வெங்கணா (Herring) வகையைச் சேர்ந்த ஒரு பெரிய
மீனினம் இந்த டார்பன் (Tarpon) மீன். நூறு மில்லியன் ஆ ண்டுகள் தொன்மை வாய்ந்த மீன் இனம் இது. அது மட்டுமல்ல. பழங்கால என்பு மீன்களின் (Bony Fish) முன்னோடி டார்பன் மீன்தான்.
வெள்ளி நிறத்தில் இந்த மீன் துள்ளுவதால், சில்வர்
கிங் (வெள்ளி ராசா) என்பது இந்த மீனின் செல்லப்பெயர். வெப்பக் கடற்பகுதி மீனான டார்பனுக்கு
தமிழில் என்ன பெயர் என்பது சரிவரத் தெரியவில்லை. Megalopidae குடும்பத்தின் ஒரே உறுப்பினர்
இந்த டார்பன் மீன்தான்தான் என்று கூறுவார்கள். சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட இருவகை டார்பன்
மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரு குடும்பங்களாக அவை பிரிக்கப்பட்டிருப் பதாகவும் சொல்வார்கள்.
டார்பன் மீன்கள் ஐந்தடி வரை வளரக் கூடியவை. பெண்
மீன் எட்டடி நீளம் கூட இருக்கும். டார்பன் மீன்களில் பெரியவை 300 பவுண்ட் வரை எடையிருக்க
வாய்ப்புண்டு. பெண் மீன் ஐம்பது ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆண் டார்பன்கள் முப்பது
ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. அமெரிக்காவின் சிகாகோ நகர மீன் காட்சியகத்தில் வசித்த
டார்பன் மீன் ஒன்று 63 வயது வரை வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.
நீண்ட வாழ்நாள் இருப்பதால் டார்பன் மீன் மிக
மெதுவாகவே வளரும். ஏழு வயதில் பருவமடையும். டார்பன் மீன்களுக்கு பற்கள் இல்லை. அதனால்,
இரையை முழுதாக விழுங்கும். டார்பனின் வால் கடிமானத் தன்மையுடையது. கரடுமுரடானது, சொரசொரப்பானது.
கெழுது, சாளை, சிறு இறால், மடவை, முரல் போன்றவை
டார்பன் மீன்களின் இரைகள். கடலடியில் இறந்து கிடக்கும் சிறுமீன்களையும் டார்பன் தின்னும்.
காற்றுப்பை அல்லது நீந்து சவ்வுப்பை (Swim
Bladder) கொண்ட கடல் மீன்களில் டார்பனும் ஒன்று. மிதப்புத்தன்மையை கட்டுப்படுத்த உதவும்
இந்த காற்றுப்பை, நுரை யீரல் போல செயல்பட்டு டார்பன் மீன் நேரடியாக காற்றை சுவாசிக்க
உதவுகிறது. இதனால், தூண்டிலில் சிக்கினால் டார்பன் மீன் நீண்ட நேரம் போராடும். கடல்மேல்
காற்றுக்காக உருளும்.
டார்பின் மீனின் முதன்மை எதிரிகள் வரிப்புலியன்,
கொம்பன் சுறா. மற்றொரு எதிரி மனிதன்.
டார்பின் மீனின் செதிள்கள் ஒவ்வொன்றும் ஒரு
வெள்ளி நாணயத்தின் அளவுக்கு இருக்கும். பளபளவென மெருகேற்றப்பட்ட மாழை (Metal) போல இந்த
மீனின் உடல் ஒளியை பிரதிபலிக்கும். கோணல் வாயும், முதுகுத் தூவியில் நீண்டுநிற்கும்
ஓர் இழையும் டார்பன் மீனின் முதன்மை அடை யாளங்கள். வால் கவை வால். டார்பனின் கீழ்த்தூவி
(Felvic Fin) உடலின் பின்புறம் சற்று தள்ளி அமைந்திருக்கும்.
டார்பன் மீனின் முதுகுத்தூவியின் இறுதியில்
ஓர் இழை மட்டும் நீண்டு நிற்கும் அல்லவா? அந்த இழை மீன் முதிர் வயதை அடையும்போது உதிர்ந்து
விடும்.
டார்பன் மீன் கரையோரமாகவும் சுற்றித்திரியும்.
துறைமுக பாலங்களில் இருந்து வீசப்படும் தூண்டில்களில்
கூட டார்பன் சிக்கும். டார்பன் உண்ணத்தகுந்த மீன் அல்ல. எனவே மீன் தூண்டிலில் பிடிபட்டால்
உயிருடன் மீண்டும் அதை கடலில் விட்டுவிடுவார்கள்.
டார்பன் மீனின் இளைய தம்பியாக கிழங்கான்
(Lady Fish) மீனைக் கருதலாம். டார்பனுடன் ஒப்பிடும்போது கிழங்கான் மிகவும் சிறியது.
சிறு செதிள்கள் கொண்டது. கிழங்கானின் சதை சற்று எண்ணெய்த்தன்மை நிறைந்தது. ஆனால், கிழங்கான்
தூண்டிலில் சிக்கினால், அண்ணனுக்கு உள்ள அத்தனை குணங்களும் அதற்கு வந்துவிடும். தூண்டிலில்
கிழங்கான் போராடும். வால் நடனமும் புரியும்.
No comments :
Post a Comment