Saturday, 9 December 2017

கிண்கிணி ஓங்கல் (Spinner Dolphin)

ஓங்கல் எனப்படும் டால்பின் இனத்தில் மிகச்சிறிய ஓங்கல் வகைகளில் ஒன்று கிண்கிணி ஓங்கல்.
Stenella longirostria என்பது இதன் அறிவியல் பெயர்.
ஸ்டெனல்லா என்ற பெயர், பேரினத்தைக் குறிப்பதுடன், இந்தப் பெயரில் தொடங்கும் ஓங்கல்கள் அனைத்தும் ஆழ்கடல் ஓங்கல்கள் என சொல்லாமல் சொல்கிறது.
ஸ்டெனல்லா (Stenella) வகை ஓங்கல்களில் மொத்தம் 5 வகைகள் தேறும். அந்த ஐந்து வகைகளில் கிண்கிணி ஓங்கல், சிறிய புள்ளி ஓங்கல், முதலை வாய்போல நீண்ட மூக்குடைய ஓங்கல் போன்றவை அடங்கும்.
கிண்கிணி ஓங்கலின் மூக்கும் மற்ற ஓங்கல்களின் மூக்கை விட சற்று நீளமானதே. சற்று நீண்ட மூக்கு இதன் முதன்மை அடையாளம் என்றால், எப்போதும் மகிழ்ச்சி பொங்க கடலில் துள்ளி விளையாடுவதும், அலைச்சறுக்கு செய்வதும் கிண்கிணி ஓங்கல்களின் மற்றொரு அடையாளம் ஆகும்.
சிறிய வகை வெப்பக்கடல் ஓங்கலான, கிண்கிணி ஓங்கல்கள் 1.3 முதல் 2.4 மீட்டர் வரை நீளமானவை. 23 முதல் 78 கிலோ வரை நிறையுடையவை. கிண்கிணி ஓங்கல் எப்போதும் குறைந்தது 25 ஓங்கல்கள் கொண்ட சிறு கூட்டமாகத் திரியும். சிலவேளைகளில் பெருந்திரளாகவும் இவை கூடுவதுண்டு.
தன்னின ஓங்கல்களுடன் மட்டுமின்றி புள்ளி ஓங்கல்கள், கௌவாளை எனப்படும் மஞ்சள்தூவி சூரை மீன்களுடனும் இது கூடித்திரியும்.
பொதுவாக கிண்கிணி ஓங்கல்களை பின்தொடர்ந்தே மஞ்சள்தூவி சூரை மீன் கூட்டம் வரும் என்பதால் கிண்கிணி ஓங்கல்களைக் கண்ட மாத்திரத்தில் வலைஞர்கள் சூரை மீன்களைப் பிடிக்கத் தயாராகி விடுவார்கள்.
சூரை மீன் கூட்டத்துடன் இரண்டற கலந்து திரிவதால், சூரைக்கு விரிக்கும் மடி வலைகளில் கிண்கிணி ஓங்கல்களும் சிலவேளைகளில் சிக்கிக் கொள்ளும்.
கரடுமுரடான தரைப்பகுதி கொண்ட கடல்பரப்பின் மீதே கிண்கிணி ஓங்கல்கள் அதிகம் காணப்படும். பெரும்பள்ளமான, தட்டையான கடல்நிலங்களுக்கு மேலே இது அதிகம் காணப்படாது.
சாளை, நெத்தலி போன்ற சிறுமீன்கள், கணவாய், போன்றவை கிண்கிணி ஓங்கலின்  விருப்ப உணவு. கடலில் 400 மீட்டர் ஆழம் வரை மூச்சுப்பிடித்து சென்று கிண்கிணி ஓங்கல்கள் இரை தேடும்.
கிண்கிணி ஓங்கல்கள், அதன் ஸ்டெனல்லா (Stenella) இனத்தைச் சேர்ந்த புள்ளி ஓங்கல்களுடன் கூட்டு சேர்ந்து திரிய காரணமுண்டு.
கிண்கிணி ஓங்கல் இரவில் இரைதேடக்கூடியது. புள்ளி ஓங்கல் பகலில் இரை தேடக்கூடியது. ஆகவே, இரவும் பகலும் மாறி மாறி இரு வகை ஓங்கல் கூட்டமும் கண்விழித்து விழிப்புடன் இயங்குவதால் சுறாக்களிடம் இருந்து தப்ப முடிகிறது.
கிண்கிணி ஓங்கலின் முதுகுப்பகுதி கருஞ்சாம்பல் நிறமாகவும், பக்கங்கள் வெளிர் சாம்பல் நிறமாகவும், அடிவயிறு மிகவும் வெளிர் சாம்பல் நிறமாகவும் விளங்கும். முக்கோண வடிவ முதுகுத் தூவியும், மூன்றடுக்குத் தோலும் கிண்கிணி ஓங்கலுக்கு உண்டு.
கிண்கிணி ஓங்கல்கள் கடல்மேல் துள்ளி துள்ளி விழுந்து விளையாட மூன்று வகை காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, நுரை தெறிக்க இவை துள்ளிப்பாய்ந்து கடலில் விழுவதன்மூலம் மற்ற ஓங்கல்களுடன் தகவல் பரிமாறுகின்றன. இரண்டு, உடலில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகளை துள்ளி விழுவதன் மூலம் இவை நீக்கி கொள்கின்றன. மூன்று, முழுவதும் பொழுதுபோக்காக விளையாட்டாக இப்படி இவை துள்ளி விழுகின்றன.

உருவத்தில் சிறியதாக கிண்கிணி ஓங்கல்கள் இருப்பதால் சுறாக்களுக்கு மட்டுமின்றி, கில்லர் வேல் (Killer Whale) எனப்படும் பெரிய கறுப்பன் ஓங்கல்களுக்கும், வலவம் ஓங்கல்களுக்கும் (Pilot Whale) கூட இவை இரையாவதுண்டு.

No comments :

Post a Comment