வரிச்சூரை
(Skip jack)
சூரை
எனப்படும் Tuna இனமீன்கள், பெருங்கடல் மாப்பு மீன்கள் (கூட்ட மீன்கள்). சூரை இனத்தில் ஏறத்தாழ 15 இனங்கள். பெரும்பாலும் சூரைகளுக்கு செதிள் கிடையாது. மாங்கு மட்டுமே உண்டு.
சூரையின்
15 இன மீன்களை 3 வகையாகப் பிரிக்கலாம். முதல்வகை நீலச்சூரை அல்லது நீலத்தூவிச் சூரை.
(Bluefin Tuna)
அல்பக்கோர்
(Albacore) எனப்படும் குளிர்கடல் வெள்ளைச்சூரை இந்த முதல் வகையைச் சேர்ந்தது. வெள்ளை
நிற இறைச்சி கொண்ட மீன் என்பதால் வெள்ளைச்சூரை எனவும் அழைக்கப்படுகிறது அல்பக்கோர்.
அல்பக்கோர்
என்ற சொல், குட்டி ஒட்டகம், விலை மதிப்பற்றது (Al bakr, Al bakur) என்ற பொருள்படும்
அரபுச் சொல்லில் இருந்து உருவானது.
பெருங்கண்
(Big eye tuna) சூரைக்கும், இந்த முதல் பட்டியலில் இடமுண்டு. சூரை இனத்தில் இந்த இன
மீன்களே விலை மிக்கவை. சூரை என மதிக்கத் தக்கவை.
இரண்டாவது
வகைப்பாட்டில் கேரை அல்லது கீரை மீன் என அழைக்கப்படும் மஞ்சள்தூவி சூரை (Yellowfin
Tuna) அடங்கும். மஞ்சள்தூவி சூரைக்கு முதுகிலும், அடிப்புறத்திலும் அரிவாள் போன்ற நீளமான
தூவிகள் அமைந்திருக்கும்.
2ஆவது
வகையில் இடம்பெறக்கூடிய இன்னொரு மீன் கருந்தூவி சூரை. நீள்வட்ட வடிவ மீனான இது, சூரை
இனத்தில் சிறியது. கரிய முதுகுள்ள இந்த மீன் 21 கிலோ வரை நிறையிருக்கக் கூடியது.
3ஆவது
வகையில் இடம்பெறும் சூரைகளில் ஒன்று வரிச்சூரை. மற்றது Frigate Tuna எனப்படும் எலிச்சூரை.
இதில்
வரிச்சூரை சிறிய ரக மீன். இதர சூரைகளுடன் ஒப்பிடும்போது இது மூன்றடி வரை நீளம் கொண்டது.
உடல் கீழ்ப்புறத்தில் 4 முதல் 7 வரிகள் இருப்பது இதன் முக்கிய அடையாளம். கருநீல முதுகும்,
வெள்ளிநிற பக்கங்களும் கொண்ட வரிச்சூரை, 8 முதல் 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
வெப்பக்
கடல் மீனான வரிச்சூரை, இரவில் கடல்மேற்பரப்பில் திரியும். பகலில் 850 அடி ஆழம் வரை
செல்லும். கடலோரமும் இது வந்து செல்லும்.
கேரை
மீன், பெருங்கண் சூரைகளுடன் இணைந்து கூட்டமாகத் திரியும் வரிச்சூரை, இதர சூரைகளைப்
போலவே ஒரு கொன்றுண்ணி மீன். கடலின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில்
வரிச்சூரையின் வகிபாகம் மிக முதன்மையானது.
உணவு
சேர் பொருள்களில் ஒன்றான மாசிக் கருவாடு உருவாக்கத்துக்கு வரிச்சூரை மிகவும் உதவுகிறது.
No comments :
Post a Comment