Wednesday, 22 November 2017

வாவல் (Pomfret)

ஆவலைத் தூண்டும் ஒரு மீன் வாவல். கடல்மீன்களில் மிகச்சுவையான மீன்களில் வாவலும் ஒன்று. Bramidae குடும்பத்தைச் சேர்ந்த, இந்த வாவல் மீன்களில் மொத்தம் 20 முதல் 35 இனங்கள் உள்ளன.
முதுகில் ஒற்றைத் தூவியும், அந்த தூவி உடல்நீளத்துக்கு நீண்டிருப்பதும் வாவல் மீனின் தனி அடையாளம். தட்டையான உடலும், பிளந்த வாலும் வாவலின் மற்றைய அடையாளங்கள்.

வவ்வுதல்என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே வாவல் என்ற பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அதிலும் தென் தமிழக கடலோரங்களில்தான் இந்த மீன், வாவல் என வழங்கப்படுகிறது. சென்னை போன்ற வடதமிழக கடற்கரைகளில் இந்த மீனுக்குப் பெயர் வவ்வால்.

வாவல்களில் 20 முதல் 35 வகைகள் இருந்தாலும், வாவல் என்றதும் நம் நினைவுவில் உடனே நீந்திவருவது வெள்ளை வாவலும்,. கருவாவலும்தான்
வெள்ளை வாவல், ஒரே எலும்புடன், வெள்ளை சதையுடன் கூடிய, நெய்யற்ற  மீன் சுவையான மீன். அதுபோல, மற்றொரு ரகமான கருவாவல் மீன், வெள்ளை வாவலுடன் ஒப்பிடும்போது அவ்வளவு சுவையானது அல்ல. விலையும் உயர்ந்ததும் அல்ல. எனினும்,கருவாவலாக இருந்தாலும் வாவல் வாவல்தான்.
வாவல் வகையறாவில் மிக உயர்ரக மீனாகக் கருதப்படுவது ஐய்வாவல்.
கருவாவல்
(China Silver Pomfret). சென்னையில் இதன் பெயர் மோவான் அல்லது மொகான் என நினைக்கிறேன்.
இந்த சீன வெள்ளி வாவலான ஐய் வாவல், வெள்ளை வாவலை விட சற்று பெரியது. அகலமானது. மற்ற வாவல்களை விட அதிக சதைப்பற்றுள்ளது. சமமான, ஒரே அளவிலான தாடைகளைக் கொண்டது. வெள்ளிநிற உடலில் லேசான கருநிறசாம்பல் நிறம் கொண்டது. வாவல்களில் அதிக விலை போகும் மீன் ஐய் வாவல்மீன்தான்.
வாவல்களில் இன்னும் மூக்கரை வாவல், சிரட்டை வாவல், அழுக்கு வாவல் வகைகளும் உள்ளன.
மூக்கரை வாவல், Snubnose pomfret என அழைக்கப்படுகிறது. மூக்கு சிறியதாக (சப்பையாக), இருக்கும் வாவல், மூக்கரை வாவல்.
பொன்னிற வாவல் என்பது இதன் இன்னொரு பெயர். தூவிகளில் பொன்னிறம் கொண்ட இந்த மீன் உண்மையில் வாவல் இனத்தைச் சேராத Pompano இனத்தைச் சேர்ந்த மீன். ஆனால், இதுவும் சுவையான மீனே.
வாவல் மீன்களைச் சுற்றி பல பிம்பங்கள கட்டமைக்கப்பட்டுள்ளன.
அதில், வாவல் மீனை தலையைப் பிடித்து தூக்கினால், அது தலையை வெட்டி இழுத்து, நமது மணிக்கட்டை முறித்துவிடும் என்பதும் ஒன்று. இது தவறான நம்பிக்கை என்று கடலோடிகள் சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
சில வாவல்மீன்களின் முதுகு மற்றும் அடித்தூவிகளிலும் செதிள்கள் உண்டு என்று சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
சரி. வாவல் மீனை, வாவல் என்று அழைப்பது சரியா? வவ்வால் என்று அழைப்பது சரியா?
மூக்கரை வாவல்
இவை இரண்டுமே தமிழ்ச்சொற்கள்தான். ஆகவே, எப்படி அழைத்தாலும் அதில் தப்பில்லை.
நாவல் பழம் நவ்வால்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. நவ்வலடி என்ற ஊர்ப் பெயர் தமிழகத்தில் உண்டு. ஆகவே,
‘பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது ரோஜாதானே?‘ என்பார் ஷேக்ஸ்பியர். அதுபோல இந்த மீனை வாவல் என அழைத்தாலும், வவ்வால் என அழைத்தாலும் இதன் சுவை குன்றி விடாது.
வவ்வுதல் என்ற பெயரில் இருந்து இந்த மீனுக்குப் பெயர் வந்திருந்தால், வாவலை என்பதை விட வவ்வால் என்ற பெயரே சரிஎனத் தோன்றுகிறது.
மீன் சந்தைகளில் செதிள் உதிர்ந்த வாவல்களை விட செவுள் உதிராத வாவல்களே அதிகம் விரும்பி வாங்கப்படும்.

பின்குறிப்பு: (வௌவால் பறவைக்கு தமிழில் வாவல் என்ற பெயர் உண்டு)

No comments :

Post a Comment