இறந்த திமிங்கிலம்
கடலின் மிகப்பெரிய உயிரான திமிங்கிலம்
இறந்தபிறகு என்ன ஆகும்? அதுபற்றி இப்போது பார்ப்போம்.
திமிங்கிலம் அதன் மூச்சடங்கி உயிர்விட்ட
நிலையில் எடுத்த எடுப்பில் கடலுக்குள் மூழ்கிவிடாது. கடலின் மேற்பரப்பில் அது மிதந்தபடி
இருக்கும். எண்ணற்ற சுறாக்களுக்கும், கடற்பறவைகளுக்கும் திமிங்கில உடல் விருந்தாகும்.
சிலகாலம் இப்படி மிதந்தபின் திமிங்கில
உடலின் உட்பகுதி அழுகத் தொடங்கி, அதில் இருந்து சில வாயுக்கள் வெளியேறும். அதன்பின்னர்
உடல், கடலின் இருண்ட அடியாழத்தை நோக்கி மூழ்கத் தொடங்கும்.
இறுதியில், கடலடியில் புழுதியைக் கிளப்பியபடி
அது கடல்படுகையில் போய் தனது இறுதி இருப்பிடத்தைத்தேடிக் கொள்ளும்.
இருண்ட கடலின் அடிப்பகுதி என்பது ஒருவகை
பாலைவனம் போன்றதுதான். இங்கே திடீரென இவ்வளவு பெரிய ‘விருந்து’ வந்து சேர்ந்தவுடன்
பலவகை கடலடி சுறாக்கள், நண்டுகள், இறால்கள், கல்லிறால்கள் திமிங்கிலத்தின் பிளப்பர்
எனப்படும் கொழுப்பு, சதை போன்றவற்றை உண்ணத் தொடங்கும். ஏறத்தாழ இரண்டாண்டு காலம் இந்த
விருந்து கொண்டாட்டம் நீடிக்கும். திமிங்கில உடலில் 90 விழுக்காடை தின்று முடிப்பவை
சுறா போன்ற மீன்களே.
இப்போது கடலடியில் அழுகிய திமிங்கிலத்தின்
உடல் தனியொரு பல்லுயிர் பெருக்கமாக மாறியிருக்கும். ஆம். 43 இனங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து
490 வகை கடலுயிர்கள் இறந்த திமிங்கில உடலைச் சார்ந்து அதை இரையாக்கி வாழத் தொடங்கும்.
இந்த 12 ஆயிரத்து 490 வகை கடலுயிர்களில் மட்டி, சிப்பி, புழுக்கள், கண்ணில்லாத இறால்கள்
போன்றவையும் அடங்கும்.
பத்தாண்டு காலத்தில் திமிங்கிலத்தின் தோல்
சதை போன்றவை தின்று தீர்க்கப்பட்டு இப்போது எலும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும். இனி
புழுக்களின் வேலை. கடலடி புழுக்கள் திமிங்கில எலும்புகளுக்குள் ஆக்சிஜன் எனப்படும்
உயிர்க்காற்றை செலுத்தி அவற்றை விரைவில் சிதைக்க முயலும்.
இந்த காலகட்டத்தில், அழுகிய முட்டையில்
எழுவதைப்போன்ற நைட்ரஜன் சல்பைடு துர்நாற்றம் கடலடியில் வீசத் தொடங்கும்.
திமிங்கிலம் இறந்து நூறாண்டுகள் கழித்து
அந்த திமிங்கிலத்தின் எந்த உடல் உறுப்புகளும் மீதம் வைக்கப்படாமல் முழுமையாக கடலோடு
கரைந்து மறைந்திருக்கும். பயன்தரும் சக்தியாக திமிங்கில உடல் உருமாறியிருக்கும்.
No comments :
Post a Comment