ஒரு மீனின் விலை 5 லட்சம்
கோகேல்ஸ் |
1938ஆம் ஆண்டு. தென்
ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் பகுதி மீனவர்கள் கடலில் இழுவைப் படகில்
மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விந்தையான ஒரு
மீன் சிக்கியது. ஏறத்தாழ ஐந்தடி நீள மீன் அது. அப்படி ஒரு மீனை அந்தப் பகுதி மீனவர்கள் யாரும் அதுவரை பார்த்ததே இல்லை.
கனமான செதிள்கள், பெரிய கண், வலுவான தாடை, தடிமனான தூவி,
கட்டை குட்டையான வால்.
அந்த மீனை அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் சென்று பேராசிரியர் ஜே.எல்.பி. ஸ்மித் என்பவரிடம்
மீனவர்கள் ஒப்படைத்தனர். மீன் இயலில் கரை கண்ட பேராசிரியர்
ஸ்மித், அந்த மீனைப் பார்த்ததும் திகைத்து திக்குமுக்காடிப் போனார்.
காரணம், அது வரலாற்றுக்கு முந்தைய, ஏறக்குறைய 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
ஒரு பழங்கால மீன். (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்).
கோகேல்ஸ் (Coelacanths) என்பது அந்த மீனின் பெயர். ‘70
மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மறைந்து போனதாகக் கருதப்பட்ட இந்த மீன்
இனம், இன்னும் உயிரோடா இருக்கிறது?‘ என்று
அதிர்ந்து போனார் ஸ்மித்.
டெவானியன் (Devonian) காலத்தில் வாழ்ந்து, இப்போது ஃபாசில் (Fossil) எனப்படும் புதைபடிவங்களாக
மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த பழங்கால மீன், ‘வாழும் வரலாறாக‘
இன்னும் உயிரோடு கடலில்இருக்கிறது என்பது உயிரிலாளர் ஸ்மித்தை
வியப்பின் உச்சத்துக்கே கொண்டு போய்விட்டது.
பிடிபட்ட மீன் இறந்துவிட்ட நிலையில், அதை
பாடம் செய்யும் பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரால்
மீனின் தோலை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. உள்ளுறுப்புகள்
சேதமாகி விட்டன. அது மிகப்பெரிய இழப்பு.
ஆனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப்
பெருங்கடலில் உள்ள கொமோரோஸ் தீவுக்கூட்டத்தில் மீண்டும் இதே வகை மீன் சிக்கியபோது
வியப்பில் விதிர்விதிர்த்துப் போனார்கள் கடல் வல்லுநர்கள்.
ஆனால் அறிவியல் உலகத்துக்குத்தான் அந்த கோகேல்ஸ் (Coelacanths)
மீன் அதிசயமாக இருந்தது. அங்குள்ள
மீனவர்களுக்கு அது ஒன்றும் அதிசய மீன் இல்லை. அவ்வப்போது
பிடிபடும் மீன் அது. சாப்பிட அவ்வளவு ருசியாக இல்லாத அந்த
மீனை, உப்பிட்டு கொமரோஸ் மீனவர்கள் உலர் மீனாகப் பயன்படுத்தி
வந்தார்கள்.
கோகேல்ஸ் மீனின் முரட்டுத்தனமான தோலை, சைக்கிள் டியூப்புக்கு பஞ்சர் ஒட்டும்போது,
டியூப்பைத் தேய்த்து சரிசெய்ய அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
அதன்பின் மொசாம்பிக் நாட்டின் வடக்கிலும், ஆப்பிரிக்காவுக்கும், மடகாஸ்கர் தீவுக்கு இடைப்பட்ட
கடலிலும் கோகேல்ஸ் மீன்கள் உயிர்வாழ்வது தெரிய வந்தது.
கோகேல்ஸ் மீன்கள், 75 முதல் 200 பாவ (Fathom) கடலில் காணப்படும் மீன்கள். பார் சரிவுகளில் இவை காணப்படும். இங்கு போடப்படும்
வலைகள் அடவும் என்பதால் கோகேல்ஸ் மீன்களைப் பிடிப்பது மிகவும் கடினம். தற்செயலாக இந்த வகை மீன் வலையில் சிக்கினால்தான் உண்டு.
எஃகு நீலநிறம் கொண்ட இந்த கோகேல்ஸ் மீன்கள், இலேசான பழுப்புநிறச் சாயலுடன் இருக்கும். உடல் முழுக்க
வெள்ளையும், கிரீம் நிறமும் கலந்த திட்டுகள் காணப்படும்.
பெரிய கனமான செதிள்கள் இதன் உடல் முழுவதையும் மூடியிருக்கும்.
இந்த மீனின் பின்புற முதுகுத்தூவி, அடித்தூவி,
பக்கத்தூவிகளில் சிறிய காம்பு போன்ற எலும்பு உண்டு. இதனால், பலம் பொருந்திய மீனாக கோகேல்ஸ் திகழ்கிறது.
முதுகெலும்புள்ள இந்தக் கால மீன்களின் மூதாதை இந்த கோகேல்ஸ்
மீன்தான். ஜூராசிக் யுகத்தில் வாழ்ந்த டைனோசர்கள், பூவுலகத்தை விட்டு ‘குட்பை‘ சொல்லி
மறைந்து விட்ட நிலையில், இயற்கையின் இடர்பாடுகளைத் தாங்கி
ஒரு மீன் இனம், ‘என்றும் வாழும் நம் தென்தமிழ்போல‘,
400 மில்லியன் ஆண்டுகளாக கடலில் நடமாடுவது ஆச்சரியம்தானே?
இந்த வகை அரிய கோகேல்ஸ்
மீனில், உயிருள்ள மீனுக்கு உயிரியலாளர்கள் வைத்திருக்கும்
விலை ஏறத்தாழ 5 லட்சம் ரூபாய். தென்ஆப்பிரிக்காவின்
கிழக்குப் பகுதியும், மொசாம்பிக் நாடும், கொமோரோஸ் தீவுகளும் இந்தியப் பெருங்கடலில்தான் உள்ளன. ஆகவே, நம் கடலில் கூட இருக்கலாம் இந்த அதிசய
கோகேல்ஸ் மீன்.
No comments :
Post a Comment