Thursday, 31 August 2017

ஆராங்கு (Rooster fish)


பாரை (Jack( இனத்தைச் சேர்ந்த மீன்தான் ஆராங்கு. ஆனால், குணநலன்களில் பாரை மீனுக்கும் ஆராங்குக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள்.
பாலா மீன் என நெல்லை கடற்பகுதியிலும், ஆராங்கு என குமரிக் கடற்பகுதியிலும் இந்த மீன் அழைக்கப்படுகிறது.
கடலின் கற்பாறைப் பகுதிகளே ஆராங்கின் உறைவிடங்கள். சிறுபார்மீன்களே இதன் உணவு. சரிந்த முன்நெற்றியும், எலும்பு போன்ற தாடையும் கொண்ட ஆராங்கு மீனுக்கு முதுகின் முதல் தூவியில் 7 நீள முட்கள், நீண்டு நிமிர்ந்து முடிவில் நூலிழை போல முடியும். இந்த உயர்ந்த முதுகுத்தூவி காரணமாகவே ஆங்கிலத்தில் இந்த மீனுக்கு சேவல் மீன் (Rooster fish) என்ற பெயர் வந்தது.
இந்த 7 முட்களும் ஆராங்கு மீனின் முதுகுப்பள்ளத்தில் அமைதியாகப் படுத்திருக்கும். ஆராங்கு மீனை யாரும் சீண்டினால், அல்லது மீன் வியப்படைந்தால் மட்டுமே இந்த ஏழும் வெளிவரும். இரை மீனை இந்த முதுகு முள்தூவியை அசைத்தபடி ஆராங்கு மீன் விரட்டிச் சென்று இரையாக்கும். கடலை விட்டு முழுமையாக வெளியே துள்ளிப் பாயவும் செய்யும்.
ஆராங்கு மீனின் பள்ளை (Swim Bladder) என்ற காற்றுப் பைக்கும், அதன் மூளைக்கும் தொடர்பு உண்டு. அதுபோல உட்புற செவிக்கும் இணைப்புண்டு. இதன் மூலம் விந்தையான ஒலிகளை ஆராங்கு மீனால் எழுப்ப முடியும்.
ஆராங்கு மீன், தூண்டிலில் சிக்கினால் மற்ற பாரை இன மீன்களைப் போல பார்களைத் தேடி ஓடாது. தூண்டிலை பாருக்குள்ளும் கொண்டு செல்லாது. திறந்த கடலில் துணிச்சலாக சவாலை எதிர்கொள்ளும். ஆராங்கைப் பிடிக்க உயிருள்ள மீனையே தூண்டிலில் இரையாகப் பயன்படுத்துவார்கள். வரிச்சூரையும், கிழங்கானும் ஆராங்கு மீனுக்குப் பிடித்தமான சரியான இரை மீன்கள்.

ஆராங்கு மீன் 1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது, 32 கிலோ வரை நிறையிருக்கக் கூடியது. வெள்ளி நிறத்தில் மிளிரும் ஆராங்கு மீனின் உடலில் இலேசான இரண்டு அல்லது மூன்று நீலப்பட்டைகள் ஓடும்.

Friday, 25 August 2017

கடல்விலாங்கு மீன் (Eel)

 கடல் விலாங்கு மீனைப் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உண்டு. என்றாலும், புதிய தகவல்களைப் பதிவிடுவது நல்லதுதானே? கடல் விலாங்குகள் கடலடி சகதி வாழ் மீன்கள். பகலில் துயில் கொண்டு இரவில் வேட்டையாடும் உயிர்கள் இவை. விலாங்கு மீன்களின் கண்கள் பெரியவை. ஆனால், இவற்றில் பெரிதாக பார்வைத்திறன் கிடையாது. இருளையும் ஒளியையும் பிரித்தறிய மட்டுமே விலாங்கின் கண்கள் பயன்படும்.
ஆகவே, கண்களை நம்பால் விலாங்கு மீன், முழுக்க முழுக்க மோப்பத்திறனையே நம்பி வாழும். பகலில் மறைந்திருந்து இரவில் புறப்படும் விலாங்குகள், மோப்பத்தால் மட்டுமே இரையைப் பின்தொடர்ந்து வேட்டையாடக் கூடியவை.
கடலடியில் சகதி மணல், பார் இடுக்குகளைத் தவிர, மூழ்கிய கப்பல்கள், படகுகளிலும் விலாங்குகள் நிரந்தரமாக தங்கி வாழும். ‘மூழ்கிய கப்பல்களில் உள்ள புதையல்களைக் காக்கும் காவலாளி‘ என்ற செல்லப்பெயரும் கூட விலாங்குக்கு உண்டு.
கடல்விலாங்குகளில் சில 165 கிலோ நிறையும், 15 ஆண்டுகால வாழ்நாளும் கொண்டவை. விலாங்குகள் மின்னல் வேகத்தில் எதிரியைத் தாக்கக் கூடியவை. தாடையில் கூரிய ஊசிப்பற்கள் இருந்தாலும் விலாங்கின் தாடை பலமில்லாதது. எனவே, இரையைக் கடித்ததும், உடலை முறுக்கி, அதன் மூலம் இது இரையின் தசையைப் பிய்த்தெடுக்கும். வளர்ந்த மிகப்பெரிய விலாங்கு, மலைப்பாம்பு போல மனிதர்களின் கையைச் சுற்றி கையை உடைத்தெறியக் கூடியது.

விலாங்கின் உடலில் உள்ள வழுவழுப்புத்தன்மை (Mucus) மூன்று விதங்களில் பயன்தரக் கூடியது. ஒன்று பார் இடுக்குகளில் விலாங்குகள் நுழையும் போது இந்த வழுவழுப்பு காரணமாக சிராய்ப்புக்காயம் ஏற்படாது. இரண்டாவதாக, வேகமாக நீந்த இந்த வழுவழுப்புத்தன்மை உதவுகிறது. அதோடு எதிரிகளின் கையில் சிக்கும்போது பிடிபடாமல் வழுக்கிச் செல்லவும் வழுவழுப்புத் தன்மை பயன்படுகிறது. 

Tuesday, 22 August 2017

அஞ்சாளை (Moray)
பார்வைக்கு வில்லன் போன்ற முகவெட்டு கொண்ட ஒரு கடல்மீன் அஞ்சாளை. பார்களில் வாழும் மீன் இது. அஞ்சாளையை ஆங்கிலத்தில் Moray என அழைப்பார்கள். அஞ்சாளையில் மொத்தம் 200 வகைகள். இதில் உண்மை அஞ்சாளைகள் ஏறத்தாழ 166. மூச்சு செவுளை அடுத்து, முதுகுத் தூவி தொடங்கி உடலின் பின்பகுதி வரை ஓடும் அஞ்சாளைகள், உண்மை அஞ்சாளைகள் ரகம். இதர அஞ்சாளைகள் பாம்பு அஞ்சாளைகள் எனக் கருதப்படுகின்றன. அவை மொத்தம் 34 ரகம்.
அஞ்சாளை, தட்டையான உடல் கொண்டது. செதிள்கள் அற்ற இதன் தோல் முரடானது, பதனிட்ட தொலி (leather) போன்றது. இந்த மீனின் முகுதுத்தூவியும், அடித்தூவியும் உடல் அளவுக்கு நீண்டுகிடக்கும். சுருங்கிய தோல்மடிப்புக்குள் மறைந்தும் மறையாமலும் இந்த தூவிகள் தெரியும்.
அஞ்சாளையின் நீண்ட முதுகுத்தூவி, உண்மையில் ஒரே தூவி அல்ல. அது 3 தனித்தனி தூவிகளின் கூட்டமைப்பு. வால்தூவி, அடித்தூவியுடன் இணைந்த உடைபடா ஒரே கட்டமைப்பிலான தூவி, அஞ்சாளையின் முதுகுத்தூவி.
அஞ்சாளை மீனின் செவுள் ஒட்டை சிறியது, வட்டமானது, பற்கள் பெரியவை. கூர்மையானவை. உடலின் பின்பகுதியை பார்களில் நங்கூரமிட்டது போல சுற்றிக் கொண்டு தலையை மட்டும் காற்றில் ஆடும் இலை போல நீரின் அசைவுக்கேற்ப அஞ்சாளை அசைத்தாட்டியபடி இருக்கும். அடிக்கடி திறந்து திறந்து மூடும் வாயால், அருகில் வரும் இரையை கபக்கென கவ்வி அஞ்சாளை இரையாக்கும்.
மீன்களில் இரண்டு இணை (Set) தாடைகள் கொண்ட மீன் அஞ்சாளை மீன். வெளிப்புற தாடையும், அதில் கூரிய பற்களும் ஒருபுறம் இருக்க, இதன் வாயின் உட்புறம் தொண்டையில் மற்றொரு தாடை, பற்களுடன் அமைந்திருக்கும். இந்த உட்புறத் தாடையை நாம் பார்க்க முடியாது. அஞ்சாளை வாயை மூடியிருக்கும் போது, உள்ளே மறைந்திருக்கும், இந்த அடித்தொண்டை (Pharyngeal) தாடை, அஞ்சாளை வாயைப் பிளக்கும் போது முன்னே வரும்.
இரை மீனை அஞ்சாளை பிடிக்கும்போது, அதன் முதல் தாடை இரையைக் கவ்வி நகரவிடாமல் செய்யும். உட்புற தாடை இரையைக் கடித்து உள்ளே தள்ளும். சிலவகை மீன்கள் இரையை உள்ளே தள்ள, உறிஞ்சுத் திறனைப் பயன்படுத்துவதைப் போல அஞ்சாளை, இரையை உள்ளே தள்ள, அதன் ரகசிய ஆயுதமான உள்புற தொண்டைத் தாடையைப் பயன்படுத்துகிறது.
அஞ்சாளையின் கடியில் நஞ்சு இல்லை. என்றாலும், அஞ்சாளையால் ஏற்படும் கடிகாயம் ஆற நாளாகும். அஞ்சாளை இரவில் இரைதேடும் மீன் என்றாலும், பகலில் தன் பக்கமாக வரும் இரைமீனையும் கவரும். கிடைக்கும் வாய்ப்பை எந்த ஒரு வாய்ப்பையும் அஞ்சாளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும். இரை கிடைக்காத வேளையில் பார்களை விட்டு விலகி, திறந்த மணல்வெளியிலும் இது திரிந்து மோப்ப ஆற்றல் மூலம் இரை தேடும். அஞ்சாளை, குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி, மிக வேகமாக நீந்தக்கூடியது. நீந்தும்போது மீன் போல நீந்தாமல், இது பாம்பு போல நீந்தும். கடலில் அசைவற்ற நீரை விட, வேகமாகப் பாயும் நீரையே அஞ்சாளை விரும்பும்.
கடலில் முக்குளிக்கும் மனிதர்களையும் அஞ்சாளை தற்காப்புக்காகத் தாக்குவதுண்டு.
இரைமீன் பார்ப் பொந்தில் ஒளிந்து கொண்டால், தனது வாயை உள்ளே நுழைத்து இரையைப் பிடித்துக் கொள்ளும் அஞ்சாளை, இரையை வெளியே இழுக்க, தன் வால் நுனியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளும். பின் அந்த முடிச்சை உடல் வழியே முன்புறமாக நகர்த்தி, பாரில் முட்டவைக்கும். பின்னர் அந்த முடிச்சு, பார்ப்பொந்தைச் சுற்றி நின்று அழுத்தம்தர, து தரும் அழுத்தத்தில் அஞ்சாளை இரையை வெளியே இழுக்கும். முடிந்த வரை இரைமீனை வெளியே கொண்டுவர பாடுபடும் அஞ்சாளை, முடியாவிட்டால் வாய் கவ்விய அளவுக்கு தசையைப் பிய்த்தெடுத்த பிறகு இரையை உயிருடன் விடும்.
சிலவகை அஞ்சாளைகளுக்கு நண்டு, மூரை (Sea urchin), சிப்பி, மட்டி (Clam) போன்றவயே உணவு. இவற்றை நொறுக்கித் தின்ன வசதியாக சிலவகை அஞ்சாளைகளின் பற்கள் மழுங்கலாக, மொண்ணையாக இருக்கும்.
அஞ்சாளை அடிக்க வாயைத் திறந்து மூடக்கூடியது. பார்வைக்கு இது  எதிரிகளுக்கு விடப்படும் எச்சரிக்கை போலத் தெரியலாம். ஆனால், மூச்செடுப்பதற்காகவே அஞ்சாளை அடிக்கடி வாயைத் திறந்து மூடுகிறது.
அஞ்சாளைகளுக்கு மற்ற மீன்களுக்கு இருப்பது போல செவுள் மூடி எதுவும் இல்லை. செவுள் மூடியைத் திறந்து திறந்து மூடுவதன் மூலம், கடல்நீரை சுவாச அறைக்குள் பாய்ச்ச மீன்களால் முடியும். ஆனால், அஞ்சாளையால் அது முடியாது. எனவே வாயை அடிக்கடி திறந்து கடல்நீரை வெளியில் இருந்து நேரடியாக அஞ்சாளை விழுங்கி, உள்ளே செலுத்துகிறது. வாயை அடிக்கடி திறப்பதை நிறுத்தினால் அஞ்சாளை மூச்செடுக்க முடியாமல் இறந்து போகலாம்.
அஞ்சாளை சிலவேளைகளில் பார்க்கடலில் களவா மீனுடன் சேர்ந்து இரையை வேட்டையாடும். அஞ்சாளை இடத்துக்கேற்றபடி பல்வேறு வண்ணங்களிலும் திகழும். அஞ்சாளையின் பாதுகாப்பில், அதன் அருகே பார்ப்பொந்துகளில் வாழும் நட்பு மீன்களும் உண்டு.

அஞ்சாளை உண்ணத்தகுந்த மீன். நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில், அஞ்சாளை பற்றி ஏற்கெனவே ஒரு பதிவும் உண்டு.

Tuesday, 15 August 2017

வலவம் ங்கல் (Pilot whale)

திமிங்கிலங்கள் பேருருவம் கொண்ட கடல் பாலூட்டிகள். இவற்றில் பெரியவற்றை திமிங்கிலங்கள் என்கிறோம். சிறியவற்றை ஓங்கல்கள் என்கிறோம். மிகச்சுருக்கமாகச் சொல்லப்போனால் ஓங்கல் என்பது சிறிய திமிங்கிலம். திமிங்கிலம் என்பது பெரிய அளவிலான ஓங்கல்.
கடலில் 32 வகையான ஓங்கல் இனங்கள் உள்ளன. ஓங்கல்களில் மிகப்பெரியவை ஆர்கா (Orca) என அழைக்கப்படும் ‘கொல்லும் திமிங்கிலம்‘ (Killer Whale). இந்த கறுப்புநிற ஓங்கல் அதன் பேருருவம் காரணமாக ‘திமிங்கிலம்‘ என அழைக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடி ஓங்கல் இனத்தில் பெரியது வலவம் ஓங்கல்தான் (Pilot whale). வலவங்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பெரிய முதுகுத்தூவியும், மற்றொன்று சிறிய முதுகுத் தூவியும் கொண்டது. இதில் சிறுதூவி வலவம், வெப்பக்கடல்களில் வாழக்கூடியது. இந்த இரு வகை ஓங்கல்களையும் முதுகுத்தூவி மூலம் இனம் காண முயல்வது மிகவும் கடினமான வேலை. இவற்றின் முதுகுத்தூவி உடலின் முன்பாகத்தில் அமைந்திருக்கும்.
வலவம் ஓங்கல் கறுப்பு அல்லது கருஞ்சாம்பல் நிறம் கொண்டது. ஆண் 25 அடி வரை நீளமும், 3 டன் வரை எடையும் கொண்டது. வலவத்தில் பெண் வலவம், 16 அடி நீளத்துடன், ஒன்றரை டன் எடையுடன் விளங்கும். ஆழ்கடல் ஓங்கல்களான வலவத்தை அடிக்கடி காண முடியாது. கடலில் ஆயிரம் மீட்டர் ஆழப்பகுதியில், கண்டச்சுவர்களின் அருகே இவை வாழும். மற்ற இன ஓங்கல்களைப் போலவே இவை பேரலைகளில் சில்லி எடுத்து சறுக்கி விளையாடும். நுனிவால் நடனம்ஆடும். கடலை விட்டு முழுவதுமாக துள்ளி விழவும் செய்யும்.
வலவம் ஓங்கல்கள், தாய்வழி சமூகமாக நூறு எண்ணிக்கை கொண்ட கூட்டமாக வாழக்கூடியவை. இந்த நூறு உறுப்பினர் கூட்டத்தில், 10 முதல் 20 உறுப்பினர் கொண்ட 5 முதல் 10 குடும்பங்கள் அடங்கும். வலவம் ஓங்கல் ஐநூறு மீட்டர் ஆழம் வரை முக்குளிக்கக் கூடியது. கணவாய், உல்லம், இறால் போன்றவையே வலவத்தின் முதன்மை உணவு. ஆயிரம் மீட்டர் ஆழம் கொண்ட கண்டச்சுவர் பகுதிகளில் கணவாய்கள் நிறைந்திருக்கும் என்பதால், வலவம் ஓங்கல்கள் கூட்டம் கூட்டமாக அங்கே தரித்திருக்கும்.
இரையைக் கூண்டதும் வலவம் ஓங்கல்கள் கூட்டமாக இரையைச் சுற்றி வளைத்து, சீழ்க்கை ஒலி எழுப்பி, இரையை மதிமயங்கச் செய்து உணவாக்கும். வாயின் இரு தாடைகளிலும் பற்கள் உள்ள ஓங்கல் வலவம் ஓங்கல்.
வலவத்தின் பிறந்த குட்டி 4.7 அடி வரை நீளமாக இருக்கும். குட்டியை 10 ஆண்டுகள்வரை பொத்திப் பொத்தி பாதுகாப்பது வலவம் ஓங்கல்களின் வழக்கம். தாய் ஓங்கல் மட்டுமின்றி, பாட்டி ஓங்கல் கூட பிள்ளைகளை இப்படி பேணி வளர்க்கும் வேலையைச் செய்யும்.
வலவம் ஓங்கல்கள், தலைமை ஓங்கலைப் பின்பற்றி அதன் வழிகாட்டலின் கீழ், செம்மறிஆட்டுக்கூட்டம் போல இயங்கும் எனக்கூறப்பட்டாலும், அது இதுவரை ஆய்வுகள் மூலம் எண்பிக்கப்படவில்லை.
ஓங்கல்களில் அடிக்கடி கூட்டம் கூட்டமாக கரையேறி தரைதட்டித் தவிக்கும் ஓங்கல் இனம் வலவம் ஓங்கல் இனம்தான். நமது மின்னணு கருவிகளில் தூசி அதிகம் படர்ந்தாலோ, வைரஸ் தாக்கினாலோ அது இயங்குவதில் சிக்கல் ஏற்படுவது போல, வலவம் ஓங்கல்களில் படரும் ஒட்டுண்ணிகள், அதன் மூளையின் இயக்கப் போக்கை மாற்றி, பாதையை சீர்குலைக்கின்றன. இதனால் திசைமாறி வலவம் ஓங்கல்கள், அடிக்கடி கரையொதுங்குகின்றன. ஒட்டுண்ணிகள் மட்டுமல்ல,  வானில் பறக்கும் ஜெட் விமான ஒலி கூட, வலவம் ஓங்கல்களின் திசையறியும் திறனைக் குழப்பி, அவற்றை கரையொதுங்க வைத்துவிடக்கூடியது.
ஓங்கல்களும், திமிங்கிலங்களும் மனதுக்குள் பதிந்துள்ள காந்த வரைபடம் ஒன்றை பயன்படுத்தி கடலில் பயணிக்கின்றன. இந்த உள்மனது காந்த வரைபடம், ஆழ்கடல்களில் சிறப்பாகச் செயல்படும். ஆனால், ஆழம் குறைந்த, முன்பின் அறியாத கடல்பகுதிகளில் இந்த காந்த வரைபடம் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாது. பூவுலகின் காந்தத் திறன் குறைந்த பகுதிகள் ‘காந்தப் பள்ளத்தாக்குகள்‘ என அறியப்படுகின்றன. குறைந்த காந்தத் திறன் கடலில் இருந்து கரைக்கு பாயும் இடங்களிலேயே ஓங்கல்களும், திமிங்கிலங்களும் கரையொதுங்குவது வழக்கம்.

அண்மையில் தமிழகத்தின் மணப்பாடு கல்லாமொழி கடற்கரையில் வலவம் ஓங்கல்கள் கரையொதுங்கின. இதைப்போல, உலகம் முழுவதும், இப்படி காந்தத்திறன் குறைந்த கடற்கரைகளில், குறிப்பிட்ட கால கட்டங்களில், சீரான இடைவேளைகளில் அவை தரைதட்டி கரையொதுங்குவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 8 August 2017

கருங்கற்றாளை (Black Croaker) (Cheilotrema saturnum)

‘கற்றளை‘ என அழைக்கப்படும் கற்றாளை இன மீன்களை ஆங்கிலத்தில் Croker அல்லது Drummers என அழைப்பார்கள். கடலின் அடிப்பகுதி மீன் என்பதால் கற்றாளை அதனுடன் பன்னா போன்ற மீன்களை ‘தாழ்ந்த மீன்கள்‘ என அழைப்பது தமிழில் வழக்கம்.
கற்றாளைகளில் பன்னிரு வகைகளுக்கும் மேற்பட்ட கற்றாளைகள் உண்டு. அளக் கத்தாளை, ஆண்டிக் கத்தாளை, ஆனைக் கத்தாளை, கீறுக் கத்தாளை, சதைக் கத்தாளை, புள்ளிக் கத்தாளை, சாம்பல் கத்தாளை, வரிக் கத்தாளை, முட்டிக் கத்தாளை, மொட்டைக் கத்தாளை, முறாக் கத்தாளை, பன்னாக் கத்தாளை, பராக் கத்தாளை, ஓரக் கத்தாளை அவற்றுள் சில.
இந்தக் கத்தாளைகளில் ஒன்று கருங்கத்தாளை (Black Croaker). ஒடுக்கமான உடல், கூனல் முதுகு, செவுள் மூடி விளிம்பில் கறுப்பு நிறம் என கருங்கத்தாளை மிளிரும்.
இதன் இரு முதுகு முள்தூவிகளுக்கு இடையே சிறிய இடைவெளி உண்டு. உடல் இருண்ட நிறமாக இருந்தாலும் தாமிரம் போல கருங்கத்தாளை மின்னும். கருங்கத்தாளையின் உடலின் நடுப்பகுதி வெளிறி காணப்படும்.
வளர்ந்த கருங்கத்தாளைகள் திறந்த வெளி, மணல் தரை என அவை வாழும் இடத்தின் சூழலுக்கேற்ப குறிப்பிட்ட நிறங்கள், உடல் குறிகளுடன் காணப்படும்.. அலையடிக்கும் பகுதியில் உள்ள பெரிய கருங்கத்தாளைகள் வரி வடிவங்களுடன் திகழும். வளர்ந்த பின் மிகவும் கறுப்பாக இருக்கும் கருங்கத்தாளைகள் இருட்டுக்குகைகள், பாறை இடுக்குகளைத் தேடி, அங்கு பகை மீன்களின் கண்களில் படாமல் கரந்து, மறைந்து வாழும்.
கருங்கத்தாளை மீன்களில் இளம் மீன்கள் வெளிர்மஞ்சள் நிற மேல் உடலுடன், கிடைமட்ட கறுப்புப் பட்டைகளுடன் காணப்படும். குட்டிக் கருங்கத்தாளைகளின் கூட்டம் கடலின் குறிப்பிட்ட ஒரு தரைப்பகுதியில் கூடி நின்றால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த இடத்தை விட்டு பத்தடி தொலைவுக்கு அப்பால் நகராது. மந்திரத்தால் கட்டுண்டது போல அந்த பத்தடிக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வரும்.
வளர்ந்து பெரிதானதும், கூட்டத்தை விட்டு விலகி, மிகவும் கறுப்பான கருங்கத்தாளைகள், இருள் குகைகளில் தங்களின் ‘தவ வாழ்வைத்‘ தொடங்கும். கடலில் 100 அடி ஆழம் முதல் 10-15 அடி ஆழமுள்ள பகுதி வரை கருங்கத்தாளைகள் காணப்படும்.

பகலில் மறைந்திருந்து இரவில் இரை தேடு கருங்கத்தாளை மீன்களுக்கு செம்பாறை நண்டு, சிலந்தி நண்டு போன்ற பாறை நண்டுகளே முதன்மை உணவு. ஓரடிக்கும் சற்று பெரிதாக வளரக்கூடிய மீன் கருங்கத்தாளை. கத்தாளைகளில் அதிகம் பிடிபடாத கத்தாளை கருங்கத்தாளைதான்.  

Sunday, 6 August 2017

வாமுட்டான் (Permit) (Trachinotus falcatus)

கும்புளாவைப் போலவே வாமுட்டானும் ஒரு பாரை இன மீன். பாரை இன மீன்களில் சற்று பெரிய மீன் எனவும் வாமுட்டானைச் சொல்லலாம். உயரமான, உடல் சற்று தட்டையான மீன் இது. அரிவாள்போல வளைந்த முதுகுத் தூவியும், அடிப்புறத் தூவியும் இந்த மீனுக்குத் தனியழகு தரக் கூடியவை. வால், பிறைவடிவ வால். வாமுட்டானின் முதுகுத்தூவிக்கு முன்புறம், மேடேறும் சரிவில் ரம்பம்போன்ற சிறுசிறுதூவிகள் காணப்படும். ‘முரட்டுமுதுகு‘ மீன் என்ற பெயரில் Falcatus என இது அழைக்கப்பட இதுவே காரணம்.
வாமுட்டான் மூன்றடி நீளம் வளரக்கூடியது. 36 கிலோ வரை நிறையிருக்கக் கூடியது. வெள்ளிநிறமாக மின்னும் வாமுட்டானின் பக்கமேல் பகுதி நீலச்சாம்பல் நிறமாகவோ, பசிய நீலமாகவோ, பழுப்பாகவோ திகழக்கூடும்.
கூட்ட மீனான வாமுட்டான், கடல்புல்வெளி, சகதி, மணல்வெளி, சுண்ணக் களிமண் தரைகளில் சிறுகூட்டமாகச் சுற்றித்திரியும். வளர்ந்த பெரிய மீன், தனியாகவும், சிறுமீன்கள் கூட்டமாகத் திரிவதும் வழக்கம்.
வாமுட்டானுக்குப் பற்களுக்குப் பதில், அதன் நாக்கில் சிறு அரிசிமணி போன்ற (Granular) பற்கள் காணப்படும். வாயால் சகதியைக் கிளறி, ஆமைப்பூச்சி, சிப்பி, கொட்டலசு, தட்டைப்புழு, மூரை, நண்டுகளை இது உணவாக்கும். வாயில் இரையை அரைக்க இந்த சிறுபற்கள் பயன்படுகின்றன. நீலநிற நண்டு, வாமுட்டான் மீனின் முதன்மை உணவு.

அதுபோல சீலாவும் (Baracuda) கொம்பன்சுறா போன்ற சிலவகை சுறாக்களும் வாமுட்டானின் பகை மீன்கள். தனிமீனாக இருக்கும் போது மனிதர்களைக் கண்டால் விலகி ஓடும் வாமுட்டான், கூட்டமாக வரும் போது மனிதர்களைக் கடிக்கவும் வாய்ப்புண்டு.

Saturday, 5 August 2017

கும்புளாப் பாரை (Blue Runner) (Caranx Crysos)

கடலில் பாரை (Jack) இன மீன்களின் உலகம் மிகமிகப் பெரியது. நளியிரு முந்நீர் என்ற நமது வலைப்பூவில்கூட பாரைகளை நீங்கள் எண்ணினால் 93 இன பாரை மீன்கள் தேறும். அந்த பாரை இனங்களில் ஒன்று கும்புளாப் பாரை (Blue Runner).

கும்புளாப் பாரை, உண்மையில் இது நீலநிற மீன் அல்ல. நீலத்தை விட பிற வண்ணங்களே இந்த மீனின் உடலில் மேலோங்கி நிற்கும். கருஞ்சாம்பல் அல்லது பசிய நீலம் அல்லது ஒலிவப்பச்சை நிறத்துடன் மேனி மிளிர இது காட்சி தரும். அடிவயிறு பொன் அல்லது வெள்ளி நிறமாகப் பொலியும்.
கும்புளாப் பாரையின் வால், பாரைகளுக்கே உரித்தான பிறை வடிவ வால். இதன் வால் நுனிகள் கறுத்திருக்கும். Operculum என்ற செவுள் மூடியின் மேல் கறுப்புநிற பொட்டுடன் கும்புளா விளங்கும்.
எழுத்தாளர் ஹெர்னஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ‘கடலும் கிழவனும்‘ புதினத்தில் கும்புளாப் பாரை இடம்பெற்றிருக்கிறது. தமிழில் அந்த புதினத்தை மொழிபெயர்த்தவர், Blue Runner எனப்படும் கும்புளாப் பாரையை ‘நீலநிற வெடையான்‘ என்றும், Yellow Jack மீனை ‘மஞ்சள் நிற சடையான்‘ என்றும் மொழிபெயர்த்திருப்பார்.
கும்புளா, இரண்டடி நீளம் வரை வளரக்கூடியது. ஆனால், பொதுவாக இது ஓரடிக்கு சற்று அதிகமாக வளரக்கூடியது. பார்களில் திரியும் கூட்ட மீனான கும்புளா, கரையில் இருந்து 100 கிலோ மீட்டர் ஆழத்துக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும். பிளாங்டன் அல்லது நுண்ணுயிர்ப் படலம் எனப்படும் கவுர்களே இதன் முதன்மை உணவு.
கும்புளாப் பாரையைப் பொறுத்தவரை சிறு குழப்பம் உண்டு.
சிலர் கும்புளாப்பாரையும், பச்சைப்பாரையும் (Green Jack) ஒரே மீன் இனம் என கருதுவார்கள். அதேப்போல கும்புளாப் பாரை போலவே இருக்கும் மற்றொரு மீனும் (Blue Fish) உண்டு. அந்த மீன் (Blue Fish) கும்புளாவை விட பெரியது. கூரிய பற்கள் கொண்டது. கும்புளாவை விட மென்மையான, சுவையான தசை கொண்டது.

கும்புளா  உண்ணத் தகுந்த  மீன்  என்றாலும்,  இது  சீலா, களவா, கடவுளா,  சூரை போன்ற பெரிய மீன்களைப் பிடிக்க தூண்டில் மீனாகவே அதிகம் பயன்படுகிறது. தூண்டிலில் நீண்டநேரம் இது உயிருடன் இருக்கும். இதனாலேயே, கும்புளாப் பாரைக்கு ‘களவா இரை‘, ‘கிங் கேண்டி’ (King candy) போன்ற செல்லப்பெயர்கள் விளங்குகின்றன. 

Thursday, 3 August 2017

இழுப்பா (Large tooth sawfish) (Pristis Perotteti)

இழுப்பா என்ற இந்த மீனை தமிழில் எப்படி எழுதுவது என்பது கூட தெரியவில்லை? இது இழுப்பாவா? அல்லது இலுப்பாவா? இல்லை, இளுப்பாவா? அப்படியே இந்த மூன்று பெயர்களில் ஏதாவது ஒன்றை இந்த மீனின் பெயராகக் கொண்டாலும், அந்தப் பெயருக்குப் பொருள் என்ன என்று நம்மிடம் யாராவது கேட்டால் திருதிருவென விழிக்க வேண்டியதுதான்.
இழுப்பா என்ற இந்த மீனின்  பெயரை நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் இதுவரை யாரும் எழுத்து வடிவில் பதிவு செய்ய வில்லையா? இல்லை, அதுபற்றி நமக்குத்தான் தெரியவில்லையா? என்பதும் புரியவில்லை.
இழுப்பா என்பது சுறா மற்றும் அதன் இனமான வேளா, திருக்கை மீன் குடும்பத்தைச் சேர்ந்தது. கற்றாளை போல இருபக்கமும் முள்கொண்ட கொம்புடைய வேளா மீனுக்கு இழுப்பா மிகவும் உறவுக்கார மீன். வேளாவைப் போலவே இழுப்பாவுக்கும் கொம்புண்டு.  ஆனால் வேளாவை விட இழுப்பா மிகவும் பெரியது. மிகவும்  நீளமானது.
இயல்பாக, இழுப்பா 19.7 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஓர் இழுப்பா மீன், 23 அடிநீளம் வரை வளர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

இழுப்பா சாம்பல் கலந்த பச்சை நிறம் முதல் பொன்பழுப்பு நிறம் வரை பல வண்ணச்சாயல்களில் காணப்படும். இதன் அடிவயிறு கிரீம் நிறத்தது.
இழுப்பாவுக்கு வேளா போன்ற கொம்பு உண்டு என்பதை ஏற்கெனவே கூறி விட்டோம். இழுப்பாவின் கொம்பு, அதன் உடலின் மொத்த நீளத்தில் நான்கில் ஒரு பங்காக இருக்கும்.
வேளா கொம்பைவிட இழுப்பாவின் கொம்பு அகலமானது. வேளா கொம்பின் இரு பக்கங்களிலும், 23 முதல் 34 பற்கள் (முட்கள்) காணப்பட்டால், இழுப்பாவின் கொம்பில் 14 முதல் 21 பற்கள் காணப்படலாம். கொம்பை இருபுறமும் அசைத்து, சகதியைக் கிளறி இழுப்பா இரை தேடும். சிறுமீன்கள், இறால்கள் இதன் முதன்மை உணவுகள். இழுப்பா வளர வளர அதன் உணவுப்பட்டியலில் அதிக அளவில் மீன்களே இடம் பெறும்.
இழுப்பா சுறா போலவே பார்வைக்குத் தோன்றினாலும், அதன் இருபக்கத் தூவிகள், அது திருக்கைக்கு நெருக்கமான மீன் என்பதை நமக்கு உணர்த்தும். இழுப்பா சுறா போலவே நீந்தும். கடலில் 10 மீட்டர்  (33 அடி) ஆழத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இது காணப்படும். முழுக்க முழுக்க நன்னீராக இருந்தாலும் சரி, மிகஅதிக கரிப்புத்தன்மை கொண்ட கடல்நீரின் சில பகுதிகளாக இருந்தாலும் சரி, எந்தவகை நீரிலும் இழுப்பா வாழக்கூடியது.
இழுப்பாவின் இரு கண்களுக்குப்பின்னால் உள்ள துளைகள் மூலம், கடல் தரையில்அக்கடாஎன்று படுத்திருந்தாலும்கூட இழுப்பாவால் கடல்நீரை துளைகள் வழியே இழுத்து அதில் உள்ள உயிர்க்காற்றை உறிஞ்சி, மூச்செடுக்க முடியும்.
இழுப்பா கொம்பு இளமையில் நெகிழும் தன்மை கொண்டது. வளையக்கூடியது. ஒரு மெல்லிய சவ்வுத்தோல் இழுப்பாவின் கொம்பை மூடியிருக்கும். வளர வளர இழுப்பாவின் கொம்பு இறுகி, உறுதிமிக்க ஓர் ஆயுதமாக மாறும்.
இழுப்பாவின் கொம்பில் உள்ள பற்கள் வேருடன் விழுந்தால் மீண்டும் முளைக்காது. இழுப்பாவின் கொம்பில் உள்ள பற்கள், மத சின்னமாக வும், மருந்துக்காகவும் விற்கப்படுகிறது. இழுப்பா கொம்பில் செய்த தேநீரைப் பருகினால் ஒவ்வாமை (ஆஸ்துமா) நோய் வராது என்பது நம்பிக்கை. இழுப்பா கொம்பில் உள்ள முட்கள், உதிர்க்கப்பட்டு பரிசுப் பொருள்களாக அவை விற்கப்படுவதுண்டு. கோழிச்சண்டையின் போது கோழியின் காலில் கத்தியைப் போல கட்டவும் இழுப்பாவின் கொம்பு முள் பயன்பட்டிருக்கிறது. முள்நிறைந்த கொம்பு, காரணமாக மீன்வலை யில் இழுப்பா எளிதாகச் சிக்கிக் கொள்ளும். இழுப்பாவின் ஆயுதமாக கருதப்படும் கொம்பே அதற்கு எதிரியாக இருப்பது ஒரு முரண்நகை.
இழுப்பா நீண்ட வாழ்நாள் கொண்டது. மிக மெதுவாக வளரக்கூடியது. இதன் கர்ப்பக் காலம் 5 மாதங்கள். 4 முதல் 10 குட்டிகளை இது போடக்கூடியது.
இழுப்பாவின் வெள்ளை நிறமான இறைச்சி, இளநீரின் வழுக்கை போல மென்மையானது.

அதிக மீன் வேட்டை காரணமாக இழுப்பா ஐம்பது நாடுகளில் இப்போது இல்லாமல் மறைந்து விட்டது. உலக கடல்களில் இருந்து மளமள வென மறைந்து வரும் இழுப்பா இனம், ஒருநாள் முற்றிலும் அழிந்து விடும் ஆபத்தில் இருக்கிறது