கருங்கற்றாளை (Black Croaker) (Cheilotrema saturnum)
‘கற்றளை‘ என அழைக்கப்படும்
கற்றாளை இன மீன்களை ஆங்கிலத்தில் Croker அல்லது Drummers என அழைப்பார்கள். கடலின் அடிப்பகுதி
மீன் என்பதால் கற்றாளை அதனுடன் பன்னா போன்ற மீன்களை ‘தாழ்ந்த மீன்கள்‘ என அழைப்பது
தமிழில் வழக்கம்.
கற்றாளைகளில் பன்னிரு வகைகளுக்கும் மேற்பட்ட கற்றாளைகள் உண்டு. அளக் கத்தாளை, ஆண்டிக் கத்தாளை, ஆனைக் கத்தாளை,
கீறுக் கத்தாளை, சதைக் கத்தாளை, புள்ளிக் கத்தாளை, சாம்பல் கத்தாளை, வரிக் கத்தாளை,
முட்டிக் கத்தாளை, மொட்டைக் கத்தாளை, முறாக் கத்தாளை, பன்னாக் கத்தாளை, பராக் கத்தாளை,
ஓரக் கத்தாளை அவற்றுள் சில.
இந்தக் கத்தாளைகளில்
ஒன்று கருங்கத்தாளை (Black Croaker). ஒடுக்கமான உடல், கூனல் முதுகு, செவுள் மூடி
விளிம்பில் கறுப்பு நிறம் என கருங்கத்தாளை மிளிரும்.
இதன் இரு முதுகு
முள்தூவிகளுக்கு இடையே சிறிய இடைவெளி உண்டு. உடல் இருண்ட நிறமாக இருந்தாலும் தாமிரம்
போல கருங்கத்தாளை மின்னும். கருங்கத்தாளையின் உடலின் நடுப்பகுதி வெளிறி காணப்படும்.
வளர்ந்த கருங்கத்தாளைகள்
திறந்த வெளி, மணல் தரை என அவை வாழும் இடத்தின் சூழலுக்கேற்ப குறிப்பிட்ட நிறங்கள், உடல் குறிகளுடன் காணப்படும்.. அலையடிக்கும் பகுதியில் உள்ள பெரிய கருங்கத்தாளைகள் வரி வடிவங்களுடன்
திகழும். வளர்ந்த பின் மிகவும் கறுப்பாக இருக்கும் கருங்கத்தாளைகள் இருட்டுக்குகைகள்,
பாறை இடுக்குகளைத் தேடி, அங்கு பகை மீன்களின் கண்களில் படாமல் கரந்து, மறைந்து வாழும்.
கருங்கத்தாளை மீன்களில்
இளம் மீன்கள் வெளிர்மஞ்சள் நிற மேல் உடலுடன், கிடைமட்ட கறுப்புப் பட்டைகளுடன் காணப்படும்.
குட்டிக் கருங்கத்தாளைகளின் கூட்டம் கடலின் குறிப்பிட்ட ஒரு தரைப்பகுதியில் கூடி நின்றால்,
ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த இடத்தை விட்டு பத்தடி தொலைவுக்கு அப்பால் நகராது. மந்திரத்தால்
கட்டுண்டது போல அந்த பத்தடிக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வரும்.
வளர்ந்து பெரிதானதும்,
கூட்டத்தை விட்டு விலகி, மிகவும் கறுப்பான கருங்கத்தாளைகள், இருள் குகைகளில் தங்களின்
‘தவ வாழ்வைத்‘ தொடங்கும். கடலில் 100 அடி ஆழம் முதல் 10-15 அடி ஆழமுள்ள பகுதி வரை கருங்கத்தாளைகள்
காணப்படும்.
பகலில் மறைந்திருந்து
இரவில் இரை தேடு கருங்கத்தாளை மீன்களுக்கு செம்பாறை நண்டு, சிலந்தி நண்டு போன்ற பாறை
நண்டுகளே முதன்மை உணவு. ஓரடிக்கும் சற்று பெரிதாக வளரக்கூடிய மீன் கருங்கத்தாளை. கத்தாளைகளில்
அதிகம் பிடிபடாத கத்தாளை கருங்கத்தாளைதான்.
No comments :
Post a Comment