தொப்பி நண்டு
கடலடியில் மண்டி எனப்படும் சதுப்புப் பகுதியில் வாழும்
ஒரு வகை சிறிய நண்டினம் இது. தலைக்கு மேல் சிப்பி போன்ற எதையாவது
எப்போதும் சுமந்து கொண்டிருப்பது இந்த நண்டினத்தின் வழக்கம். அதனால் தொப்பி நண்டு என இது அழைக்கப்படுகிறது.
மனிதப் பார்வைக்கு இந்த நண்டு
மிக பேரழகு கொண்ட நண்டல்ல. ஆனால் தொப்பிநண்டு அழகா இல்லையா என்பதை
நீங்களும், நானும் முடிவு செய்வது சரியாக இருக்காது. தன்னின நண்டின்
பார்வைக்கு தொப்பி நண்டு அழகான நண்டாகவே தோன்றலாம்.
தனது உருண்டை உடலை தொப்பி நண்டு,
கடல் சேற்றால் மூடிக்கொள்ளும். பாசி உள்பட எதிர்படும் எந்த கடல்தாவரத்தையும் இது துண்டுகளாகி உண்ணும்.
உருமறைப்பு செய்து கொள்ள தலைக்கு மேல் எதையாவது தூக்கி
வருவது இதன் பழக்கம். மரத்துண்டுகள், சிப்பி உள்பட எதையும் இது தொப்பியாக்கிக் கொள்ளும். ஆனாலும்
ஒருவகை வெளிர்மஞ்சள் நிற கடற்பஞ்சுதான் இதன் முதன்மை தொப்பி. அந்த கடற்பஞ்சை தன் இடுக்கிப் போன்ற கடிகாலால் (Cheklae) கைதேர்ந்த
தையல்காரர் போல தன் உடல் அளவுக்கு ஏற்ப கத்தரித்து, உடல்மேல் பொருத்திக்
கொள்ளும்.
கடல் உயிர்க்காட்சியகத்தில் இருக்கும் இந்த வகை தொப்பி
நண்டு, தொப்பி கிடைக்காமல் இருக்கும் நிலையில், காகிதத்தை அளித்தால்,
அதை அளவாக கத்தரித்துப் பயன்படுத்திக் கொள்ளும். ஆனாலும் கடற்பஞ்சே இதன் முதன்மைத் தேர்வு. சிப்பியுடன்
திரியும் தொப்பி நண்டு, கடற்பஞ்சைக் கண்டால் அது, சிப்பியை கைவிட்டு விட்டு கடற்பஞ்சைத் தெரிவு செய்து
கொள்ளும்.
தலைமேல் சுமந்திருக்கும் இந்த தொப்பி, இந்த வகை
நண்டுக்கு ஒருவகை உருமறைப்பாகப் பயன்படுகிறது.
கடலில் திரியும் கணவாயால் தொப்பியுள்ள நண்டுகளை கண்டுகொள்ள முடியாது
அதேவேளையில் தொப்பியின்றி திரியும் நண்டை கணவாய் கண்டால், கண்ட உடனே அதை இரையாக்கிக் கொள்வது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
தொப்பி நண்டுகளிடம் திருட்டுப் பழக்கம் உண்டு. ஒரு நண்டின் தொப்பியை மற்றொரு நண்டு கவர்வது உண்டு. தொப்பியைப்
பறிகொடுத்த நண்டு, தொப்பியை பறிகொடுத்த இடத்துக்கு
நினைவாற்றலுடன் போய்த்தேடும். அல்லது தொப்பிக்குரிய கடற்பஞ்சு
எங்கு கிடைக்கும் என்பதை நினைவில் வைத்திருந்து அங்கு சென்று தனக்கான புதிய தொப்பியை அது ஈட்டிக் கொள்ளும்.
No comments :
Post a Comment