Wednesday, 14 February 2018

குதிப்பு (FalseTrevally) (சுதும்பு)

உண்ணத்தகுந்த மிகச்சுவையான மீன்களில் ஒன்று குதிப்பு. நாக்கை நடனமாட வைக்கும் இந்த நான்கெழுத்து மந்திர மீன், வடதமிழகத்தில் சுதும்பு என அழைக்கப்படுகிறது. சள்ளை மீன் என்பது தென்கடலோரங்களில் இந்த மீனுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர்.
குதிப்பு மீனின் அறிவியல் பெயர் Lactarius lactarius. லாக்டெரியஸ் குடும்பத்தின் ஒரே ஓர் உறுப்பினர் குதிப்பு மீன்தான்.
குதிப்பு சிறுகூட்டமாகத் திரியும் மீன். கடலில் 15 முதல் 100 மீட்டர் ஆழத்தில் குதிப்பு காணப்படும். 25 சென்டிமீட்டர் முதல் 35 சென்டிமீட்டர் நீளமுள்ள மீன் இது. அரிதாக சில குதிப்புகள் 40 சென்டிமீட்டர் வரை வளரலாம்.


குதிப்பின் தூவிகள் வெளிர்மஞ்சள் நிறமானவை, முட்கள் அற்றவை. 2 முதுகுத்தூவிகளும் நீ யாரோ நான் யாரோ என்று தொடர்பின்றி தனித்தனியே அமைந்தவை.
குதிப்பின் கீழ்த்தாடை மேல்தாடையை விட சற்று நீளமாக முன்னோக்கித் துருத்திக்கொண்டிருக்கும். மேல்தாடையோ, கண்களின் நடுப்பகுதி வரை நீண்டிருக்கும். வால் கவை வால் (Forked)
குதிப்பு மீனின் மேல் உடல் வெள்ளிநீல நிறமாகவும், அடிப்பகுதி வெள்ளி கலந்த வெள்ளைநிறமாகவும் விளங்கும்.
மீனின் கன்னச் செவுள்களின் மேல் பகுதி மீது கறுப்புத் திட்டு உண்டு.
குதிப்பு மீனின் தாயகம் இந்தியப் பெருங்கடல்தான். கிழக்கு ஆப்பிரிக்கா முதல் தென்கிழக்கே இந்தோனேசியா வரை, ஜப்பான் முதல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதி வரை குதிப்பு காணப்படுகிறது.
மணல்வாழ் உயிரினங்களே குதிப்பு மீனின் முதன்மை இரை. உடனடி சமையலுக்கு சுவையான குதிப்பு, கருவாடாக மாறினாலும் சுவை குன்றாது.

குதிப்புகள் கூட்டமாகத் திரிபவை என்றாலும், அவற்றில் ஒருசில பெரிய குதிப்புகள் பார்களில் தனித்து வாழக்கூடியவை. ‘பேரு பெற்ற குதிப்பு‘ அல்லது பெரியகாட்டு சள்ளைமீன் என அவை அழைக்கப்படுகின்றன.

No comments :

Post a Comment