ஆடா திருக்கை
(Common Stingray)
ஆடா திருக்கை |
கடல்வாழ்
திருக்கை இனங்களில் மிகவும் ‘புகழ்’வாய்ந்த திருக்கைகளில் ஒன்று ஆடா திருக்கை. அப்படி
என்ன புகழ் என்கிறீர்களா? கடலில் முத்து
குளிப்பவர்களையும், சங்கு பறிப்பவர்களையும் கேளுங்கள். ஆடா திருக்கையின்
பெருமையைப் பற்றி நாள் முழுக்க அவர்கள் விளக்குவார்கள்.
அந்த அளவுக்கு
கடலில் முக்குளிக்கும் மனிதர்களைப் பதம் பார்த்து வால் முள்ளால் குத்தக்கூடிய
திருக்கை இது. ஆடா திருக்கை கடிக்கவும் செய்யும் என்பார்கள். இதன் கடி ஆபத்தானது
என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆடா திருக்கை
(Dasyatis Pastinaca) உலகின் பல்வேறு கடல்களில் அந்தந்த பூகோள சூழலுக்கேற்ப
ஒவ்வொருவிதமான நிறங்களில் விளங்கக் கூடியது. ஆனாலும், கருமையோ, சாம்பலோ, பழுப்போ,
ஒலிவப் பச்சையோ எந்த நிறமாக இருந்தாலும், உடல் முழுக்க ஒரே வண்ணமாக ஒருப்போல காட்சிதரும்
திருக்கை இது. உடலில் புள்ளிகளோ, கோடுகளோ, வரிகளோ காணப்படாது.
வைரத்தின்
வடிவத்தில் பக்கத் தூவிகளைக் கொண்டிருக்கும் ஆடா திருக்கை, 18 அங்குலம் வரை
குறுக்களவு கொண்டது. இதன் தோல் பெரும்பாலும் மென்மையானது. வளர்ந்த பெரிய ஆடா
திருக்கையின் முதுகின் நடுப்பகுதியில் வரிசையாக சலவைக் கற்களைப் பதித்தது போன்ற
ஒரு புடைப்பு வரிசை காணப்படும்.
ஆடா
திருக்கையின் வால் நீளமானது. உடலின் அளவில் முக்கால் பங்குக்கு இதன் வாலின் நீளம்
அமைந்திருக்கும். வாலில் 14 அங்குல நீளத்துக்கு முள் உண்டு.
கடலில்
தன்னருகே முக்குளித்து வருபவர்களைக் கண்டால், ஆடா திருக்கை முதலில் விலகிப் போக
முயற்சிக்கும். தெரிந்தோ தெரியாமலோ தன்னை யாராவது பின் தொடர்ந்தால் வாலை
எளிதாக வளைத்து முள்ளால் குத்தும். ஆடா திருக்கையின் முள்குத்து நச்சுத்தன்மை
வாய்ந்தது. இந்த வால் முள், அரிதாக எப்போதாவது விழுந்து, மீண்டும் முளைக்கக்
கூடியது.
திருக்கை
இனத்தின் குலவழக்கப்படி ஆடா திருக்கையும் கடலடியில் கடல்தரையில் வாழக் கூடியது. மணற்பாங்கான,
சகதி நிலத்தில் இது புதைந்திருக்கும். பவழப்பாறைகளின் அருகிலும் இது காணப்படும்.
குட்டியுடன்... |
கடலடியில
மணலைக்கிளறி, சிப்பி, நண்டு, இறால், மீன் போன்றவற்றை இது தேடித் தின்னும். கடல்
சிப்பிகளை இது அதிக அளவில் உண்ணக்கூடியது. வலிமையான தாடையால் சிப்பியை உடைத்து
உள்ளிருக்கும் சதையை இது உண்ணும். இளம்பருவத்தில் நண்டு, இறால்களையும், முதிர்
பருவத்தில் மீன்களையும் இது இரை கொள்ளும். வளர்ந்த ஆடா திருக்கைகளிலும் கூட ஆண்
ஆடாதிருக்கை அதிக அளவில் நண்டுகளையும், பெண் ஆடா திருக்கை அதிக அளவில் மீன்களையும்
உணவாகக் கொள்ளுவது தெரிய வந்திருக்கிறது.
ஆடா திருக்கை
உண்ணத்தகுந்த மீனல்ல. வலைகளில் தற்செயலாக இது பிடிபடுவதுண்டு. இதன் ஈரலில் இருந்து
எடுக்கப்படும் எண்ணெய் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
ஆடா திருக்கை, பகலில்
மணலுக்குள் பதிந்திருந்து, இரவில்தான் அதிகமாக நடமாடும்.
ஆடா
திருக்கைக்கு ஆடாமுழித்திருக்கை என்ற பெயரும் உண்டு. சுருக்கமாக இது ஆடா திருக்கை
என அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
ஆடா திருக்கை
எளிதில் பதற்றமடையக் கூடியது. கடலில் தனக்கு மேற்புறமாக நீந்தி வருபவர்களைக்
கண்டால் தன்னை இரையாக்க வரும் எதிரி என நினைத்து ஆடா திருக்கை தாக்குதல்
மேற்கொள்ளும். ஆடா திருக்கையின் நஞ்சு தோய்ந்த குத்து, சிலவேளைகளில் உயிரிழப்பில் போய்
முடியலாம். கடலின் மேற்பரப்பில் பறக்கும் பருந்து போன்ற பறவைகளின் நிழல் தன் அருகே
தென்பட்டாலும் கூட, ஆடா திருக்கை சிலிர்த்துக் கொண்டு தாக்கப் பாயும். படகுகளையும்
இது தாக்குவதுண்டு.
கடலில் அமைதியாகத்
திரியும் ஆவுளியாக்கள் கூட, ஆடா திருக்கையின் கோபத்துக்கு சில வேளைகளில் ஆளாவதுண்டு.
முகத்தில் ஆடா திருக்கையின் முள் பாய்ந்து ஆவுளியா ஒன்று உயிரிழந்த நிகழ்வு ஒருமுறை
நடந்திருக்கிறது. ஆடா திருக்கையின் முள்ளை மனிதர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தி
ஒருவரையொருவர் தாக்குவதும் உண்டு.
கடலில் முக்குளிக்கும்
போது ஆடா திருக்கையைக் கண்டால் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால்
ஆஸ்திரேலிய விலங்கியல்பூங்கா காப்பாளரும், சூழல் ஆர்வலருமான ஸ்டீவ் இர்வினுக்கு
ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும். நெஞ்சில் அவர் திருக்கை முள் பாய்ந்துதான்
மரணமடைந்தார்.
கடைசியாக ஒரு தகவல். ஆடா திருக்கையின் அறிவியல் பெயரில் உள்ள Dasyatis என்ற சொல்லுக்கு முரட்டுத்தனம் என்று பொருள்.
No comments :
Post a Comment