப் போல இல்லாமல் தலையை சற்றுத் தூக்கியபடி நீந்துவது கச்சு உழுவையின் பழக்கம்., திருக்கைகளைப் போல கடலடி மணலில் கச்சு உழுவை புதையவும் செய்யும்.

இந்த மீனின் மேற்பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறம். அடிவயிறு வெள்ளை அல்லது வெளிர்மஞ்சள். உழுவைக்களுக்கே உரித்தான விதத்தில் வாலில் பின்னிரு தூவிகள் காணப்படும். 56 முதல் 80 மொண்ணைப் பற்களும் கச்சு உழுவைக்கு உண்டு. கச்சு உழுவையின் வாலில் முள் எதுவும் இருக்காது.
கச்சு உழுவையின் முதன்மை அடையாளம், அதன் முகத்தின் நுனியில் V வடிவில் உள்ள ஒளிஊடுருவும் கண்ணாடி போன்ற இரு பகுதிகள்தான். பனை நுங்கு போல இவை தோற்றம் தரும் இந்த ஒளி ஊடுருவும் பகுதிகளால், கச்சு உழுவைக்கு என்ன பயன் என்பதை, அறிவியல் உலகம் இதுவரை விளக்கவில்லை.

கடலடியில் நண்டு, சிப்பி, இறால் போன்றவற்றை உண்ணும் கச்சு உழுவை, மனிதர்களைக் கண்டால் விலகியோடும். கச்சு என்றால் தமிழில் கசப்பு என்ற பொருளும் உண்டு. கச்சு உழுவை மிகவும் உண்ணத்தக்க மீன் அல்ல. சற்று கசப்பான மீனினம் இது. அதிலும் குறிப்பாக கச்சு உழுவையின் தோலை அகற்றும்போது, தப்பித் தவறி அதன் குறிப்பிட்ட சில நரம்புகளில் வெட்டுப்பட்டால், கச்சு உழுவை, வேம்பு போல இன்னும் கசப்பானதாக மாறி விடும்.

Wednesday, 10 May 2017

பெருஞ்சுறா (White Shark) (Carcharodon Carcharias)

கொன்றுண்ணி சுறாக்களில் மிகப்பெரியது பெருஞ்சுறா எனப்படும் வெள்ளை சுறா. இதற்கு முண்டஞ்சுறா என்றொரு பெயரும் உண்டு. கடலில், இரையைக் கொல்லும் வேட்டை மீன்களில் மிகப்பெரியதும் பெருஞ்சுறாதான்.
சுறாக்களின் படிவரிசைப் பட்டியல்படி பார்த்தால் பெருஞ்சுறாவைவிட பெரியவை இரண்டே சுறாக்கள்தான். ஒன்று அம்மணி உழுவை எனப்படும் Whale Shark. மற்றது மேய்ச்சல் சுறா எனப்படும் basking Shark. இந்த இரண்டு அண்ணன்களுமே அறவழியில் நடக்கும் அருளாளர்கள். இவர்கள் பெரும் ரத்தக்களறிகளில் ஈடுபடாமல் கடல்கவுர்களை சிறுமீன், கடற்பறவைகளை உண்டு வாழ்பவர்கள். இதனால், கடலில் இரையைக் கொன்றுண்ணும் சுறாக்களில் மிகப்பெரிய சுறா என்ற பட்டம் இயல்பாக பெருஞ்சுறாவுக்கே உரித்தானது.

பெருஞ்சுறா, 3 ஆயிரம் ரம்பப் பற்கள் கொண்ட ஆபத்தான ஒர் கடல் உயிர். பெருஞ்சுறாவின் அறிவியல் பெயரான Carcharodon Carcharias என்பதுகூட கூரிய, ஒழுங்கற்ற ஓரம்வெட்டும் பற்கள் கொண்டஎன பெருஞ்சுறாவின் பற்களைத்தான் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறது.
பெருஞ்சுறாவின் நீளம், கிட்டத்தட்ட ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் காரின் நீளம். எடை ஏறத்தாழ 2,268 கிலோ. பெருஞ்சுறாக்களில் ஆணை விட பெண்ணே நீளமானது, பெரியது. 16 மில்லியன் ஆண்டுகளாக பெருங்கடல்களை பெருஞ்சுறா ஆட்சி செய்கிறது. எனினும், பெருஞ்சுறாவின் வரலாறு இன்னும் மிகப்பழைமையானது என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பெருஞ்சுறாவின் மேற்பகுதி பழுப்பு கலந்த கரும்பலகை நிறம். சில சுறாக்கள் ஈயச்சாம்பல் நிறம். பெருஞ்சுறாவின் வயிற்றுப்பகுதி அழுக்கு கலந்த வெள்ளை நிறம். அது என்னவோ தெரியவில்லை? ஆங்கிலத்தில் இதன் அடிவயிற்று நிறத்தையே குறியீடாக வைத்துவெள்ளைச் சுறாஎன பெயர் வைத்து விட்டார்கள்.
சுறாஇனத்தில் பெருஞ்சுறா, ‘மேக்கரல்‘ (Mackerel) என்ற சுறாக்களின் பிரிவைச் சேர்ந்தது. (மேய்ச்சல் சுறா, கீரிப்பல்லன் சுறா போன்ற பல சுறாக்கள் இந்த மேக்கரல் சுறாப்பிரிவில் அடங்கும்) டார்பிடோ (Torpedo) குண்டு போன்ற உடல்வாகும், வலிமை வாய்ந்த வாலும் இந்த மேக்கரல் சுறாக்களின் தனி அடையாளம். இவை பெருஞ்சுறாவுக்கும் உண்டு.
மேக்கரல் பிரிவு சுறாக்களுக்கே உரித்தான விதத்தில் நட்டநடுமுதுகில் முதுகுத்தூவியும், அதையடுத்து ஒரு சிறுதூவியும்,அதன் நேர்கீழே அடிப்புறத்தில் ஒரு சிறு தூவியும் கொண்டது பெருஞ்சுறா. பக்கத்தூவிகள் இரண்டும் அரிவாள் போல வளைந்தவை. இதன் முதுகுத்தூவி கடல்மட்டத்தில் ஒரு கத்தியைப் போல நீரைக்கிழித்தபடி முன்னேறி வரக்கூடியது.
பெருஞ்சுறாவின் உடல் Denticle
எனப்படும் முட்தோலால் மூடப்பட்டது. மேக்கரல் பிரிவு சுறாக்களுக்கே உரித்தான வேகமும், கடுமையும் பெருஞ்சுறாவுக்கும் உண்டு.

திறந்தவெளி பெருங்கடல் மீனான பெருஞ்சுறா, மிக அடி ஆழத்தில், அதாவது 3 ஆயிரத்து 900 அடி வரை சென்றுவரக்கூடியது. கடவுச்சீட்டு எதுவுமின்றி கண்டம் விட்டு கண்டத்துக்கும், நாடுவிட்டு நாடுகளுக்கும் பெருஞ்சுறா செல்லக்கூடியது. 12 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவு வரை இது வலசை போவது கண்டறியப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் இருந்து ஹவாய்த் தீவுகளுக்கோ, அல்லது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கோ பயணப்படுவது பெருஞ்சுறாக்களுக்கு ஒரு பெரிய வேலையே இல்லை.
ஒரு சாவிக் கொத்தில் தொங்கும் பலவகை சாவிகளைப் போல, பல்வேறு வகையான வேட்டைத் தந்திரங்களைக் கொண்ட மீன் பெருஞ்சுறா. கடலில் இது நீந்திவரும்போது இதன் உடல் வண்ணம் அருமையாஉருமறைப்பாகத் திகழும். எச்சரிக்கை எதுவும் செய்யாமல் எதிரியைத் தாக்கக் கூடிய மீன் இது.
இரைஉயிர் கடல்மட்டத்தின்மேல் இருந்தால் கீழிருந்து இரையை நோக்கி மணிக்கு 56 கிலோ மீட்டர்வேகத்தில் மேலேறி, இரையைக் கவ்வியபடியோ அல்லது இரையை மூக்கால் தட்டிவிட்டோ, கடல்மட்டத்தை விட பத்தடி உயரத்துக்கு மேல் பெருஞ்சுறா பாயக்கூடியது. விமானம் ஒன்று கடலில் இருந்து வெளிக்கிளம்புவது மாதிரியான காட்சி இது. வண்டிச்சக்கரம்போல பெருஞ்சுறா சுழன்று விழவும் செய்யும். அப்போது குழல்விளக்கு போல கடல்நீர் தெறிப்பது கண்கொள்ளா அழகு.
இவ்வளவு பெரிய உடலுடன் பெருஞ்சுறா இறைந்து விழுவது பெரும் வியப்பு என்றால், பெருஞ்சுறாவால் பந்தாடப்பட்ட சூரை, கட்டா, பாரை போன்ற மீன்கள் 80 அடி உயரத்துக்கு மேலேபறந்துமீண்டும் கடலில் வந்து விழுவது அதைவிட வியப்பானது. இந்தத் தாக்குதலில் சிக்கி குற்றுயிராக அல்லது செத்து மிதக்கும் மீன்களை எந்தவித பரபரப்பும் இன்றி பெருஞ்சுறா அமைதியாக நீர்மேல் வந்து உணவாக்கும்.
அரைகுறை இருள் சூழ்ந்த புலர் காலைப்பொழுதே பெருஞ்சுறாவுக்குப் பிடித்தமான வேட்டை நேரம். ஆதவன் உதிக்கும் அதிகாலையில் இரு மணிநேரங்கள் பெருஞ்சுறா வேட்டையில் ஈடுபடும்.
சூரை, திருக்கை, ஓங்கல், ஆமை போன்றவற்றுடன், இரை எதுவும் கிடைக்கா விட்டால், இறந்த திமிங்கிலங்களையும் பெருஞ்சுறா உணவாக்கிக் கொள்ளும்.
திமிங்கிலங்களின் எண்ணெய்க்கொழுப்பு நிறைந்த மேல் உடல் பெருஞ்சுறாவின் விருப்ப உணவு. ஆனால், உயிருள்ள திமிங்கிலங்களை இது தாக்கியதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
அதேவேளையில், தன்னினத்தைச் சேர்ந்த சுறாக்களை கொன்றுதின்னும் பழக்கம் பெருஞ்சுறாவுக்கு உண்டு. ஒரே ஆண்டில் 11 டன் எடையுள்ள உணவை பெருஞ்சுறா அரவாக்கக் கூடியது. ஆனால், வயிறு நிரம்ப இரை தின்றபின் 3 மாத காலத்துக்கு உணவு எதையும் உண்ணாமல் பெருஞ்சுறாவால் தாக்குப் பிடிக்கவும் முடியும். இரை கிடைக்காத பொழுது இது இறந்த திமிங்கிலங்களை உணவாகக் கொள்ளும்.
மனிதர்களை அதிகம் தாக்கும் சுறா, பெருஞ்சுறாதான். மனிதர்கள் சுறாக்களின் இயற்கை உணவு இல்லை என்ற நிலையில், கடலில் நீந்தும் மனிதர்களைஒரு காக்கா கடி‘ (Sample bite) கடித்து சுவை பார்ப்பது பெருஞ்சுறாவின் பழக்கம். ஆனால் பெருஞ்சுறாவின் இந்த சிறியமாதிரி கடிமனிதர்களுக்குப் பெருங்கடியாக மாறி ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
பெருஞ்சுறாவில் பெண்சுறாக்கள் இனப்பெருக்கக் காலத்தில் முதுகுத் தூவிகளில்பற்குறிகளுடன்காணப்படும். காதல் உறவின்போது, ஆண் சுறா பெண்சுறாவின் தூவியைக் கடித்துப்பிடித்து வசமாக்குதல் வழக்கம்.
காயங்களுடன் காணப்படும் கர்ப்பமான பெருஞ்சுறா, 11 மாத கர்ப்பத்துக்குப் பின் 2 முதல் 12 குட்டிகளை ஈனும். தாயின் கருவறையில் இருக்கும்போது வளர்ந்த பெரிய குட்டிகள், சிறிய குட்டிகளைத் தின்னும் Oophagy என்ற வழக்கம் பெருஞ்சுறா குட்டிகளிடமும் உண்டு.
வெப்ப ரத்தம் கொண்ட மீனான பெருஞ்சுறா, சூழவுள்ள கடல்நீரின் வெப்பத்தைக் காட்டிலும் தன் உடல்வெப்பத்தை அதிகரிக்க வல்லது. இந்த உடல்வெப்பநிலை கடலில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் விரையவும், 56 கிலோ மீட்டர் வேகத்தில் திடீரென துள்ளிக்கிளம்பி வேட்டையாடவும் பெருஞ்சுறாவுக்கு உதவுகிறது.
உடலை நெளித்தும், தாடைகளை அசைத்தும் பெருஞ்சுறா மற்றொரு பெருஞ்சுறாவுடன் தகவல் பரிமாறும்.
இவ்வளவு பெரிய கடல் ஆளுமையான பெருஞ்சுறாவுக்கும், கடலில் எதிரிகள் உண்டு. அந்த எதிரிக்கூட்டம் பெருஞ்சுறாவைக் கொன்று தின்னவும் கூடியது. பெருஞ்சுறாவையே வேட்டையாடக் கூடிய அந்த மாபெரும் கடல்உயிர் எது என்றால் அது ஓங்கல் இனத்தின் ஒருவகையானகில்லர் வேல்‘ (Killer Whale) ஓங்கல்கள்.
ஒரு கூட்டமாக வரும் இந்த வகை ஓங்கல்கள், பெருஞ்சுறாவை சூழ்ந்து நுட்பத்துடன் தாக்கக் கூடியவை. பெருஞ்சுறா மட்டுமல்ல, எந்த வகை சுறாவாலும் பின்பக்கமாக நீந்த முடியாது. திடீரென நிற்கவும் முடியாது. அதுபோல நீந்தாவிட்டால் சுறாவால் மூச்சுவிடவும் முடியாது. அது மட்டுமல்ல, பெருஞ்சுறாவைப் பொறுத்தவரை அது தலைகீழாகப் புரட்டப்பட்டால் அதனால் மூச்சுவிட முடியாது. ஒருவித அசைவற்ற நிலைக்கு (Tonic Immoblity) பெருஞ்சுறா அப்போது ஆளாகிவிடும்.

எதிரியின் இந்த குறைபாடுகளை அழகாக அறிந்து வைத்திருக்கும் கில்லர் வேல் ஓங்கல்கள், பெருஞ்சுறாவை சூழ்ந்து அதை முன்புறம் முன்னேற விடாமல் நிலைநிறுத்தும். அதை நீந்தவிடாமல் செய்து, பின்னர் முட்டி மோதி பெருஞ்சுறாவை தலைகீழாகப்புரட்டி அதை மூச்சுவிடமுடியாத நிலைக்கு கொண்டு செல்லும். அதன்பின் பெருஞ்சுறாவின் ஈரலை அவை குறிவைக்கும்.
கில்லர் வேல் ஓங்கல்களின் உணவுப்பழக்கம் அலாதியானது. திமிங்கிலக் குட்டிகளை வேட்டையாடினால் திமிங்கிலக் குட்டியின் நாக்கை அவை விரும்பி உண்ணும். அதுபோல பெருஞ்சுறாவை வேட்டையாடினால் இரும்புச் சத்து நிறைந்த அதன் ஈரலே ஓங்கல்களின் விருப்ப உணவு.
21 அடி நீள பெருஞ்சுறா ஒன்றில் 7 ஆயிரத்து 100 பவுண்ட் எடை கொண்ட ஈரல் இருக்க வாய்ப்புள்ளது. அது கில்லர் வேல் ஓங்கல்களின் விருந்தாகும்போது, இறந்த பெருஞ்சுறா பரிதாபமாக கரையொதுங்க வாய்ப்புள்ளது.
பெருஞ்சுறாவைப் பற்றிய இந்த பத்தி மிக நீள்வதால் ஓர் அரிய தகவலுடன் முடித்துக் கொள்வோம்.

பெருஞ்சுறாவை கடலுயிர் காட்சியகம் எதிலும் வளர்க்க முடியாது. அப்படி வளர்க்க முயன்றால், உணவு எதையும் உண்ணாமல் அடம்பிடித்து, சுவரில் முட்டி மோதி பெருஞ்சுறா தனது உயிரை மாய்த்துக் கொள்ளும்.  

Tuesday, 2 May 2017

மட்டி உழுவை (Bowmouth Guitarfish) (Shark ray) (Rhina aneylostoma)



கனடா நாட்டுக்கார்களை, ‘ஸ்வெட்டர் (கம்பளி உடை) அணிந்த மெக்சிகோ காரர்கள்‘ என வேடிக்கையாக அழைப்பதுண்டு. அதேப்போல திருக்கை மீனுக்குத்  ‘தட்டையான சுறா‘ என்று வேடிக்கையான ஒரு பெயர் உண்டு.
இந்த திருக்கையையும், சுறாவையும் கலந்து செய்த கலவைதான் உழுவை மீன் (Guitar Fish).
பட்டை (Bark) என்ற சொல்லில் இருந்து வந்தவைதான் படகு, படங்கு என்ற சொற்கள். பட்டையான துணியைப் படங்கு (பதாகை) என்பார்கள். பட்டையாக இருப்பதால் உழுவை மீனுக்குத் தமிழில் ‘படங்கன்‘ என்ற பெயரும் உண்டு. ஆங்கில இசைக்கருவியான கிதார் போல இருப்பதால் ஆங்கிலத்தில் இது கிடார்மீன் என வழங்கப்படுகிறது.
‘நளியிரு முந்நீர்‘ வலைப்பூவில் நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல சுறாவுக்கும், திருக்கைக்கும் ஆதிமூதாதை ஒரு பழங்கால மீன்தான். அந்த பழங்கால மீனில் இருந்து கிளைத்து வந்தவைதான் சுறாவும், திருக்கையும்.
இந்த இரு இன மீன்களுக்கும் இடையில் ஓர் இணைப்புச் சங்கிலிபோலத் திகழ்பவை உழுவை மீன்கள் (Guitar Fish).
சுறா போன்ற உயர்ந்த முதுகுத்தூவிகள், வலிமையான வால், சுறாபோன்ற
பின்பாதி, அதேவேளையில் திருக்கையைப் போன்ற முகம், முன் உடல் இவைகள்தான் உழுவை மீன்களின் அடிப்படை அங்க அடையாளங்கள்.
உழுவைகளில் பலவகைகள். புள்ளி உழுவை, கச்சுழுவை, பால் உழுவை, கள் உழுவை, பூந்தி உழுவை…. இப்படி உழுவைப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த உழுவை இனத்தில் ஒரு வகைதான் ‘மட்டி உழுவை‘ (Bowmouth guitarfish).
திருக்கை இனத்தைப்போலவே மட்டி உழுவைக்கும், அதன் வாய், செவுள் திறப்புகள் போன்றவை உடலின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும்.
மட்டி உழுவையின் முதன்மை அடையாளம் வில்போல வளைந்த அதன் அரைவட்ட வாய். அடுத்தபடியாக அதன் முகத்து முட்கள்.
பழங்காலத்தில் போர் யானைகளுக்கு முள்பதித்த ‘முகப்படாம்‘ மாட்டுவது போல, மட்டி உழுவையின் முகத்தில் தடித்த முட்களைக் கொண்ட ஒரு ‘முகப்படாம்‘ உண்டு. கண்களுக்கு அருகிலும், அதற்கு சற்று அப்பாலும் இந்த முள்வரிசைகள் காணப்படும்.
மட்டி உழுவையின் உடல் முழுக்க பற்கள் பதித்ததுபோன்ற தோல்
போர்த்தப்பட்டிருக்கும். பார்வைக்கு இது வெல்வெட் போன்ற தோற்றத்தைத் தரும்.
மட்டி உழுவையின் முதுகுத்தூவிகள் சுறா மாதிரி உயரமாவை. இதனால் ‘சுறாத்தூவி உழுவை‘ என்ற பெயரும் கூட மட்டி உழுவைக்கு உண்டு.
இந்த முக்கோணத் தூவிகளில் இரண்டாவது தூவி, முதல் தூவியை விட சற்று சிறியது. வலிமையான மட்டிஉழுவையின் வால், அதன் உடல்முன்பாதியை விட நீளமானது. வாலின் மேற்புறதூவி, சுக்கான் தூவியை விட பெரியது.
குட்டியாக இருக்கும்போது பழுப்பு வண்ணமாக இருக்கும் மட்டி உழுவை வளர்ந்ததும், வெளிறிய சாம்பல் நிறத்துக்கு மாறும். குட்டியாக இருக்கும் போது இதன் இருகண்களுக்கும் இடையே தொடுபாலம் போல விளங்கும் கரும்பட்டைகள் வயதானதும் வெளிரத் தொடங்கும்.
மட்டி உழுவையின் பக்கத்தூவிகளில், நீலவிளிம்பிட்ட கரும்புள்ளிகளும், முதுகுத் தூவிகளில் வெண்புள்ளிகளும் காணப்படும்.
மட்டி உழுவை 2.9 மீட்டர் நீளம் வளரலாம். இதன் நிறை 135 கிலோ.
எல்லா உழுவைகளையும் போலவே மட்டி உழுவையும், ஆழ்கடலைத் தவிர்த்து, ஆழம் குறைந்த மணற்பாங்கான கடல்பகுதியில், பார்களை அண்டி வாழும். மணலைக் கிளறி இரைபிடிக்கும். வலிமையாக நீந்தக்கூடிய மட்டி உழுவை, இரவுநேரத்தில் அதிகம் நடமாடும். ஒரு மீட்டர் முதல் 20 மீட்டர் ஆழத்தில் இது அதிகம் சுற்றித்திரியும்.
மட்டிஉழுவையின் கண்கள், ஏறத்தாழ மனிதர்களின் கண்களைப் போன்றவை.
ஆனால், மட்டி உழுவையின் வாய்க்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் தலையின் மேற்பாதியில் கண்கள் அமைந்திருப்பதால், மோப்பத் திறனால் இது இரையைப் பிடிக்கும். மட்டி உழுவையின் அலைவரிசைப் போன்ற தட்டைப்பற்கள், கடல்தரையில் பதிந்திருக்கும், நண்டு, அடல்மீன், கணவாய் போன்றவற்றை, காஃபி இயந்திரம் போல அரைத்துத் தள்ளக்கூடியவை. முள்போர்த்திய தலையால் இரையை முட்டிமுட்டி அதை வாய்க்குள் கொண்டு வந்து இது இரையாக்கும்.
மட்டி உழுவையின் முதன்மை உணவு அடல்மீன்கள் (Sole). மட்டி உழுவையின் முதன்மை எதிரி வரிப்புலியன் சுறா. இதன் முள்வரிசை கொண்ட தலை, எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது.
உழுவைகள் பொதுவாக மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடி ஒளியக் கூடியவை. அந்த வரிசையில் சற்று வித்தியாசமானது மட்டி உழுவை.

கொசுறு தகவல்: மட்டி உழுவை 2 முதல் 11 குட்டிகளைப் போடக்கூடியது.
பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)

1158. அடலில் நாக்கடல், 1159. மத்தி அடல், 1160. சேத்து அடல், 1161. தம்பானில் புள்ளித் தம்பான், 1162. வாய்மூடி தம்பான், 1163. மாப்பிளை தம்பான், 1164. விலாங்கில் குழிவிலாங்கு, 1165. கிளாத்தியில் சூம்பக்கிளாத்தி, 1166. மை கிளாத்தி, 1167. பன்னிக் கிளாத்தி, 1168. கொப்பரானில் கருங்கொப்பரான், 1169. நீலக் கொப்பரான், 1170. வரிக்கொப்பரான், 1171. காரையில் தடாங்காரை, 1172. கோட்டுக்காரை, 1173. சுட்டுக்காரை, 1174. காசிக்காரை, 1175. பொட்டுக்காரை, 1176. வரிக்காரை, 1177. சுதுப்புக்காரை, 1178. தோக்குக் காரை, 1179. பொளங்காரை, 1180. நூல்வரிக்காரை, 1181. வங்காரை, 1182. கீச்சானில் கட்டக்கீச்சான். 1183. மஞ்சள் கீச்சான், 1184. சூரையில் புளிச்சூரை, 1185. வெள்றா சூரை, 1186. நவரையில் பேய் நவரை, 1187.  பாரையில் ஆசைகாட்டி பாரை, 1188. இரவம்பாரை, 1189. இறாப்பாரை, 1190. தேளம்பாரை, 1191. பட்டிப்பாரை, 1192. நத்தம்பாரை, 1193. விழும்பாரை, 1194. செட்டாம்பாரை, 1195. கெண்டல் மீனில் குரைக்கெண்டல், 1196. பல்லன் கெண்டல், 1197. தும்பிலியில் பெரிய தும்பிலி, 1198. வெட்டத்தும்பிலி, 1199. இளுவை, 1200. அடுப்பூதி….(தொடரும்)