முட்டாள்
கிளாத்தி (File fish)
கிளாத்தி
மீன்கள் (Trigger Fish) துணிச்சல் மிகுந்தவை, ஓசை எழுப்பக்கூடியவை. தன் ஆளுமைப்
பகுதிக்குள் வரும் பிற கடல் உயிர்களை துணிந்து விரட்டக்கூடியவை. (பெரிய
கொல்மீன்கள் மிரட்டினால் பதுங்கவும் கூடியவை)
ஆனால்,
இதே கிளாத்தி இனத்தோடு தொடர்புடைய, ஆனால் Monacanthidae என்ற குடும்பத்தைச்
சேர்ந்த கிளாத்திகளும் உள்ளன. Monacanthidae என்றால் ‘ஒரு முள் கொண்ட‘ என்று
பொருள். முதுகில் ‘அரம்‘ போன்ற ஒரு முள் கொண்ட இந்த வகை கிளாத்திகளில் மொத்தம் 18
வகைகள் தேறும்.
ஆரவாரம்
இன்றி அமைதியின் திருஉருவங்களாக, ஓசையின்றி வாழ்வதால் இந்த வகை கிளாத்திகள்
‘முட்டாள் கிளாத்திகள்(?) என்ற பெயரோடு விளங்குகின்றன. ஆங்கிலத்தில் Fool Fish
என்று இவற்றை அழைக்கிறார்கள்.
தகடு
போன்ற உடலும், குழாய் போன்ற நீண்ட மூக்கும், முரமுரப்பு தடித்தோலும்
முட்டாள்கிளாத்திகளின் பொதுவான தோற்றம். மிக மெதுவாக நீந்துவதும், நீரோட்டத்தில்
இழுத்துச் செல்லப்படுவதும் இந்த வகை மீன்களின் பண்பு. பவழப்பாறைகளைக் கொறித்து
உண்ணும் பழக்கம் உள்ளவை இந்த மீன்கள். நீள குழாய் மூக்கு, பார்களைக் கொறிக்கப்
பயன்படுகிறது.
இந்த
முட்டாள் கிளாத்தி இன மீன்களில் ஒன்று ஆரஞ்சு நிறப்புள்ளிகள் கொண்ட முட்டாள்
கிளாத்தி. (oxymonacanthus longirostris)
வெளிர்நீல
உடலில், பளிச்சிடும் ஆரஞ்சு நிறப்புள்ளிகளுடன் இந்த மீன் இனம் பொலியும். ‘கடலின்
காதல் பறவைகள்‘ என்ற பெயர் இந்த மீன் இனத்துக்கு சிறப்பாகப் பொருந்தும். உயிருள்ள
வரை இந்த மீன்கள் இணை பிரியாது வாழும். பார்களுக்குள் ஒன்றையொன்று துரத்தி இவை காதல்
கண்ணாமூச்சி ஆடும்.
மிகவும்
அமைதியான மீன் இனம் இது. பிறஇன மீன்களோடு இது சண்டையிடாமல் கூடிவாழும். தன்
இனமீன்களுடன் பெருங் கூட்டமாகக் கூடினால் மட்டுமே இது சண்டையிடும்.
கணவாயைப்
போல இந்த மீனும் எதிரிகளிடம் இருந்து தப்ப நிறம் மாறும். எதிரிக்குப் பயந்து
பார்ப்பொந்துகளுக்குள் பல மணிநேரம் வரை இது பதுங்கி இருக்கவும் செய்யும். இந்த
மீனின் உடல்புள்ளிகள் அழகுக்கும் அலங்காரத்துக்கும் ஆனவை அல்ல. உருமறைப்புக்கு
உதவக்கூடியவை.
ஆரஞ்சு
புள்ளி முட்டாள் கிளாத்தி மீன்கள், பார்களை அண்டி வாழ்பவை. 4 முதல் 30 மீட்டர்
ஆழத்தில் இவை காணப்படும்.
ஆரஞ்சு
புள்ளி முட்டாள் கிளாத்தி மீன்கள் மிக மெதுவாக நீந்தக்கூடிய மீன்கள் என்பதால் எதிரி
மீன்களுக்கு குறிப்பாக விலாங்குகளுக்கு இவை இரையாவது வழக்கம்.
முட்டாள்
கிளாத்தி மீன்களுக்கு பவழப் பாறைகளே உணவு என்ற நிலையில், எதிரி மீன்களிடம் இருந்து
தப்ப, ‘அக்ரோபோரா மோன்டிபோரா‘ (Acropora Montipora) என்ற குறிப்பிட்ட ஒரு பவழப்பாறையை
முட்டாள் கிளாத்திகள் விரும்பி உண்ணும். (இந்த வகை பவழப்பாறை கிடைக்காவிட்டால்
முட்டாள்கிளாத்தி மீன் இறந்து விடும் என்றும்கூட சொல்வார்கள்)
இந்த
குறிப்பிட்ட வகை பவழப்பாறையை உண்பதால் கிளாத்தி மீனின் உடல் மணம் மாறுகிறது. அதன்மூலம்
எதிரிமீன்களின் மோப்பத்தில் இருந்து இவை எளிதாகத் தப்பி விடுகின்றன. (இவ்வளவு அறிவுள்ள ஒரு மீனை ஏன் முட்டாள் மீன்
என்று அழைக்கிறார்கள் என்பது புரிய வில்லை?)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete