Tuesday, 16 October 2018


பெரும்பாரை (Giant Trevally) (Caranx ignobillis)
பாரை மீன் இனங்களுக்கு கணக்கே இல்லை. நமது நளியிரு முந்நீர் வலைப் பூவில் கூட 96 வகையான பாரை மீன்களின் பட்டியல் உண்டு. பாரை இனத்தில் ஒன்று பெரும்பாரை (Giant Trevally). இதன் அறிவியல் பெயர் Caranx ignobillis.
ஆழம் குறைந்த கடல் பார்ப்பகுதிகளில் தனித்தோ அல்லது சிறுகூட்டமாகவோ வாழும் மீன் பெரும்பாரை. செங்குத்தான மொண்ணை வடிவ தலை அமைப்பே இந்த மீனின் முதன்மை அடையாளம். வால்பகுதி வெளி நேர்த்தசையில் இந்த மீனுக்கு 26 முதல் 28 கூரிய எலும்புத் தகடுகள் அமைந்திருக்கும். வெள்ளி நிறம் முதல் கருநிறமாகவும் கூட பெரும் பாரை காணப்படும். கருநிற மீன்களின் மேற்பாதி உடலில் வெள்ளிநிற வேலைப்பாடுகள் திகழும். மேல்தாடையில் கோரைப்பற்களும், கீழ்த்தாடையில் கூம்பு வடிவ பற்களும் விளங்கும். கருநிற பெரும்பாரை மீன்கள் அதிர்ச்சி அடைந்தால் அவை வெள்ளிநிறமாக மாறி, பின் பழைய நிறத்துக்கு திரும்பும்.
பெரும்பாரை மீன் ஐந்தரை அடி நீளம் வரை வளரக்கூடியது. 80 கிலோ வரை எடை  கொண்டது. 3 அல்லது 4 ஆண்டுகளில் இது முழுவளர்ச்சியை எட்டும். அந்த கால கட்டத்தில் பெரும்பாரை மீன் இரண்டடி நீளமாக வளர்ந்திருக்கும். ஒரு மீட்டர் நீளத்துக்கு மேல் வளர்ந்த பெரும்பாரை 8 முதல் 10ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மீனாக இருக்கும்பெரும்பாரை மீன்கள் தனித்தும் சில வேளைகளில் கூட்டமாகவும் வேட்டையாடும். சிறு ஆமை, ஓங்கல், கல்இறால், கணவாய், தோட்டுக்கணவாய், களவாகூனிஇறால், மற்ற சிறுஇனப் பாரை மீன்கள் பெரும்பாரையின் உணவு. கடல்மட்டத்துக்கு மிக அருகே பறந்து இரைதேடும் கடற்பறவைகளையும் பெரும் பாரை துள்ளிப் பாய்ந்து பிடிக்கக் கூடியது.
கடலில் மற்ற மீன்களை இது இரைகொள்ளும் விதம் தனித்துவமானது. தனது வலிமையான உடலால் இரைமீனை பெரும்பாரை அடிக்கும். அதில், இரை மீன் அதிர்ச்சியுற்று நிலைகுலையும் போது மற்ற மீன்களை முந்திக் கொண்டு இரை மீனை இது பிடித்து உண்ணும். பார்க்கடல் சிறுசுறாக்களை பெரும்பாரை சிலவேளைகளில் பின் தொடர்ந்து செல்லும். சுறா இரையுண்ணும்போது அதன் கவனம் சிதறும் நேரத்தில் சுறாவின் இரையை பெரும்பாரை உணவாக்கும். சிறு சுறாக்களையும் பெரும்பாரை உணவாக்குவதுண்டு.
பெரும்பாரைக்கு இயற்கையான எதிரிகள் இரண்டே பேர்தான். ஒன்று சுறா. மற்றொன்று மனிதகுலம். உருவில் பெரிய பெரும்பாரை சில வேளைகளில் மற்ற பெரிய இன பாரைமீன்களுடன் உறவு கொள்வதாகக் கருதப்படுகிறது. பவழப்பாறைகள் அழிந்து வருவதால், அதனுடன் சேர்ந்து இந்த அழகிய பெரும் பாரை மீன் இனமும் அழிவை எட்டி வருகிறது.

No comments :

Post a Comment