நாய் அடல்மீன் (எருமை
நாக்கு) (Indian haliput)
மீன்களில் புதுமையான
அமைப்பு கொண்ட மீன் அடல்மீன். முட்டையில் இருந்து பிறக்கும்போது வழக்கமான
மீன்உருவத்தையே அடலும் கொண்டிருக்கும். சில நாட்கள் கழித்து அதன் ஒரு கண் இடம்பெயர்ந்து,
மேல் நோக்கி பயணமாகி, மறுபக்க கண்ணின் மேலாக, முதுகுத் தூவிமுனையில் போய் அமர்ந்து
கொள்ளும்.
நீள்வட்டமான இந்த தட்டை
வடிவ அடல்மீனுக்கு இருகண்களும் ஒரே பக்கம் அமைந்திருப்பதுதான் சிறப்பு.
அடல்மீன்களில் ஒன்று
நாய்அடல். இதுவும் தட்டையானதுதான் என்றாலும் சற்று சதைப்பற்றுள்ள மீன் இது. நாய்
அடலின் பெரிய வாயில் பலமான ஈரடுக்குப் பற்கள் காணப்படும்.
அடல்மீனின் மேல்புறம்
பழுப்பு சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெண்மை நிறமாகவும் விளங்கும். Benthic
எனப்படும் கடலடி வகை மீனான அடல், கடல் தரையில் மணல் அல்லது மண்டியில் (சகதியில்) பதிந்து மறைந்திருக்கும்.
பகல்முழுக்க மறைந்து கிடக்கும் அடல், இரவானது இரை தேட வெளிக்கிளம்பும். படுக்கை
வசமாக நீந்தும் அடல்மீன், முழுக்க முழுக்க மீன்களை மட்டுமே உண்ணும் கடல்உயிர் ஆகும்.
மெதுவாக நீந்துவதைப் போல தோற்றம் தரும் அடல், இரையை விரைந்து பிடிக்கவும் வல்லது.
உண்பதற்கு மிகவும் சுவையான மீன்
அடல். இதன் தசை மாவாகவும் மாற்றி உண்ணப்படுகிறது.
அடல்கள் பொதுவாக கையில்
பிடித்தாலோ காலால் மிதித்தாலோ வழுக்கக் கூடியவை.
Psettodes erumai என
அறிவியல் பெயரில் அழைக்கப்படும் நாய் அடலின், எருமை என்ற பெயர் தமிழில் இருந்து
வந்தது. ஆங்கிலத்தில் Sole fish,அடலா எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்த அடலாவும்,
தமிழின் அடல் என்ற பெயரில் இருந்து வந்ததுதான்.
அடல்மீன் வகைகளில்
ஒன்று மண்அடல். நீள்வட்டவடிமான மண் அடலுக்கு வால் ஊசியாக போய் முடியும். தலை முதல் வால்
வரை மேலும், கீழும் பூரானின் கால்களைப் போல மண் அடலுக்கு மயிர்க்கற்றை போன்ற
தூவிகள் அமைந்திருக்கும். இந்த முதுகுத்தூவியும், அடிப்புறத்தூவியும் வால்முனையில் ஒன்றுகூடி முடிவடையும். நாய் அடல் போல முழுக்க மீன்களை உண்ணாமல் கடலடி சிறு உயிர்களை உண்பது மண் அடலின் வழக்கம்.
No comments :
Post a Comment