Thursday, 3 August 2017

இழுப்பா (Large tooth sawfish) (Pristis Perotteti)

இழுப்பா என்ற இந்த மீனை தமிழில் எப்படி எழுதுவது என்பது கூட தெரியவில்லை? இது இழுப்பாவா? அல்லது இலுப்பாவா? இல்லை, இளுப்பாவா? அப்படியே இந்த மூன்று பெயர்களில் ஏதாவது ஒன்றை இந்த மீனின் பெயராகக் கொண்டாலும், அந்தப் பெயருக்குப் பொருள் என்ன என்று நம்மிடம் யாராவது கேட்டால் திருதிருவென விழிக்க வேண்டியதுதான்.
இழுப்பா என்ற இந்த மீனின்  பெயரை நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் இதுவரை யாரும் எழுத்து வடிவில் பதிவு செய்ய வில்லையா? இல்லை, அதுபற்றி நமக்குத்தான் தெரியவில்லையா? என்பதும் புரியவில்லை.
இழுப்பா என்பது சுறா மற்றும் அதன் இனமான வேளா, திருக்கை மீன் குடும்பத்தைச் சேர்ந்தது. கற்றாளை போல இருபக்கமும் முள்கொண்ட கொம்புடைய வேளா மீனுக்கு இழுப்பா மிகவும் உறவுக்கார மீன். வேளாவைப் போலவே இழுப்பாவுக்கும் கொம்புண்டு.  ஆனால் வேளாவை விட இழுப்பா மிகவும் பெரியது. மிகவும்  நீளமானது.
இயல்பாக, இழுப்பா 19.7 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஓர் இழுப்பா மீன், 23 அடிநீளம் வரை வளர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

இழுப்பா சாம்பல் கலந்த பச்சை நிறம் முதல் பொன்பழுப்பு நிறம் வரை பல வண்ணச்சாயல்களில் காணப்படும். இதன் அடிவயிறு கிரீம் நிறத்தது.
இழுப்பாவுக்கு வேளா போன்ற கொம்பு உண்டு என்பதை ஏற்கெனவே கூறி விட்டோம். இழுப்பாவின் கொம்பு, அதன் உடலின் மொத்த நீளத்தில் நான்கில் ஒரு பங்காக இருக்கும்.
வேளா கொம்பைவிட இழுப்பாவின் கொம்பு அகலமானது. வேளா கொம்பின் இரு பக்கங்களிலும், 23 முதல் 34 பற்கள் (முட்கள்) காணப்பட்டால், இழுப்பாவின் கொம்பில் 14 முதல் 21 பற்கள் காணப்படலாம். கொம்பை இருபுறமும் அசைத்து, சகதியைக் கிளறி இழுப்பா இரை தேடும். சிறுமீன்கள், இறால்கள் இதன் முதன்மை உணவுகள். இழுப்பா வளர வளர அதன் உணவுப்பட்டியலில் அதிக அளவில் மீன்களே இடம் பெறும்.
இழுப்பா சுறா போலவே பார்வைக்குத் தோன்றினாலும், அதன் இருபக்கத் தூவிகள், அது திருக்கைக்கு நெருக்கமான மீன் என்பதை நமக்கு உணர்த்தும். இழுப்பா சுறா போலவே நீந்தும். கடலில் 10 மீட்டர்  (33 அடி) ஆழத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இது காணப்படும். முழுக்க முழுக்க நன்னீராக இருந்தாலும் சரி, மிகஅதிக கரிப்புத்தன்மை கொண்ட கடல்நீரின் சில பகுதிகளாக இருந்தாலும் சரி, எந்தவகை நீரிலும் இழுப்பா வாழக்கூடியது.
இழுப்பாவின் இரு கண்களுக்குப்பின்னால் உள்ள துளைகள் மூலம், கடல் தரையில்அக்கடாஎன்று படுத்திருந்தாலும்கூட இழுப்பாவால் கடல்நீரை துளைகள் வழியே இழுத்து அதில் உள்ள உயிர்க்காற்றை உறிஞ்சி, மூச்செடுக்க முடியும்.
இழுப்பா கொம்பு இளமையில் நெகிழும் தன்மை கொண்டது. வளையக்கூடியது. ஒரு மெல்லிய சவ்வுத்தோல் இழுப்பாவின் கொம்பை மூடியிருக்கும். வளர வளர இழுப்பாவின் கொம்பு இறுகி, உறுதிமிக்க ஓர் ஆயுதமாக மாறும்.
இழுப்பாவின் கொம்பில் உள்ள பற்கள் வேருடன் விழுந்தால் மீண்டும் முளைக்காது. இழுப்பாவின் கொம்பில் உள்ள பற்கள், மத சின்னமாக வும், மருந்துக்காகவும் விற்கப்படுகிறது. இழுப்பா கொம்பில் செய்த தேநீரைப் பருகினால் ஒவ்வாமை (ஆஸ்துமா) நோய் வராது என்பது நம்பிக்கை. இழுப்பா கொம்பில் உள்ள முட்கள், உதிர்க்கப்பட்டு பரிசுப் பொருள்களாக அவை விற்கப்படுவதுண்டு. கோழிச்சண்டையின் போது கோழியின் காலில் கத்தியைப் போல கட்டவும் இழுப்பாவின் கொம்பு முள் பயன்பட்டிருக்கிறது. முள்நிறைந்த கொம்பு, காரணமாக மீன்வலை யில் இழுப்பா எளிதாகச் சிக்கிக் கொள்ளும். இழுப்பாவின் ஆயுதமாக கருதப்படும் கொம்பே அதற்கு எதிரியாக இருப்பது ஒரு முரண்நகை.
இழுப்பா நீண்ட வாழ்நாள் கொண்டது. மிக மெதுவாக வளரக்கூடியது. இதன் கர்ப்பக் காலம் 5 மாதங்கள். 4 முதல் 10 குட்டிகளை இது போடக்கூடியது.
இழுப்பாவின் வெள்ளை நிறமான இறைச்சி, இளநீரின் வழுக்கை போல மென்மையானது.

அதிக மீன் வேட்டை காரணமாக இழுப்பா ஐம்பது நாடுகளில் இப்போது இல்லாமல் மறைந்து விட்டது. உலக கடல்களில் இருந்து மளமள வென மறைந்து வரும் இழுப்பா இனம், ஒருநாள் முற்றிலும் அழிந்து விடும் ஆபத்தில் இருக்கிறது

No comments :

Post a Comment