Saturday, 17 August 2019


சுறா முட்டை

முட்டைக்குள் ‘மழலைச் சுறா’
கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? பூவுலகை நீண்டகாலமாக புரட்டிக் கொண்டிருக்கும் கேள்வி இது.
ஆனால் இந்தக் கேள்வியில் கோழி என்பதற்குப் பதில் சுறா என்றுகூட நாம் மாற்றிக் கொள்ளலாம். காரணம் சுறாக்களில் ஏறத்தாழ 100 வகை சுறாக்கள், அதாவது 30 விழுக்காடு சுறாக்கள் முட்டையிடுபவை.
சுறாக்களில் Viviparous வகை சுறாக்களில் பெண் சுறாவின் வயிற்றுக்குள் முட்டை கருவாகி அது உடைந்து உயிருள்ள குட்டிகள் வெளிப்படும்.

Oviparous வகை சுறாக்கள் முட்டைகளை இட்டுவிட்டு பிரிந்து செல்லக்கூடியவை. பிறகு அந்த முட்டைகளுக்குள் தானாகவே சுறாக்குட்டிகள் உருவாகி அவை முட்டையில் இருந்து வெளி வரும்.
சரி!  எந்தெந்த வகை சுறாக்கள் இப்படி முட்டைகளை வெளியே இட்டு புதிய வழித்தோன்றல்களை உருவாக்கக் கூடியவை? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய மீன்களில் ஒன்றும், சுறா இனங்களில் மிகப்பெரியதுமான அம்மணி உழுவை எனப்படும் பெட்டிச்சுறா (Whale Shark) இப்படி முட்டையிட்டு குட்டிகளை ஈனக் கூடியது.
அம்மணி உழுவையின் முட்டை ஓரடி வரை நீளமிருக்கும். 14 செ.மீ. வரை அகலம் இருக்கும். 8 செ.மீ. வரை தடிமன் இருக்கும்.
குரங்கன் சுறா எனப்படும் Port Jackson சுறாவும் முட்டையிடக் கூடிய சுறா இனங்களில் ஒன்று. குரங்கன் சுறாவின் முட்டை திருகல் கோபுரம் போல இருக்கும். சுறா முட்டைகள் பொதுவாக தடித்த வெளிப்புறத்தோலுடன் உள்ளே நீர்புகாத வண்ணம் கட்டமைக்கப்பட்டிருக்கும். சில வகை சுறாக்களின் முட்டைகள் ஒளி ஊடுருவும் விதத்தில் கண்ணாடி போன்ற தோற்றம் கொண்டவை. இந்த முட்டைகளின் உள்ளே உயிர் அரும்புவதையும், அதன் தளும்பல்களையும் வெளியில் இருப்பவர்கள் பார்க்க முடியும்.
குரங்கன் சுறாவின் முட்டை
பள்ளிக்கூடத்துக்குப் போகும் குழந்தைக்கு அதன் அம்மா, லஞ்ச்பேக் கொடுத்து அனுப்புவது போல, சுறா முட்டைக்கு உள்ளே உருவாகப் போகும் குட்டி பசியில் வாடிவிடக்கூடாது என்பதற்காக அந்த முட்டைக்குள்ளேயே ஒரு மஞ்சள் கரு (Yolk) வைக்கப்பட்டிருக்கும். குட்டி உருவானதும் இந்த மஞ்சள் கருவை உணவாகக் கொண்டு உயிர்வாழும். உரிய நேரத்தில் முட்டையைத் திறந்து வெளியே வரும்.
குரங்கன் சுறாவின் முட்டை திருகுகளுடன் இருக்கும் நிலையில் சில வகை சுறாக்களின் முட்டைகளில் கொடிச்சுருள் (Tendril) போன்ற உறுப்புகள் அமைந்திருக்கும். இதன்மூலம் கடல் தாவரங்கள் அல்லது பாறைகளை இந்த முட்டைகள் பற்றிப்பிடித்துக் கொள்ள முடியும்.
சுருள்வில் (Spring) திருகுகள் போன்ற அமைப்புள்ள முட்டையை தாய்ச்சுறா வாயால் கவ்விப் போய் பாறை இடுக்குகளில் செருகி வைத்துவிடும்.
இதன் காரணமாக இந்த முட்டைகள் கடல்நீரில் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.
சுறா முட்டைகளுக்கு வண்ணங்களும் பல. வடிவங்களும் பல. எடுத்துக்காட்டாக Draughtboard சுறாவின் முட்டை, அழகிய ஆரஞ்சு மஞ்சள் நிறத்துடன் ஏதோ அலங்காரம் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக் போலவே இருக்கும். Zebra சுறாவின் முட்டை Jacarand மரத்தின் குடுவை போல தோன்றும்.
‘கடற்கன்னியின் பணப்பை’
சுறா முட்டைகளின் வெளிப்புறத் தோல் மிகவும் கடிமானது. வெள்ளுடும்பன் என்ற சுறாவின் முட்டையைக் கத்தியால் கூட வெட்ட முடியாது. சுறா முட்டைகள் மனிதர்கள் உண்ணத்தகுந்த பொருட்கள் அல்ல.
ஆனால் சுறா முட்டைகள், கடல் வாழ் மற்ற சுறா இனங்களுக்கு உணவாகக் கூடியவை. இந்தநிலையில் முட்டை ஒன்றில் உருவாகிக் கொண்டிருக்கும் சுறாக்குட்டி ஒன்று அருகில் பெரிய வேட்டைச் சுறாக்கள் வந்தால் அவற்றின் மின்னதிர்வை உணர்ந்து கொள்ளும். தன் இயக்கத்தையும், அசைவுகளையும் குறைத்துக் கொண்டு அதன் மூலம் வேட்டையாட வரும் சுறாவிடம் இருந்து தப்பிக்கும். இது இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்று.
சுறாக்கள் மட்டுமல்ல திருக்கை மீன்களில் சிலவகை மீன்களும் கூடநேரடியாக குட்டி ஈனாமல் முட்டைகளையிட்டு இனம்பெருக்கக் கூடியவை.
கொட்டும் திருக்கைகள் (Sting Rays) நேரடியாக குட்டி ஈனக்கூடியவை. சாட்டை போன்ற வாலும், நச்சுமுள்ளும் இல்லாத திருக்கைகள் பொதுவாக முட்டையிடக் கூடியவை. இந்த வகை திருக்கைகளின் முன் வாய் சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் துருத்தியிருக்கும்.
கடற்கரைகளில் அலைகள் அடித்து கரையொதுங்கும் சுறா முட்டைகளை சிலர் ‘கடற்கன்னியின் பணப்பை’ (Mermaid purse) என அழைப்பார்கள். பேயின் பணப்னை எனவும் இந்த முட்டைகள் அழைக்கப்படுவதுண்டு. ஆனால், இப்படி கரையொதுங்கும் முட்டைகள் பெரும்பாலும் திருக்கைகளின் முட்டைகளாகவே இருக்கும்.

உள்ளிருக்கும் உயிர்
சுறா முட்டைகள் வலுவானவை, திறக்க கடினமானவை என்ற நிலையில், திருக்கை முட்டைகள் அப்படி அல்ல.
வேட்டையாடி கடலுயிர்கள் பல எளிதாக திருக்கை முட்டைகளைத் தோண்டித் துழாவி உள்ளிருக்கும் கருவைத் தின்றுவிடும்.
இதனால் திருக்கையின் முட்டைகளில் 18ல் ஒரு முட்டையே உயிர் பிழைக்கும். அதில் இருந்து திருக்கைக் குட்டி உருவாகி உயிர் வாழும்.

No comments :

Post a Comment