Tuesday, 12 January 2016

சுங்கான்

கெழுது இனத்தில் ஏறத்தாழ 75 வகைகள். அதில் பார்களில் வாழும் ஒரே கெழுதினமாகக் கருதப்படுவது சுங்கான் மீன். ஓரடி நீள உடலும், அதில் அணில் போன்ற வரிகள் இருப்பதும் இந்த மீனின் முதன்மை அடையாளம்.
Coral Cat fish என அழைக்கப்படும் சுங்கான் மீன் கரும்பழுப்பு நிறமும், வெள்ளை நிற வயிறும் கொண்டது. இளமீன்களில் மஞ்சள் கலந்த வெள்ளைநிற வரிகள் நீளவாக்கில் உடல் முழுவதும் ஓடும். கெழுது இனத்துக்குரிய மீசை சுங்கானுக்கும் உண்டு.

பலமான நீரோட்டம் உள்ள பவழப்பாறைகள் இந்த இன மீனின் விருப்பத் தங்குமிடம். பார் அடுத்த சகதிப்பகுதியிலும் சுங்கான் காணப்படும். இளம் மீன்கள் 6 முதல் 100 மீன்கள் கொண்ட கூட்டமாகத் திரியும்.
இறால், நண்டு, சிறுமீன்கள், கவர் போன்றவை இவற்றின் முதன்மை உணவு. சிறுபந்து போல திரண்டு கூட்டமாகத் திரியும் சுங்கான்கள் கடலடித்தரையைக் கிளறி இரை தேடும். மேல்மட்ட மீன்கள் கீழேயும், கீழ்மட்ட மீன்கள் மேலேயும் இடம்மாறி சகதியைக் கிளறி இரைதேட, இந்தப் பந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.
முதிர் வயதில் சுங்கான் மீன் அதன் கோடுகளை இழந்து சாக்லெட் நிறமாகி விடும். பார்களில் தனித்து வாழும். சுங்கான் மீனின் தூவிப்பகுதிகளில் நச்சுமுட்கள் இருக்கும். பெருங்கடுப்பை உருவாக்கக்கூடியது இதன் முள்குத்து.

சுருட்டு போன்ற நீள்வடிவத்தில் இருப்பதால் சுங்கான் என்ற பெயர் இதற்கு வந்திருக்கலாம்.

No comments :

Post a Comment