Monday, 19 December 2016

பீலிக் கணவாயும், தோட்டுக்கணவாயும்

கணவாய்கள் பொதுவாக அதிக செயல்திறன் கொண்ட, அறிவார்ந்த கடல் உயிர்கள். அதில் பீலிக்கணவாய் என்ற SQUID நீளமான ராக்கெட் போன்ற உடல் கொண்டது. CUTTLEFISH எனப்படும் தோட்டுக்கணவாய் அகலமான குட்டையான உடல் அமைப்பைக் கொண்டது.
இவ்விரு கணவாய்களின் தலையிலும் எட்டு சிறுசிறு கைகளும், 2 நீளமான கைகளும் காணப்படும். நீளக் கைகளின் நுனிகளில் தவறாமல் உறிஞ்சான்கள் இருக்கும்.
இந்த உறிஞ்சான்களை இரைவிலங்கின் மீது இவ்விரு கணவாய்களும் வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அதன்மூலம் இரையை நகர விடாமல் பிடித்துக் கொள்ளும்.
சீண்டப்பட்டால் இவ்விரு கணவாய்களுமே கரும்பழுப்பு நிற மையை பீய்ச்சியடித்து கடல்நீரை கறுப்பாக்கி, தப்பிச் செல்லக்கூடியவை.
இந்த இரு கணவாய்களுமே படுக்கை வசமாக, அழகாக நீந்திச் செல்லக் கூடியவை. உடலின் ஓரங்களில் உள்ள FRILL போன்ற வளைவுநெளிவுகளை அலையைப் போல அசைத்து அசைத்து இவை அழகாக நீந்திச் செல்லும்.
சிபான் (Siphon) என்ற உடல் குழாயில் கடல்நீரை நிரப்பி, அதை வேகமாக வெளியேற்றியும் கணவாய்களால் விரைந்து செல்ல முடியும். முன்னும் பின்னும் கூட கணவாய்கள் நீந்தும்.
இந்த இரு கணவாய்களுக்கும் கிளி போன்ற அலகு உண்டு. அதன்மூலம் இரையை இவற்றால் துணிக்க முடியும். கண்கள் நன்கு மேம்பட்டவை.
கணவாய்களின் தோடு உடலுக்குள் மறைந்திருக்கும்.
பீலிக்கணவாயின் தோடு, மெல்லிய கண்ணாடி போன்ற ஒளிஊடுருவக் கூடியது. இதை பேனா என்பார்கள். கால் அங்குல கனமுள்ள தோல் கொண்டது பீலிக்கணவாய்.
தோட்டுக் கணவாயைப் பொறுத்தவரை, அது, ஏறத்தாழ முக்கால் அங்குல தோல் கொண்டது. தலைப் பகுதி வரிவரியாக காணப்படும். இந்தப் பகுதி நிறம் மாறக்கூடியது.
தோட்டுக் கணவாயின் தோடு, மென்மையானது, கால்சியம் சத்து நிறைந்தது. கோழிப்பண்ணைகளில் கோழிகளின் முட்டை ஓடுகள் கெட்டியாக மாற, இந்தக் கணவாய்த்தோடு கோழிகளுக்குத் தீவனமாக வழங்கப்படுகிறது.
பீலிக்கணவாய், முட்டிக் கணவாய் இரண்டுமே குறிப்பிட்ட காலத்தில் தோடுகளைக் கழற்றக்கூடியவை.

தோட்டுக்கணவாயில் மிகச்சிறியதொரு இனம் முட்டிக் கணவாய்
உடுமீன் அல்லது நட்சத்திர மீன் (STAR FISH)

வட்டவடிமான தட்டையான ஒரு தட்டு. அதிலிருந்து பூவின் இதழ்கள் போல புறப்பட்டு நீளும் தடிமனான ஐந்து கைகள். உடுமீன் அல்லது நட்சத்திர மீனின் பொதுவான அங்க அடையாளம் இதுதான். உடுமீன்களுக்கு ஐந்து கைகள்தான் இருக்கும் என்று சட்டதிட்டம் எதுவும் கிடையாது. 4 அல்லது 6 கைகள் கொண்ட உடுமீன்களும் உண்டு.
உடுமீனின் கை துண்டிக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ந்து விடும் என்பது மட்டுமல்ல, துண்டிக்கப்பட்ட ஒரு கை புதிய ஒரு உடுமீனாக வளரவும் வாய்ப்புண்டு. அதுபோல கையை இழந்த உடுமீனுக்கு மீண்டும் கை முளைக்கவும் வாய்ப்புண்டு.
சிலவகை உடுமீன்களை இரண்டாகப் பிளந்து கடலில் எறிந்தால் அந்த இரு துண்டங்களும் இருவேறு உடுமீன்களாக வளரக்கூடும்.
உடுமீனுக்கு தலை என்று எதுவும் கிடையாது. இதன் கைகளுக்கு அடியில்
எண்ணற்ற, சதைப்பாங்கான, விரல்போன்ற உறுப்புகள் காணப்படும்.
இந்த குழாய் போன்ற கால்களின் ஒவ்வொரு முனையிலும் உறிஞ்சான்கள் இருக்கும். கடல்நீரை உறிஞ்சு வெளியேற்றுவதன் மூலம் உடுமீன்கள், ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த உறிஞ்சுக் கால்கள் மூலம் உடுமீன்களால் நடக்கவும், இரை தேடவும் முடியும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிப்பியை உடுமீன் இறுகப் பற்றி அணைத்துக் கொண்டால் அந்த சிப்பி களைப்படையும் வரை உடுமீன் அதை விடவே விடாது. முடிவில் சலித்துப்போய் சிப்பி வாய் திறக்கும்போது, உடுமீனின் வயிறு அதன் வாய் வழியாக வெளிவந்து சிப்பிக்குள் நுழையும். வயிற்றில் உள்ள சில அமிலங்கள் சிப்பியின் உள்உறுப்புகளை பதமாக்கி உணவாக மாற்றும், சிப்பியின் சதையை உணவாக உண்டபின் உடுமீனின் வயிறு மீண்டும் வாய் வழியே உடலுக்குள் இழுத்துக் கொள்ளப்படும். உடுமீனின் இந்த இரையுண்ணும் பாங்கு மிகமிக அலாதியானது.
உடுமீனில் மிகவும் சிறிய உடுமீன், முழு வளர்ச்சிக்குப்பிறகு கூட 12 மில்லி மீட்டருக்கும் குறைவான குறுக்களவுடன் காணப்படும். மிகப்பெரிய உடுமீன் ஒரு மீட்டர் குறுக்களவு கூட இருக்கலாம்.
உடுமீன்கள் பொதுவாக தெளிந்த மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும், சிலவகை உடுமீன்கள் கண்ணைப் பறிக்கும் கிரிம்சன் அல்லது நீலநிறத்திலும் விளங்கும். உடுமீன்களில் பல ஊன்உண்ணிகள். சிப்பிகளைத் தவிர சிறிய மீன்களையும் இவை இரையாக்கும். உணர்வு உறுப்பு என்று எதுவும் இல்லாவிட்டாலும் தொடு உணர்வால் உடுமீன்கள் இரையை அறியும்.
உடுமீன் வசிக்கும் ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் இறைச்சிக் குழம்பைக் கொட்டினால் மறுகணம் அது சுறுசுறுப்படைவதைக் காண முடியும்.
சிலவகை உடுமீன்கள் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை முட்டையிடக் கூடியவை. கடலில் இடப்படும் இந்த முட்டைகள் வளர்ந்து உடுமீன்களாக மாறுகின்றன.

கரையொதுங்கும் உடுமீன்கள் உலர வைக்கப்பட்டு, அலங்காரப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. உடுமீன், கடல்மூரைகளுக்கு உறவுள்ள உயிர். ஆனால், மூரைகளை இது உணவாக்கக் கூடியது. கடலில் முத்துச்சிப்பிகளுக்கு எதிரிகள் பலப்பல. அந்த எதிரிகள் பட்டியலில் உடுமீனுக்கும் இடமுண்டு.

Saturday, 10 December 2016

பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)


1125. கிளிஞ்சானில் கொண்டைக் கிழிஞ்சான், 1126. விளமீனில் பெருவா விளமீன் (பெரிய வாய் விளமீன்), 1127. கருக்கா விளமீன் (ஊசி போன்ற பற்கள் கொண்டது), 1128. தாடி விளமீன் (காதுபக்கம் பொட்டு உள்ளது. காவல்காரன் விளமீன் என்ற பெயரும் உண்டு), 1129. தெளுவாட்டு விளமீன், 1130. தாழவிளமீன். 1131. தெளிந்த ரோஸ் மிட்டாய் நிறம் கொண்ட மீன் லோமியா. அதில், கிளி லோமியா, கிளிப்பச்சை நிற தூவிகள் கொண்டது. 1132. ராசியா லோமியா (8 முதல் 10 கிலோ வரையுள்ள பெரிய மீன். அழுக்கு சிவப்பு மிட்டாய் வண்ணமாக இது காணப்படும்), 1133. செப்பிலியில் கொண்டை செப்பிலி தெரிந்ததுதான், அதன் இன்னொரு பெயர் கொக்கா செப்பிலி, 1134. மட்ட செப்பிலி, 1135. பொக்குவாயன் செப்பிலி, 1136. கெழுது மீனில் கலிக்கெழுது, 1137. முட்டக் கெழுது (இதன் வாய் V வடிவமானது), 1138. வண்ணக்கெழுது (சாம்பல் நிறத்தது. வயிறு வெள்ளை), 1139. கெழுதில் பெரியது தேடு. அந்த தேடில் நீளமான ஒன்று ஊசித்தேடு. (பழுப்புநிற முதுகும், பொன்னிற வயிறும் 3 கிலோ வரை எடையும் உள்ள மீன் இது), 1140. தடியன் சீலா மீனுக்கு ஊளா என்ற பெயரும் உண்டு. இதே மீனை ஆத்து ஊளா என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 1141. சூரையில் எலிச்சூரைக்கு, உருளன்சூரை என்று ஒரு பெயர் உண்டு. உருளை வடிவம் காரணமாக போத்தல் சூரை என்று இதை அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 1142. சூரையில் கூரிய பல் உள்ள ஒன்று சீலா சூரை. (தொடரும்)

Thursday, 1 December 2016

தேவை கொஞ்சம் மியூக்கஸ்


எவ்ளவோ பண்றோம். இதை பண்ண மாட்டோமா? நாங்க எல்லாம் அப்பவே அப்படி.
இப்படி காலரை கன்னாபின்னான்னு தூக்கி விட்டு பெருமைப்பட்டுக்கிறாங்க ஆஸ்திரேலியாவில் உள்ள சில கடல் ஆராய்ச்சியாளர்கள்…அப்படி அவங்க என்னதான் செய்றாங்க? இதோ இங்கே பாருங்க புரியும்.
கூன்முதுகுத் திமிங்கிலம்.
ஆங்கிலத்தில் இதை ஹம்ப்பேக் (HUMPBACK) திமிங்கிலம்ப்பாங்க.
இந்த வகை திமிங்கிலங்கள் ஆண்டுதவறாம, அண்டார்க்டிக் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவின் தி கிரேட் பேரியர் ரீப் (THE GREAT BARRIER REEF) பகுதிக்கு குழந்தை குட்டிகளோட கும்பலா புறப்பட்டுரும்.
கூன்முதுகுத் திமிங்கிலங்களின் இந்த 10 ஆயிரம் கிலோமீட்டர் வலசைப் பாதையில், அதுகளை அடிக்கடி பார்த்து மகிழக்கூடிய இடம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கோல்ட்கோஸ்ட்தான்.
ஹம்ப்பேக் ஹைவே-ங்கிற இந்த வலசை வழித்தடத்தில் திமிங்கிலங்கள் கூட்டம்கூட்டமா வர்றதை படகுகளில் இருந்தபடி பார்த்து மகிழ்வாங்க மக்கள்.
திமிங்கிலங்களின் முக்கியமான பழக்கமே முதுகுத்துளை வழியா அப்பப்ப சுவாசக்காற்றையும், கொஞ்சூண்டு கடல்நீரையும் பீய்ச்சியடிக்கிறதுதான். கல்யாண வீட்டிலே கலகலப்பா பன்னீரைத் தூவுற மாதிரி, திமிங்கிலங்கள் இப்படி அடிக்கடி பூமழை பொழியும். இந்த பூமழையோடு திமிங்கிலத்தின் குடலில் உள்ள மியூக்கஸ் (MUCOUS) என்கிற ஒரு சவ்வுத் திரவமும் கூட்டணி சேர்த்துக்கும்.
திமிங்கிலம் ஒவ்வொரு முறை இப்படி பூமழை பொழியும்போதும், தான் யார்ங்கிற தகவலையும் சேர்த்தே தூவுது.
திமிங்கிலத்தின் இந்த மியூக்கஸை ஆராய்ந்தால், அது ஆணா பெண்ணாங்கிறதில் தொடங்கி, அதோட ராசி, நட்சத்திரம், ஏன்… ஜாதகத்தையே கண்டுபிடிச்சிறலாம். ஆனால் 30 ஆயிரம் கிலோ எடையிருக்கிற ஒரு திமிங்கிலத்துக்கிட்ட போய் மியூக்கஸை யார் கேட்டு வாங்குறது?
அதனால், கூனல்முதுகுத் திமிங்கிலங்களின் மியூக்கஸை சேகரிக்க ஒரு சூப்பரான வழியை ஆஸ்திரேலிய கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. அதுதான் டுரோன் (DRONE)..
புறா காலில் கடிதத்தைக் கட்டி பறக்க விடுற மாதிரி, டுரோனின் காலில் ஒரு சின்ன பாத்திரத்தைக் கட்டி அதை பறக்க விடுறாங்க ஆய்வாளர்கள்.
முதுகு வழியா திமிங்கிலம், பூவாணம் தூவும்போது கனகச்சிதமா அதை சேகரிச்சுக்கிட்டு வந்திருது டுரோன். அப்புறம் பத்திரமா வந்து படகில் இறங்கிடுது.
திமிங்கிலங்கள் எல்லாம் கேளா ஒலியலைகள் மூலம் பேசக்கூடியவை. அதனால் ஹைட்ரோபோன் (HYDROPHONE) ங்கிற கருவியைக் கடல்ல தள்ளி, திமிங்கிலத்தின் ஒலிமூலம் அதன் மூடு என்னன்னு ஆய்வாளர்கள் தெரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் டுரோன் மூலம் திமிங்கிலத்தின் மியூக்கஸை அவங்க சேகரிக்கிறாங்க. பிறகு அதை ஆய்வகத்தில் அலசு அலசுன்னு அலசி ஆராய்றாங்க.

செம கலக்கல் இல்ல..?
(வழக்கமான நடையில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இது எழுதப்பட்டுள்ளது)

Wednesday, 30 November 2016

தொப்பி நண்டு

கடலடியில் மண்டி எனப்படும் சதுப்புப் பகுதியில் வாழும் ஒரு வகை சிறிய நண்டினம் இது. தலைக்கு மேல் சிப்பி போன்ற எதையாவது எப்போதும் சுமந்து கொண்டிருப்பது இந்த நண்டினத்தின் வழக்கம். அதனால் தொப்பி நண்டு என இது அழைக்கப்படுகிறது.

மனிதப் பார்வைக்கு இந்த நண்டு மிக பேரழகு கொண்ட நண்டல்ல. ஆனால் தொப்பிநண்டு அழகா இல்லையா என்பதை நீங்களும், நானும் முடிவு செய்வது சரியாக இருக்காது. தன்னின நண்டின் பார்வைக்கு தொப்பி நண்டு அழகான நண்டாகவே தோன்றலாம்.

தனது உருண்டை உடலை தொப்பி நண்டு, கடல் சேற்றால் மூடிக்கொள்ளும். பாசி உள்பட எதிர்படும் எந்த கடல்தாவரத்தையும் இது துண்டுகளாகி உண்ணும்.
உருமறைப்பு செய்து கொள்ள தலைக்கு மேல் எதையாவது தூக்கி வருவது இதன் பழக்கம். மரத்துண்டுகள், சிப்பி உள்பட எதையும் இது தொப்பியாக்கிக் கொள்ளும். ஆனாலும் ஒருவகை வெளிர்மஞ்சள் நிற கடற்பஞ்சுதான் இதன் முதன்மை தொப்பி. அந்த கடற்பஞ்சை தன் இடுக்கிப் போன்ற கடிகாலால் (Cheklae) கைதேர்ந்த தையல்காரர் போல தன் உடல் அளவுக்கு ஏற்ப கத்தரித்து, உடல்மேல் பொருத்திக் கொள்ளும்.
கடல் உயிர்க்காட்சியகத்தில் இருக்கும் இந்த வகை தொப்பி நண்டு, தொப்பி கிடைக்காமல் இருக்கும் நிலையில், காகிதத்தை அளித்தால், அதை அளவாக கத்தரித்துப் பயன்படுத்திக் கொள்ளும். ஆனாலும் கடற்பஞ்சே இதன் முதன்மைத் தேர்வு. சிப்பியுடன் திரியும் தொப்பி நண்டு, கடற்பஞ்சைக் கண்டால் அது, சிப்பியை கைவிட்டு விட்டு கடற்பஞ்சைத் தெரிவு செய்து கொள்ளும்.
தலைமேல் சுமந்திருக்கும் இந்த தொப்பி, இந்த வகை நண்டுக்கு ஒருவகை உருமறைப்பாகப் பயன்படுகிறது. கடலில் திரியும் கணவாயால் தொப்பியுள்ள நண்டுகளை கண்டுகொள்ள முடியாது அதேவேளையில் தொப்பியின்றி திரியும் நண்டை கணவாய் கண்டால், கண்ட உடனே அதை இரையாக்கிக் கொள்வது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
தொப்பி நண்டுகளிடம் திருட்டுப் பழக்கம் உண்டு. ஒரு நண்டின் தொப்பியை மற்றொரு நண்டு கவர்வது உண்டு. தொப்பியைப் பறிகொடுத்த நண்டு, தொப்பியை பறிகொடுத்த இடத்துக்கு நினைவாற்றலுடன் போய்த்தேடும். அல்லது தொப்பிக்குரிய கடற்பஞ்சு எங்கு கிடைக்கும் என்பதை நினைவில் வைத்திருந்து அங்கு சென்று தனக்கான புதிய தொப்பியை அது ஈட்டிக் கொள்ளும்.


Sunday, 20 November 2016

சற்று அதிக அளவிலான அலுவலக பணிச்சுமை....தற்போது இந்தியத்திருநாடு முழுவதும் நிலவும் பழைய பணத்தாள் செல்லாது என்ற பிரச்சினை. அதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம். வங்கிகள் முன் காவல் கிடக்க வேண்டிய நிலைமை.
இவை காரணமாக அண்மை காலமாக புதிய பதிவுகளை இங்கே இட முடியவில்லை... வருந்துகிறேன்.. -மோகன ரூபன்..







Wednesday, 2 November 2016

பன்மீன் கூட்டம் (மீன்பட்டியல் தொடர்ச்சி)


1035.ஆரலில் வெள்ளாரல், 1036. நெளிக்கும் ஆரல், 1037.இணாட்டு, 1038, உறவி, 1039. ஊட்டான், 1040. ஊசிக்கோல், 1041. ஊடகத்தில் நெடுவால் ஊடகம், 1042. வச்சிர ஊடகம், 1043 ஓட்டா, 1044. ஓலைச்சிறையன், 1045. கடந்தை, 1046. கடியன், 1047. கயலில் செங்கயல், 1048. கருங்கயல், 1049. கட்டிமீன், 1050. கத்தாளையில் பரக்கத்தாளை, 1051. காரலில் சுதுப்புனம் காரல், 1052.கொடுங்காரல், 1053. கிளாத்தியில் மஞ்சள் கிளாத்தி, 1054. கீளியில் கோவக் கீச்சான், 1055. மட்டக்கீச்சான், 1056. பளிங்கு கீச்சான், 1057. குடைக்கீச்சான், 1058. நாற்கோட்டுக் கீச்சான், 1059. குளக்கன், 1060.  கெண்டை மீனில் மொத கெண்டை, 1061. மடவா கெண்டை, 1062. குறுமுழிக்கெண்டை, 1063. சாணிக் கெண்டை, 1064. முண்டு கெண்டை, 1065. கொறுக்கையில் நிலக்கொறுக்கை, 1066. கொப்பராவில் கடுங்கொப்பரா, 1067. கோளை, 1068. சரமீன், 1069. சரள், 1070. சள்ளல், 1071. சாளையில் பண்ணைச் சாளை, 1072. நெய்ச்சாளை, 1073. வெள்ளாமுரச்சாளை 1074. சிலிந்தன், 1075. சிமிழி, 1076. சீடை, 1077. சுண்டு, 1078. சூரையில் பல்லன் சூரை, 1079. மஞ்சள் சூரை, 1080. மஞ்சள் துடுப்புச்சூரை, 1081. இரத்தசூரை (கேரையின் இன்னொரு பெயராக இருக்கலாம்), 1082. பெரிய கண் சூரை, 1083. தரளம், 1084. தாழை, 1085. தாங்கில், 1086. திரளியில் ஊடகத்திரளி, 1087. நெடுவால் திரளி, 1088. தீராங்கன்னி, 1089. தூக்கல், 1090. தொழுத்தை, 1091. தொண்டையில் ஓத்தொண்டை, 1092. கரத் தொண்டை, 1093. தோக்கா, 1094. பஞ்சிரம் (பஞ்சூரன்),(நெடும்பஞ்சூரன்) 1095. பஞ்சலை 1096. பாலையில் செம்பாலை, 1097. பாரையில் உறிப்பாரை, 1098. நீட்டுப்பாரை, 1099. தக்கன் பாரை, 1100. குமரப்பாரை, 1101. பிலாச்சை, 1102. விளமீனில் பருவ விளமீன், 1103. கொப்புளி சரிந்த விளமீன், 1104. வெண்ணா (நெத்தலியில் சிறியது), 1105. நவரையில் குழிநவரை, 1106. மஞ்சள்கீத்து நவரை, 1107. நாக்கு மீனில் புள்ளி நாக்குமீன், 1108. நாரை, 1109. மதனத்தில் பாசி மதனம், 1110. முரலில் படுக்கா முரல், 1111. கூறைமேதல் முரல், 1112. பரவை முரல், 1113. கட்டமுரல், 1114.   கெழுது மீனில் கட்டுவா கெழுது, 1115. பொதியங் கெழுது ( பொதி கெழுது), 1116. இருங்கெழுது, 1117. கறுத்தகெழுது, 1118. நொறுவாய் கெழுது. 1119. சுறாவில் ஓங்கல் சுறா, 1120. தாழஞ்சுறா, 1121. வெள்ளை கோலா சுறா, 1122. உடும்புச்சுறா. 1123. குழுவி, 1124. குளிரி, (தொடரும்)