Sunday, 9 August 2015

ஃபாவிசம்


7. ஃபாவிசம்

பிந்தைய இம்ப்ரசனிசத்தில் இருந்து தோன்றி குறுகிய காலமே வாழ்ந்த ஒரு கலை இயக்கம் இது. குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், கலை வரலாற்றில் இதன் பதிவு மிக அழுத்தமானது.
ஃபாவிசத்துக்கு முந்தைய ஓவியர்கள், கண்முன் தெரியும் உருவங்களை வண்ணங்களால் பிம்பமெடுத்தார்கள்.
ஹென்றி மாட்டீஸ், ஆந்த்ரே தெரெய்ன், மாரிஸ் தெ விளாமின்ஸ்க் போன்றவர்கள் புகழ்பெற்ற ஃபாவிச ஓவியர்கள்.
இவர்கள் வண்ணங்களுக்கு அவற்றின் இயற்கைக் குணங்களில் இருந்து விடுதலையளித்தார்கள். அதாவது நீலம் என்பது வானத்தைக் குறிக்கும் வண்ணம் என்பதுபோன்ற கட்டுகளை இவர்கள் உடைத்தார்கள்.
இவர்களால் வண்ணங்கள் அவற்றின் பிரதிநிதித்துவ இயல்புகளை இழந்தன.
மாறாக, வண்ணங்களை இவர்கள் பலவித உணர்வுத் தோய்வுகளுக்காக பயனுறுத்தத் தொடங்கினார்கள்.
1905ல் திறந்த ஜன்னல் என்ற ஓவியத்தை ஹென்றி மாட்டீஸ் படைத்தார். வீட்டின் உள்விழும் நிழல்களை அவர் பச்சை நிறத்திலும், ஜன்னலுக்கு வெளியே நீர்நிலையில் தெரிந்த படகுகளின் பாய்மரங்களை சிவப்பு வண்ணத்திலும் தீட்டியிருந்தார்.
அவ்வப் பொருள்களின் இயற்கை நிறங்களை அவர் தேர்ந்தெடுத்துத் தீட்டவில்லை. பார்வைக்கு புலனாகும் வெறும் கட்புலன் வண்ணங்களைத் தேர்வு செய்யாமல், அந்த நேரத்தைய உணர்வுப் பெருக்கின் வெளிப்பாடாக அந்த வண்ணங்களை அவர் தெரிவு செய்திருந்தார்.
அந்த நேரத்திய உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிகாலாக, அதன் அடிப்படையில் அவரது வண்ணத்தேர்வு அமைந்திருந்தது.
வண்ணங்கள் தொடர்பான ஃபாவிச ஓவியர்களின் இந்த அணுகுமுறை, எக்ஸ்பிரசனிசம் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்ஸ்ட்ராக்சனிசத்துக்கான முன்னோட்டமாகவும் அமைந்தது.


No comments :

Post a Comment