Tuesday, 3 March 2020


பெரும்பல்லன் சுறா (Megalodon Shark)
மனிதனோடு ஒப்பிட்டு கற்பனை
நமது கடல்களில் இப்போதுள்ள சுறாக்களில் மிகப்பெரிய சுறா அம்மணி உழுவை (பெட்டிச்சுறா) என அழைக்கப்படும் Whale Sharkதான். (உலகின் மிகப்பெரிய மீன் இதுதான்). இதற்கு அடுத்தபடி மிகப்பெரிய சுறா, மேய்ச்சல் சுறா என அழைக்கப்படும் Basking Shark. ஆனால் மேலே சொன்ன இரண்டு சுறாக்களுமே, மனிதர்களுக்கோ மற்ற பெரிய கடலுயிர்களுக்கோ எந்த ஆபத்தும் தராத அமைதியான சுறாக்கள்.
ஆனால், இவற்றுக்கு அடுத்தபடி மூன்றாவது இடத்தில் உள்ள சுறா, பெருஞ்சுறா (Great White Shark). இது மிகப்பெரிய இரைகொல்லிச் சுறா. கடலுயிர்கள் பலவற்றை நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய சுறா பெருஞ்சுறாதான்.
ஆனால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நமது பூவுலக கடல்களில் பெருஞ்சுறாவைவிட மூன்று மடங்கு பெரிய சுறா ஒன்று வாழ்ந்திருக்கிறது என்றால் அது வியப்புதானே? அந்த சுறாவின் பெயர் ‘பெரும்பல்லன்’ சுறா. ஆங்கிலத்தில் மேகலோதன் சுறா (Megalodon Shark).
23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரும்பல்லன்’ சுறா தோன்றியிருக்கும் என நம்பப்படுகிறது. அதன்பின் உலகக் கடல்களை பலகாலம் அது ஆண்டிருக்கிறது. அதாவது மைசீன் காலத்தில் இருந்த பிளையோசீன் காலம் வரை இதன் அரசாட்சி நடந்திருக்கிறது. 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது மறைந்து போயிருக்கிறது.
பெரும்பல்லன்’ சுறா வாழ்ந்த காலத்தில் உலகத்தின் மிகப்பெரிய மீன் அதுதான். அதன் நீளம் 12.65 மீட்டர் (41.50 அடிகள்). உடல் எடை 60 டன். தற்போது நம்காலத்தில் உலகில் வாழும் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவையைவிட (Whale Shark) பெரும்பல்லன் சுறா பெரியதாக, நீளமாக இருந்திருக்கிறது. இந்த மிகப்பெரிய சுறாவின் எடையுடன் ஒப்பிடும்போது அம்மணி உழுவை சும்மா காற்றடைந்த பலூன் மாதிரியானது. அதாவது எடை குறைந்தது.
அதுபோல தற்போதைய நம்காலத்து பெருஞ்சுறாவை விட பெரும்பல்லன் சுறா மூன்று மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது.
பெரும்பல்லன் எனப்படும் மேகலோதன் சுறா, பெருஞ்சுறாவின் குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. பெரும்பல்லன் தனித்துவமான ஓர் இனத்தைச் சேர்ந்த அரக்கச் சுறா. உலகில் தென் முனையான அண்டார்ட்டிகா பனிக்கண்ட கடற்பகுதியைத் தவிர்த்து உலகின் அனைத்துக் கடல்களிலும் பெரும்பல்லன் சுறா பரவி வாழ்ந்திருக்கிறது.
பெரியவர் இவர்தான்..
பெரும்பல்லன் சுறாவின் பல் 7 அங்குல(!) நீளம் கொண்டது. பலவரிசைப் பற்கள் கொண்ட பெரும்பல்லன் சுறாவின் வாயில் ஒரு வரிசையில் மட்டும் 276 பற்கள்(!) இருந்திருக்கின்றன. ஆவென வாயைத் திறந்தால் அந்தச் சுறாவின் வாயின் அகலம் மட்டும் 3.4 மீட்டர் வரை விரிந்திருக்கிறது. அப்படி விரிந்தால் ஒரே விழுங்கில் இரண்டு மனிதர்களை பல்படாமல் அந்த மெகா சுறாவால் விழுங்க முடியும்.
சுறாக்களுக்கு அவற்றின் வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்துகொண்டே இருப்பது வழமை. சுறாவின் வாய்க்குள் கன்வேயர் பெல்ட் போல பலவரிசைப் பற்களின் அணிவரிசை தயாராகக் காத்திருக்கும். ‘விழவிழ எழுவோம்’ என்பதுபோல பழைய பற்கள் விழவிழ, அவற்றின் இடத்தைப் புதிய பற்கள் பிடித்துக் கொள்ளும். அப்படிப் பார்த்தால் பெரும்பல்லன் சுறா அதன் வாழ்நாளில் மொத்தம் 40 ஆயிரம் பற்களைக் கொண்டிருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பெரும்பல்லன் சுறாவின் பற்கள் அண்டார்ட்டிக் கடற்பகுதி தவிர்த்து உலகம் முழுவதும் இன்றும் கிடைத்து வருகிறது. மற்ற சுறாக்களின் பற்களைப் போலவே பெரும்பல்லன் சுறாவின் பற்களும் கடலடியில் அடிக்கடி கண்டெடுக்கப்படுகின்றன. சிலஇடங்களில் அவை குவியலாகக் காணப்படுகின்றன.
சரி. இந்த பெரிய சுறாவின் இரை என்ன? இறைச்சித் தின்னியான இந்த அரக்கச் சுறா, திமிங்கிலங்கள், இதர பெரிய சுறாக்களை வேட்டையாடித் தின்றிருக்கிறது. சிறுதிமிங்கிலம், ஓங்கல், ஆவுளியா, கடற்சிங்கம் போன்றவற்றை சும்மா சிற்றுண்டி போல உண்டிருக்கிறது. இந்த பெரிய சுறாவின் ஒருநாள் உணவுத்தேவை ஒரு டன்!
அது போகட்டும். பெரும்பல்லன் சுறா இனம் எப்படி அழிந்தது? பெரும்பல்லன் சுறா உலகம் முழுவதும் எல்லா கடல்களிலும் பரவி வாழ்ந்தது என்று முன்பே கூறினோம் அல்லவா? இது வெப்பம் நிறைந்த கடல்களில் அதிகம் வாழ்ந்திருக்கிறது. குளிர் ஆகாது என்பதால் துருவக்கடற்பகுதிகளை பெரும்பல்லன் சுறா தவிர்த்து வந்திருக்கிறது.
3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிளையோசின் காலத்தில் உலகம் குளிர ஆரம்பித்திருக்கிறது. கடலும் ஜில்லென குளிர்ச்சி அடையத் தொடங்கியதால் பெரும் பல்லனின் உயிர்ச்சூழல் ஆட்டம் காண ஆரம்பித்தது. குளிர்ந்த கடல்களால் இரை உயிர்களும் அருகத் தொடங்கியிருக்கின்றன. இதனால் பெரும்பல்லன் சுறாக்களுக்கு இரை பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
சுறாக்கள் அவற்றின் குட்டிகளை கரையோரத்தில் ஈனுவதே வழக்கம். கரைப் பகுதிகளில் உயிர்க்காற்று அதிகம் என்பதுடன், அங்கே கொன்றுண்ணி உயிர்களும் குறைவு என்பதால் குட்டிகள் கரைப்பகுதிகளில்தான் ஆபத்தின்றி வாழ முடியும்.
இதேப்பழக்கத்தை பெரும்பல்லன் சுறாவும் கையாண்டிருக்கிறது. ஆனால், பனிஉருகி கடல்நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த சுறா இனத்தின் குட்டிகள், பல்லுள்ள திமிங்கிலங்களுக்கு இரையாகத் தொடங்கியிருக்கின்றன.
இதற்கிடையே பெரும்பல்லன் சுறா இனத்துக்கு இன்னொரு வில்லனும் கடலில் முளைத்திருக்கிறார். அவர் இப்போது நம்காலத்தில் வாழும் பெருஞ்சுறாவின் (Great White) மூதாதை. பெருஞ்சுறாக்கள் ஒருகாலத்தில் பசிபிக் கடலில் மட்டுமே வாழ்ந்திருக்கின்றன. பிறகு இவை பல்வேறு கடல்களுக்குப் பரவி, பெரும்பல்லன் சுறா இனத்துக் குட்டிகளைத் தின்று தீர்த்திருக்கின்றன. அடுத்த தலைமுறையை அழித்திருக்கின்றன.
எவ்வளவு பெரிய பல்!
கடல்கள் அக்காலத்தில் குளிர்ந்ததால் 43 விழுக்காடு ஆமையினங்களும், 35 விழுக்காடு கடற்பறவைகளும்கூட அழிந்திருக்கின்றன. குளிர்காரணமாக கடலில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்தப் போட்டியில் பெருஞ்சுறாக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெரும்பல்லன்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
பெரும்பல்லன் சுறா இனம் அழிந்து இன்று புதைபடிவமாக (Fossil) மட்டுமே அவை கிடைக்கின்றன. பெருங்கடலின் அடி ஆழங்களில் இன்றும்கூட ஒன்றிரண்டு பெரும்பல்லன் சுறாக்கள் உயிர் வாழக்கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பெரும்பல்லன் சுறாக்களைப் (Megalodon Shark) பற்றி ஏராளமான புத்தகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வந்திருப்பது தனிக்கதை.

No comments :

Post a Comment