உடுமீன் அல்லது நட்சத்திர மீன் (STAR
FISH)
வட்டவடிமான தட்டையான ஒரு தட்டு. அதிலிருந்து பூவின் இதழ்கள் போல புறப்பட்டு நீளும் தடிமனான ஐந்து கைகள்.
உடுமீன் அல்லது நட்சத்திர மீனின் பொதுவான அங்க அடையாளம் இதுதான்.
உடுமீன்களுக்கு ஐந்து கைகள்தான் இருக்கும் என்று சட்டதிட்டம் எதுவும்
கிடையாது. 4 அல்லது 6 கைகள் கொண்ட உடுமீன்களும்
உண்டு.
உடுமீனின் கை துண்டிக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ந்து
விடும் என்பது மட்டுமல்ல, துண்டிக்கப்பட்ட ஒரு கை புதிய ஒரு
உடுமீனாக வளரவும் வாய்ப்புண்டு. அதுபோல கையை இழந்த உடுமீனுக்கு
மீண்டும் கை முளைக்கவும் வாய்ப்புண்டு.
சிலவகை
உடுமீன்களை இரண்டாகப் பிளந்து கடலில் எறிந்தால் அந்த இரு துண்டங்களும் இருவேறு உடுமீன்களாக
வளரக்கூடும்.
உடுமீனுக்கு தலை என்று எதுவும் கிடையாது. இதன் கைகளுக்கு அடியில்
எண்ணற்ற, சதைப்பாங்கான, விரல்போன்ற உறுப்புகள் காணப்படும்.
இந்த குழாய் போன்ற கால்களின் ஒவ்வொரு முனையிலும் உறிஞ்சான்கள்
இருக்கும். கடல்நீரை உறிஞ்சு வெளியேற்றுவதன் மூலம் உடுமீன்கள்,
ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த உறிஞ்சுக் கால்கள் மூலம் உடுமீன்களால் நடக்கவும், இரை தேடவும் முடியும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிப்பியை
உடுமீன் இறுகப் பற்றி அணைத்துக் கொண்டால் அந்த சிப்பி களைப்படையும் வரை உடுமீன் அதை
விடவே விடாது. முடிவில் சலித்துப்போய் சிப்பி வாய் திறக்கும்போது,
உடுமீனின் வயிறு அதன் வாய் வழியாக வெளிவந்து சிப்பிக்குள் நுழையும்.
வயிற்றில் உள்ள சில அமிலங்கள் சிப்பியின் உள்உறுப்புகளை பதமாக்கி உணவாக
மாற்றும், சிப்பியின் சதையை உணவாக உண்டபின் உடுமீனின் வயிறு மீண்டும்
வாய் வழியே உடலுக்குள் இழுத்துக் கொள்ளப்படும். உடுமீனின் இந்த
இரையுண்ணும் பாங்கு மிகமிக அலாதியானது.
உடுமீனில் மிகவும் சிறிய உடுமீன், முழு வளர்ச்சிக்குப்பிறகு கூட 12 மில்லி மீட்டருக்கும்
குறைவான குறுக்களவுடன் காணப்படும். மிகப்பெரிய உடுமீன் ஒரு மீட்டர்
குறுக்களவு கூட இருக்கலாம்.
உடுமீன்கள் பொதுவாக தெளிந்த மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும், சிலவகை உடுமீன்கள் கண்ணைப் பறிக்கும் கிரிம்சன் அல்லது நீலநிறத்திலும் விளங்கும்.
உடுமீன்களில் பல ஊன்உண்ணிகள். சிப்பிகளைத் தவிர
சிறிய மீன்களையும் இவை இரையாக்கும். உணர்வு உறுப்பு என்று எதுவும்
இல்லாவிட்டாலும் தொடு உணர்வால் உடுமீன்கள் இரையை அறியும்.
உடுமீன் வசிக்கும் ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் இறைச்சிக்
குழம்பைக் கொட்டினால் மறுகணம் அது சுறுசுறுப்படைவதைக் காண முடியும்.
சிலவகை உடுமீன்கள் 5 லட்சம் முதல்
20 லட்சம் வரை முட்டையிடக் கூடியவை. கடலில் இடப்படும்
இந்த முட்டைகள் வளர்ந்து உடுமீன்களாக மாறுகின்றன.
கரையொதுங்கும் உடுமீன்கள் உலர வைக்கப்பட்டு, அலங்காரப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. உடுமீன்,
கடல்மூரைகளுக்கு உறவுள்ள உயிர். ஆனால்,
மூரைகளை இது உணவாக்கக் கூடியது. கடலில் முத்துச்சிப்பிகளுக்கு
எதிரிகள் பலப்பல. அந்த எதிரிகள் பட்டியலில் உடுமீனுக்கும் இடமுண்டு.
No comments :
Post a Comment