Friday 12 February 2021

 

வெள்ளை நிற கருங்குழவி ஓங்கல்!

கருங்குழவி ஓங்கல்களை ஆங்கிலத்தில் ‘கில்லர் வேல்’ (Killler Whale) (கொல்லும் திமிங்கிலம்) என்று அழைப்பார்கள். ஆனால் கருங்குழவி ஓங்கல்கள் திமிங்கில இனத்தைச் சேர்ந்தவை அல்ல. ஓங்கல் எனப்படும் டால்பின் இனத்தைச் சேர்ந்தவை.

கருங்குழவி ஓங்கல்கள் பெயருக்கேற்றபடி கருமையும், வெண்மையும் கலந்ததாக இருக்கும். ஆனால், உலகக் கடல்களில் அவ்வப்போது வெள்ளைநிற கருங்குழவி ஓங்கல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ரஷியாவுக்கு வடகிழக்கே அலாஸ்கா அருகே பெரிங் கடல் பகுதியில் முழு அளவில் வளர்ந்த முழு வெள்ளை நிறமான ஓர் ஆண் கருங்குழவி ஓங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ’ஐஸ்பெர்க்’ என பெயர்சூட்டப்பட்டுள்ளது.

கருங்குழவி ஓங்கல்களின் முதுகுத்தூவி ஆறடி உயரம் வரை உயரமாக இருக்கும். இந்த தூவியின் உயரத்தை வைத்து கருங்குழவி ஓங்கலின் வயதைச் சொல்லிவிடலாம்.

அந்த அடிப்படையில் ஐஸ்பெர்க் வெள்ளை ஓங்கலின் வயது 16 என்பது தெரிய வந்திருக்கிறது.

இதற்குமுன் கனடா நாட்டில் உள்ள ஒரு மீன்காட்சியகத்தில் சிமோ என்ற வெள்ளைநிற கருங்குழவி ஓங்கல் இருந்தது. ஆனால் அது முழுவெள்ளை அல்ல. தில்லி என்ற பெயருள்ள ஒரு வெள்ளைநிற கருங்குழவி ஓங்கலும் கனடா நாட்டின் மீன்காட்சியகத்தில் இருந்தது.

கருங்குழவி ஓங்கல்கள் இப்படி வெள்ளை நிறமாகப் பிறக்க என்ன காரணம்? இதற்கும் அல்பினிசத்துக்கும் தொடர்பில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள். அல்பினிசம் மூலம் ஒரு விலங்கு வெண்மை நிறமடைந்து பிறந்தால் அதன் கண்கள் பிங்க் நிறமாக இருக்கும்.

ஆனால் ஐஸ்பெர்க்  வெள்ளைநிற கருங்குழவி ஓங்கல், பனி போல இப்படி பளபளவென வெண்மையாக இருக்க லூசிசம் (Leucism) காரணம் என்கிறார்கள் அறிஞர்கள்.

அது என்ன லூசிசம்? நிறமிகளின் அதிர்வுகளில் பற்றாக்குறை ஏற்படுவதன் பெயர்தான் லூசிசமாம். இதனால்தான் ஐஸ்பெர்க் கருங்குழவி ஓங்கல் வெள்ளை நிறமாக இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.

உலக அளவில் இதுவரை 10 வெள்ளைநிற கருங்குழவி ஓங்கல்களே இதுவரை நமக்குத் தெரியவந்துள்ளன. அவற்றில் 5 ஓங்கல்கள் மட்டுமே தற்போது உயிர் வாழ்வதாகத் தெரிகிறது.

1 comment :

  1. இதோட தமிழ் பெயரை எப்படி கண்டுபிடித்தீர்கள். அல்லது நீங்களே வைத்த பெயரா

    ReplyDelete