Sunday, 24 January 2016

சிரசு மீன் (தலைமீன், மோளா)


விரிந்து பரந்த பெருங்கடல் பகுதியில் உலவும் வித்தியாசமான மீன் இது. இதன் விநோத உருவ அமைப்பு பார்ப்பவர்களை வியப்படைய வைக்கும்.
ஒரு பெருமீனின் உடலை தனியாகத் துண்டித்து எடுத்தபின் தலைப்பாகம் மட்டுமே எஞ்சியிருப்பது போல சிரசு மீனின் தோற்றம் இருக்கும். தலை மட்டுமே இருப்பது போல மீன் தோன்றுவதால் தமிழில் சிரசு மீன் என இது அழைக்கப்படுகிறது.
சிரசு மீன்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று பத்தடி நீளமும், ஆயிரம் கிலோ எடை வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய மீன். மற்றது இரண்டடி நீளம் மட்டுமே இருக்கக்கூடிய சிறுரக மீன். சிரசு மீனின் வாலருகே மேலும் கீழுமாக இரு நீளத் தூவிகள் உண்டு. மற்றபடி வால்தூவி கூட இந்த மீனுக்குக் கிடையாது.
சிரசு மீனின் தோல் முரடானது. இதன் எலும்பு சட்டகம் முறையாக வளர்ச்சி பெறாத ஒன்று. இந்தவகை மீனின் உடல்பகுதி சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும்.
திறந்த கடல்களில் மிக மெதுவாக நீந்திச்செல்லும் சிரசு மீன், சொறி மீன்களை (Jelly Fish) உணவாகக் கொள்ளும். பறவைச் சொண்டு (அலகு) போன்ற வாயால், கடல்மேல் மிதக்கும் கவுர்களையும் இது உணவாகக் கொள்ளும்.
சிரசு மீன், கிளாத்தி (Trigger) மற்றும் பேத்தா (Puffer) மீன்களுக்கு உறவுக்கார மீன்.
,சிரசு மீன்களில் சிறிய மீன்கள், செங்குத்தாக மற்ற மீன்களைப் போலவே நீந்தக்கூடியவை. வளர்ந்த பெரிய மீன்கள் நீந்தாமல், நீர்ப்பரப்பின் மேல் மிதந்தபடி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படக் கூடியவை.

இரண்டரை அடி நீள சிறுரக சிரசு மீன்கள், சிறுகூட்டமாகத் திரியும். ஹவாய்த் தீவுப் பகுதி மக்கள் இதை புனிதமான மீனாகக் கருதுகிறார்கள். தமிழ்கூறும் நல்லுலகுக்கு சிரசு மீன் அரிதான மீன் என்றாலும், அந்நியமான மீனல்ல. ஈழத்தின் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் ஒருமுறை சிரசு மீன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment