Wednesday, 15 November 2017

குரங்கன் சுறா (Port Jackson Shark)

சுறாக்களில் எத்தனை எத்தனையோ வகைகள். இவற்றில், மாட்டுத்தலை சுறாக்கள் எனப்படும் Bullhead சுறாக்கள், பழங்கால சுறா வகையறா ஒன்றின் நேரடி வாரிசுகள். தமிழில் இவை ‘குரங்கன் சுறாக்கள்‘ என அழைக்கப்பெறுகின்றன.
குரங்கன் சுறாக்களில் மொத்த வகைகள் பத்துக்கும் குறைவு. அதாவது இவற்றில் ஏறத்தாழ மொத்தம் 8 வகைகள் தேறும்.
இந்த எட்டு வகைகளில் ஒன்று போர்ட்ஜேக்சன் (Port Jackson) சுறா.
ஒட்டுமொத்த குரங்கன் சுறாக்களில் ஆஸ்திரேலியாவைச் சுற்றி மொத்தம் 3 வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் போர்ட்ஜேக்சன் சுறாவும் ஒன்று. சிட்னி துறைமுகத்துடன் ஒட்டிஉறவாடும் இயற்கைத் துறைமுகமான ஜேக்சனை சுற்றி இவை அதிகம் காணப்படுவதால் ‘போர்ட் ஜேக்சன்‘ என்ற பெயர் இவற்றுக்கு கேட்காமலேயே வந்து வாய்த்து விட்டது.
குரங்கன் சுறாக்களுக்கே உரித்தான விதத்தில் போர்ட் ஜேக்சன் குரங்குச் சுறாவுக்கும் மொண்ணையான பெரிய தலை உண்டு. கண்மேல் ஒரு முகடு உண்டு. முதுகில் ஒரே அளவிலான இரு தூவிகள் பொலியும். இந்த இரு தூவிகளின் முன்புறமும் கொம்பு போன்ற ஓர் அமைப்பு உண்டு.
இந்த கொம்பு, இளம் குரங்கன்களுக்கு கூர்மையாகவும், முதிய குரங்கன்களுக்கு மழுங்கலாகவும் இருக்கும். இந்த தூவி கொம்புகள் ஒருவேளை கரையொதுங்கினால் அவை ஆட்டுக் கொம்புகளா அல்லது பறவையின் சொண்டா (அலகா) என பல ஐயப்பாடுகளை எழுப்பும். குரங்கன் சுறாவின் இந்த தூவிக் கொம்புகளில் நஞ்சிருப்பதாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், அதில் நஞ்சு எதுவும் இல்லை.
போர்ட் ஜேக்சன் குரங்கன் சுறாவின் நிறம் சாம்பல் பழுப்பு. இந்த சுறாவின் மீதுள்ள சேணக் குறிகள் மிகவும் புகழ்பெற்றவை. சுறாவின் கண்ணை மூடியபடி, தூவிகளைத் தொட்டு இந்த இருண்ட பட்டைகள் உடல் முழுக்க ஓடும்.

ஐந்தரை அடி நீளம் வரை வளரக்கூடிய போர்ட் ஜேக்சன் குரங்கன் சுறா, கடலில் 330 அடி ஆழத்தில் இருந்து 903 அடி ஆழம் வரை காணப்படும். பாறைகள் நிறைந்த கடலடி பகுதியே இதன் வாழ்விடம். எப்போதும் கடல்தரையை ஒட்டியே குரங்கன் சுறா வாழும். அரிதாக மண்டி, சேற்றுப்பகுதிகள், கடற்புற்கள் நடுவிலும் இது காணப்படும். கடல் மணல் தரையில் குரங்கன் சுறா இரை தேடும்.
குரங்கன் சுறா ஓர் இரவாடி மீன். அதாவது இரவில் நடமாடி இரைதேடக் கூடிய மீன். பகலில் பார்க்குகைகள், அல்லது பார்ப்பள்ளங்களில் தங்கி நீரோட்டத்தை சமாளித்தபடி ஓய்வில் இருக்கும் குரங்கன் சுறா, இரவானதும் மணலில் இரைதேடும்.
சிப்பிகள், சிறுமீன்கள், நண்டு, கல்இறால், கணவாய், மூரை, உடுமீன் எனப்படும் நட்சத்திர மீன் போன்றவை இதன் முதன்மை உணவு.
மகாகவி பாரதியாருக்குப் பிடித்த ‘வீரப் பலகாரங்களான‘ முறுக்கு, பகோடா போல, குரங்கன் சுறாவுக்கு இந்த கொறுக் மொறுக் இரைகளே மிகவும் பிடித்தமானவை. அதிலும், சிப்பிகள்தான் குரங்கன் சுறாவின் மிக முதன்மையான உணவு.

குரங்கன் சுறாவின் சிறிய வாயின் இரு தாடைகளிலும் இருவேறு வகையான பல்வரிசைகள் இருக்கும். முன் வரிசைப் பற்கள் சிறியவை. கூர்மையானவை. இரையைத் தப்பிச் செல்ல விடாமல் கவ்விப்பிடிக்கக் கூடியவை. பின்வரிசையில் இருக்கும் பற்கள் பெரியவை. நமது கடைவாய் பற்களைப் போல தட்டையானவை. இரையை ‘கறுக்முறுக்‘ என கடித்துத் தின்ன உதவுபவை.
குரங்கன் சுறாவின் கடி, மனிதர்களுக்கு ஆபத்தற்றது. ஆனால், கடும் வலியைத் தரக்கூடியது. நம் காலை குரங்கன் சுறா கவ்விப் பிடித்திருக்கும் போதும், நம்மால் குரங்கன் சுறாவை இழுத்துக் கொண்டு நீந்த முடியும்(?) குரங்கன் சுறாவின் மெதுவான கடி, பொதுவாக நம் தோலைக் கிழித்து உள்ளே செல்லாது. அந்த வகையில் குரங்கன் சுறா மனிதர்களுக்குத் தீங்கிழைக்காத சுறா. மீன்காட்சியகங்களில் உள்ள பழகிய குரங்கன் சுறாக்கள், முக்குளிப்பவர்களை கட்டியணைத்து அவர்களுடன் அன்புடன் உறவாடுவதும் உண்டு.
குரங்கன் சுறா முட்டையிட்டு குஞ்சு பொரிக்கக் கூடியது. கோடையில் தெற்கு நோக்கியும், வாடையில் (குளிர்காலத்தில்) வடக்கு நோக்கியும் குரங்கன் சுறா இடம்பெயரும். குளிர்காலத்தில் இவை முட்டையிடும்.
குரங்கன் சுறாவின் முட்டைகள், வெளிமானின் (Black buck) திருகுக் கொம்புகள் போல கடினமான ஓட்டுடன் நிறைய திருகல்களுடன் காணப்படும். இவை கடற்கரைகளில் கரையொதுங்கவும் செய்யும். ஒரு முட்டைக்கு ஒரு குஞ்சு வீதம் வெளிவந்து தாயின் அரவணைப்பு எதுவுமின்றி தனித்து வாழும். குரங்கன் சுறாவின் முட்டைகளில் 89 விழுக்காடு, பிற கடல்உயிர்களுக்கு இரையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கன் சுறா பல வகையிலும் தனித்துவம் வாய்ந்தது. இந்த வகை சுறாவுக்கு மொத்தம் 5 செவுள்கள் (Kills). இந்த மூச்சுத்துளைகள் சுறாவின் வாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். பிற இன சுறாக்கள் பொதுவாக வாயைத் திறந்தபடி கடல்நீரை உள்ளிழுத்து, மூச்சுவிடக் கூடியவை. மேலும் எப்போதும் நீந்திக் கொண்டிருந்தால்தான் சுறாக்களால் மூச்சுவிட முடியும். ஆனால், குரங்கன் சுறாவின் கதை தனி. 5 செவுள் ஓட்டைகளில் முதல் ஓட்டை வழியாக கடல்நீரை உள்ளிழுத்து, குரங்கன் சுறாவால் மூச்செடுக்க முடியும். அங்குமிங்கும் அலைந்து திரிய தேவையில்லாமல், படுத்த இடத்தில் கிடையில் இருந்தபடியே குரங்கன் சுறாவால் மூச்செடுக்க முடியும்.
அதுமட்டுமல்ல, இரைதேடும் போது வாயால் மணலில் ஊதி, உள்ளிருந்து பாயும் இரையை மணலுடன் முதல் செதிளால் ஈர்த்து இழுத்து, பிறகு மணலை விலக்கி, இரையை மட்டும் வாய்க்குள் தள்ள குரங்கன் சுறாவால் முடியும்.

அதுமட்டுமல்ல, மூச்சுத்துளைகள் வாயுடன் இணைக்கப்பட்டிருப்பதால், குரங்கன் சுறாவால் ஒரே நேரத்தில் உண்ணவும், மூச்செடுக்கவும் கூட முடியும் என்பது இன்னும் சிறப்பான செய்தி.

No comments :

Post a Comment