திருக்கையில் மிகவும் சிறியது செந்திருக்கை. இரு உள்ளங்கை
அகலமுள்ள மீன் இது. இதன் நச்சுமுள்ளின் முனை பச்சை நிறத்தில் ஒருவித மாவுடன் இருக்கும்.
மஞ்சளும் சாணி நிறமும் உள்ள மணத்திருக்கை 3 நஞ்சுமுள்கள்
கொண்டது. வலைகளில் அதிகம் சிக்கும் திருக்கை, மணத்திருக்கைதான்.
கழக்குத் திருக்கையும் கட்டித்திருக்கையும் ஏறத்தாழ
ஒரே மாதிரியானவை. கழக்குத் திருக்கை பெரிதானால் கட்டித்திருக்கை என்றும் சொல்வார்கள். கருஞ்சாம்பல் நிறம் கொண்ட திருக்கை இது.
மணிவாலன் திருக்கையின் வாலில் அரை அங்குல நீளத்துக்கு
மாறிமாறி கறுப்பு, வெள்ளை நிறங்கள் காணப்படும்.
சங்குவாயன் திருக்கையின் வாய் ஊசியாக இருக்கும். வவ்வால் போன்ற முகத்தோற்றம் கொண்ட மீன் இது. வால் நீளமாக,மெல்லியதாக இருக்கும்.
சங்குவாயன் திருக்கையின் வால்தான் திருக்கை வால்களில்
மிக நீளமானது.
புள்ளித்திருக்கையின் வால்முழுக்க புள்ளிபுள்ளியாக
முட்கள் காணப்படும். பெரிய அளவில் ஆபத்தில்லாத முட்கள் இவை. வலுவாடி என்பது புள்ளித்
திருக்கையின் இன்னொரு பெயர்.
செம்மண் திருக்கை சற்று பெரியது. வலைக் கண்ணிகளை அறுத்து
விடக்கூடியது.
அட்டணைத் திருக்கை சாணி நிறமான வண்ணத்துப்பூச்சி போன்ற மீன்.
அகலம் அதிகம். நீளம் குறைவு. திருக்கை மீன்களில் மிகமிக சுவையான உண்ணத்தக்க மீன் அட்டணைத்
திருக்கைதான்.
சுண்ணாம்புத் திருக்கையின் இறைச்சி குழம்பில் இட்டபின்
வெள்ளைநிறமாகத் தோன்றும்.
ஓலைவாலன் திருக்கையின் வால் அகலமாக, ஓலைபோன்றது. இதன்
நச்சு முட்கள் மற்ற திருக்கைகளை விட வாலின்பின்பகுதியில் சற்று தள்ளி காணப்படும். இது
நன்னீரிலும் வாழக்கூடிய திருக்கைகளில் ஒன்று.
புள்ளித்திருக்கை, ஒலைவாலன் திருக்கை, போன்ற திருக்கைகள்
நீளவால் திருக்கை (Ray) என்ற வகைப்பாட்டில் அடங்கக் கூடியவை. கழக்குத் திருக்கை, கட்டித்திருக்கை,
அட்டணைத் திருக்கை போன்றவை குட்டையான பருமனான வால் கொண்ட SKATE என்ற வகைப்பாட்டில் இடம்பெறத் தகுந்தவை.
நீளவால் திருக்கைகளுக்கும், குட்டை வால் திருக்கைகளுக்கும்
இடையே வெவ்வேறு விதமான இயல்புகள் உள்ளன. ரே (Ray) என்ற நீளவால் திருக்கைகளுக்கு நச்சுமுள்ளோ அல்லது முட்களோ அமைந்திருக்கும். வால் சாட்டைபோல நீண்டு காணப்படும். கடல்நீரில் மட்டுமின்றி
நல்ல தண்ணீரிலும் இவை வாழக்கூடியவை. மிகப் பெரிதாக வளரக்கூடிய இந்த வகை திருக்கைகள், உடலுக்கு
உள்ளேயே குஞ்சு பொரிக்கக் கூடியவை.
SKATE எனப்படும் குட்டைவால் திருக்கைகளுக்கு கொடுக்குமுள்
கிடையாது. சதைப்பற்றுள்ள கனமான வால் கொண்ட இவை வட்டம் அல்லது முக்கோண வடிவுடையவை. நீள
மூக்குள்ள இவற்றால் கடலில் மட்டுமே வாழமுடியும். வால்நுனியில் தூவிகள் கொண்ட குட்டைவால் திருக்கைகள், மிஞ்சிமிஞ்சிப்
போனால் ஐந்தடி வரை வளரலாம்.
படத்தில் இருப்பது ஓலைவாலன் திருக்கை.
படத்தில் இருப்பது ஓலைவாலன் திருக்கை.
No comments :
Post a Comment