Wednesday, 31 October 2018


வெள்ளி அரசன் (Tarpon)

வெங்கணா (Herring) வகையைச் சேர்ந்த ஒரு பெரிய மீனினம் இந்த டார்பன் (Tarpon) மீன். நூறு மில்லியன் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மீன் இனம் இது. அது மட்டுமல்ல. பழங்கால என்பு மீன்களின் (Bony Fish) முன்னோடி டார்பன் மீன்தான்.
வெள்ளி நிறத்தில் இந்த மீன் துள்ளுவதால், சில்வர் கிங் (வெள்ளி ராசா) என்பது இந்த மீனின் செல்லப்பெயர். வெப்பக் கடற்பகுதி மீனான டார்பனுக்கு தமிழில் என்ன பெயர் என்பது சரிவரத் தெரியவில்லை. Megalopidae குடும்பத்தின் ஒரே உறுப்பினர் இந்த டார்பன் மீன்தான்தான் என்று கூறுவார்கள். சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட இருவகை டார்பன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரு குடும்பங்களாக அவை பிரிக்கப்பட்டிருப் பதாகவும் சொல்வார்கள்.
டார்பன் மீன்கள் ஐந்தடி வரை வளரக் கூடியவை. பெண் மீன் எட்டடி நீளம் கூட இருக்கும். டார்பன் மீன்களில் பெரியவை 300 பவுண்ட் வரை எடையிருக்க வாய்ப்புண்டு. பெண் மீன் ஐம்பது ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆண் டார்பன்கள் முப்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. அமெரிக்காவின் சிகாகோ நகர மீன் காட்சியகத்தில் வசித்த டார்பன் மீன் ஒன்று 63 வயது வரை வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.
நீண்ட வாழ்நாள் இருப்பதால் டார்பன் மீன் மிக மெதுவாகவே வளரும். ஏழு வயதில் பருவமடையும். டார்பன் மீன்களுக்கு பற்கள் இல்லை. அதனால், இரையை முழுதாக விழுங்கும். டார்பனின் வால் கடிமானத் தன்மையுடையது. கரடுமுரடானது, சொரசொரப்பானது.
கெழுது, சாளை, சிறு இறால், மடவை, முரல் போன்றவை டார்பன் மீன்களின் இரைகள். கடலடியில் இறந்து கிடக்கும் சிறுமீன்களையும் டார்பன் தின்னும்.
காற்றுப்பை அல்லது நீந்து சவ்வுப்பை (Swim Bladder) கொண்ட கடல் மீன்களில் டார்பனும் ஒன்று. மிதப்புத்தன்மையை கட்டுப்படுத்த உதவும் இந்த காற்றுப்பை, நுரை யீரல் போல செயல்பட்டு டார்பன் மீன் நேரடியாக காற்றை சுவாசிக்க உதவுகிறது. இதனால், தூண்டிலில் சிக்கினால் டார்பன் மீன் நீண்ட நேரம் போராடும். கடல்மேல் காற்றுக்காக உருளும்.
டார்பின் மீனின் முதன்மை எதிரிகள் வரிப்புலியன், கொம்பன் சுறா. மற்றொரு எதிரி மனிதன்.
டார்பின் மீனின் செதிள்கள் ஒவ்வொன்றும் ஒரு வெள்ளி நாணயத்தின் அளவுக்கு இருக்கும். பளபளவென மெருகேற்றப்பட்ட மாழை (Metal) போல இந்த மீனின் உடல் ஒளியை பிரதிபலிக்கும். கோணல் வாயும், முதுகுத் தூவியில் நீண்டுநிற்கும் ஓர் இழையும் டார்பன் மீனின் முதன்மை அடை யாளங்கள். வால் கவை வால். டார்பனின் கீழ்த்தூவி (Felvic Fin) உடலின் பின்புறம் சற்று தள்ளி அமைந்திருக்கும்.
டார்பன் மீனின் முதுகுத்தூவியின் இறுதியில் ஓர் இழை மட்டும் நீண்டு நிற்கும் அல்லவா? அந்த இழை மீன் முதிர் வயதை அடையும்போது உதிர்ந்து விடும்.
டார்பன் மீன் கரையோரமாகவும் சுற்றித்திரியும். துறைமுக பாலங்களில் இருந்து  வீசப்படும் தூண்டில்களில் கூட டார்பன் சிக்கும். டார்பன் உண்ணத்தகுந்த மீன் அல்ல. எனவே மீன் தூண்டிலில் பிடிபட்டால் உயிருடன் மீண்டும் அதை கடலில் விட்டுவிடுவார்கள்.
டார்பன் மீனின் இளைய தம்பியாக கிழங்கான் (Lady Fish) மீனைக் கருதலாம். டார்பனுடன் ஒப்பிடும்போது கிழங்கான் மிகவும் சிறியது. சிறு செதிள்கள் கொண்டது. கிழங்கானின் சதை சற்று எண்ணெய்த்தன்மை நிறைந்தது. ஆனால், கிழங்கான் தூண்டிலில் சிக்கினால், அண்ணனுக்கு உள்ள அத்தனை குணங்களும் அதற்கு வந்துவிடும். தூண்டிலில் கிழங்கான் போராடும். வால் நடனமும் புரியும்.

Thursday, 18 October 2018




மாசி கருவாடு

மாசி கருவாடு

மாசி என்றால் என்ன? அது ஒரு தமிழ்மாதம் என்பீர்கள். கடல் சாராத உள்நாடுவாழ் தமிழர்களுக்கு வேண்டுமானால் மாசி, தமிழ் மாதமாக இருக்கலாம். ஆனால், கடல்சார் தமிழர்களுக்கு, மாசி என்பது தமிழ்மாதம் மட்டுமல்ல, அது ஒருவகை கருவாடும் கூட. 

மாசி கருவாட்டின் தாய்மடி இந்தியப் பெருங் கடலில் உள்ள மாலத்தீவுதான் (Maldives). ராஜராஜ சோழன் காலத்தில் சோழக் கடற்படையால் கைப்பற்றப்பட்டு, தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த மாலைத்தீவுகள்தான் இன்று மாலத்தீவு என்ற பெயரில் தனிநாடாக விளங்கு கிறது.
மாலத்தீவில் பிடிக்கப்படும் சூரை மீனை வெட்டி, அவித்து, புகையூட்டி, வெய்யிலில் உலர்த்தி மாசி தயாரிக்கப்படுகிறது. மீனை தோலுரித்து செதிள், குடல் நீக்கியபின், தலை, நடுமுள் (முதுகெலும்பு) போன்றவை அகற்றப்படும். பிறகு வயிற்றுப்பாகம் தனியாகப் பிரிக்கப்படும்.

பின்னர் இது நான்காக துண்டாடப்படும். பெரிய சூரைமீனாக இருந்தால் இந்தத் துண்டங்கள் மேலும் சிறுதுண்டங்களாக்கப்படும். அரியப்பட்ட சூரைமீன் துண்டங்களை அண்டாவில் அரைவேக்காடாக வேக வைப்பார்கள். ஒரு கொதி வந்ததும், இந்த மீன் துண்டங்களை இறக்கி, மெல்லிய ஒரு சணல் சாக்குப்பையில் இட்டு, திருகி திருகி சொட்டுத் தண்ணீரின்றி பிழிவார்கள். பின்னர் மூன்று நாள்கள் வரை இந்தத் துண்டங்கள் வெய்யிலில் காய வைக்கப்படும்.
மாசி கருவாடு
வெய்யிலில் உணங்கிய இந்த மீன் துண்டங்கள் இப்போது பூட்டிய ஓர் அறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கே அடுப்பின் மேல் பரண் அமைத்து, வைக்கோல் பரப்பி மீன் துண்டங்களை அடுக்குவார்கள். புகையூட்டப்படும் இந்த துண்டங்கள் சில நாள்களுக்குப்பின் மரக்கட்டை வடிவத்தில், மாசிக்கருவாடாக மாறுகின்றன.
மாலத்தீவு, தமிழகம், கேரளம், இலங்கை, இலட்சத்தீவுகள் எனப்படும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் பகுதி மக்களுக்கு மாசிக் கருவாடு ஒரு மிகச்சிறந்த சமையல் சேர்பொருள். குளிரூட்டி பாதுகாக்கத் தேவையில்லாத மாசிக்கருவாடு, பல்வகை உணவுகளுக்குச் சுவையூட்டுகிறது.

Tuesday, 16 October 2018


பெரும்பாரை (Giant Trevally) (Caranx ignobillis)
பாரை மீன் இனங்களுக்கு கணக்கே இல்லை. நமது நளியிரு முந்நீர் வலைப் பூவில் கூட 96 வகையான பாரை மீன்களின் பட்டியல் உண்டு. பாரை இனத்தில் ஒன்று பெரும்பாரை (Giant Trevally). இதன் அறிவியல் பெயர் Caranx ignobillis.
ஆழம் குறைந்த கடல் பார்ப்பகுதிகளில் தனித்தோ அல்லது சிறுகூட்டமாகவோ வாழும் மீன் பெரும்பாரை. செங்குத்தான மொண்ணை வடிவ தலை அமைப்பே இந்த மீனின் முதன்மை அடையாளம். வால்பகுதி வெளி நேர்த்தசையில் இந்த மீனுக்கு 26 முதல் 28 கூரிய எலும்புத் தகடுகள் அமைந்திருக்கும். வெள்ளி நிறம் முதல் கருநிறமாகவும் கூட பெரும் பாரை காணப்படும். கருநிற மீன்களின் மேற்பாதி உடலில் வெள்ளிநிற வேலைப்பாடுகள் திகழும். மேல்தாடையில் கோரைப்பற்களும், கீழ்த்தாடையில் கூம்பு வடிவ பற்களும் விளங்கும். கருநிற பெரும்பாரை மீன்கள் அதிர்ச்சி அடைந்தால் அவை வெள்ளிநிறமாக மாறி, பின் பழைய நிறத்துக்கு திரும்பும்.
பெரும்பாரை மீன் ஐந்தரை அடி நீளம் வரை வளரக்கூடியது. 80 கிலோ வரை எடை  கொண்டது. 3 அல்லது 4 ஆண்டுகளில் இது முழுவளர்ச்சியை எட்டும். அந்த கால கட்டத்தில் பெரும்பாரை மீன் இரண்டடி நீளமாக வளர்ந்திருக்கும். ஒரு மீட்டர் நீளத்துக்கு மேல் வளர்ந்த பெரும்பாரை 8 முதல் 10ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மீனாக இருக்கும்பெரும்பாரை மீன்கள் தனித்தும் சில வேளைகளில் கூட்டமாகவும் வேட்டையாடும். சிறு ஆமை, ஓங்கல், கல்இறால், கணவாய், தோட்டுக்கணவாய், களவாகூனிஇறால், மற்ற சிறுஇனப் பாரை மீன்கள் பெரும்பாரையின் உணவு. கடல்மட்டத்துக்கு மிக அருகே பறந்து இரைதேடும் கடற்பறவைகளையும் பெரும் பாரை துள்ளிப் பாய்ந்து பிடிக்கக் கூடியது.
கடலில் மற்ற மீன்களை இது இரைகொள்ளும் விதம் தனித்துவமானது. தனது வலிமையான உடலால் இரைமீனை பெரும்பாரை அடிக்கும். அதில், இரை மீன் அதிர்ச்சியுற்று நிலைகுலையும் போது மற்ற மீன்களை முந்திக் கொண்டு இரை மீனை இது பிடித்து உண்ணும். பார்க்கடல் சிறுசுறாக்களை பெரும்பாரை சிலவேளைகளில் பின் தொடர்ந்து செல்லும். சுறா இரையுண்ணும்போது அதன் கவனம் சிதறும் நேரத்தில் சுறாவின் இரையை பெரும்பாரை உணவாக்கும். சிறு சுறாக்களையும் பெரும்பாரை உணவாக்குவதுண்டு.
பெரும்பாரைக்கு இயற்கையான எதிரிகள் இரண்டே பேர்தான். ஒன்று சுறா. மற்றொன்று மனிதகுலம். உருவில் பெரிய பெரும்பாரை சில வேளைகளில் மற்ற பெரிய இன பாரைமீன்களுடன் உறவு கொள்வதாகக் கருதப்படுகிறது. பவழப்பாறைகள் அழிந்து வருவதால், அதனுடன் சேர்ந்து இந்த அழகிய பெரும் பாரை மீன் இனமும் அழிவை எட்டி வருகிறது.