கடல் நண்டு
நீலக்கடல் முழுக்க நீக்கமற பரந்து நிறைந்திருக்கும் ஓர் உயிரினம்
நண்டு. பார் எனப்படும் பவழப்பாறைக் கூட்டம், பார்
தாழ்ந்த பகுதி, மணல்வெளி, மண்டி எனப்படும்
சகதி நிலம்… பல ஆயிரம் அடி பள்ளத்தாக்கு… இப்படி கடலில், எங்கேயும், எப்போதும்
காணப்படக்கூடிய ஓர் உயிரினம் இது.
அது, ஐஸ் நிறைந்த அண்டார்ட்டிகாவானாலும் சரி,
சுள்ளென வெய்யில் சுடும் வெப்பக்கடலாக இருந்தாலும் சரி, நண்டுகள் உலா வராத, அல்லது நண்டுகளின் கால்படாத உலகக்
கடல்கள் என்று எதுவுமே இல்லை.
ஓடுடைய ஆமை போல தோடுடைய ஓர் உயிரினம் நண்டு. பத்து
கால்கள் கொண்ட டெகோபாட் (Decopod) என்ற வகைப்பாட்டில் நமது நண்டும்
ஓர் உறுப்பினர். கல்இறால் போன்றவையும் இந்த டெகோபாட் பிரிவில்
அடங்கும்.
நண்டுகளில் மொத்தம் 5 ஆயிரம் வகைகள் தேறும். பட்டாணி அளவுள்ள மீச்சிறு நண்டில் இருந்து, பதின்மூன்றடி
குறுக்களவு உடைய பெத்தாம் பெரிய நண்டு வரை கடலில் உண்டு.
நண்டினங்கள் பொதுவாக இரு பெரிய கடிகால்கள், நடக்க
உதவும் 4 இணைக்கால்கள் என மொத்தம் பத்து கால்களுடன் விளங்கும்.
பின்சர், Cheliped என்றெல்லாம் அழைக்கப்படும் நண்டின்
கடிகால்கள், பலவிதங்களில் நண்டுக்குப் பயன்படக்கூடியவை.
இந்த கடிகால்களைத் தட்டிதட்டி ஒரு நண்டு மற்றொரு நண்டுடன்
தகவல் பரிமாறும். சிப்பிகளின் ஓடுகளை உடைக்க இந்த கடிகால்கள்
பயன்படும். சிலவேளைகளில் கத்தரிக்கோல் போலவும்,
சிலவேளைகளில் ஜப்பானியரின் சாப்ஸ்டிக் போல, உணவை
எடுத்து உண்ணப் பயன்படும் குச்சியாகவும் கடிகால்கள் உதவுகின்றன. நண்டின் ஆயுதமாகவும் விளங்கும் இந்த கடிகால் ஒடிந்தால்
மீண்டும் அது வளர்ந்து விடும்.
நண்டின் ஓடு கால்சியம் கார்பனேட்டால் ஆனது. நண்டின்
பஞ்சு போன்ற மெத்மெத் உடலை இந்த ஓடுதான் பாதுகாக்கிறது. நண்டுகளின்
ஓடு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வளராது. இதனால்,
நண்டு பெரிதாகும்போது ஓட்டைக் கழற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இப்படி ஓடு கழற்றுவதை Molting என்பார்கள்.
ஆண் நண்டு பிறந்த முதல் ஆண்டில் 6 முதல்
7 முறை ஓடுகழற்றும். வளர்ந்தபின் ஆண்டுக்கு இருமுறை
ஓடுமாற்றினால் போதும். பழைய ஒட்டைக் களைந்து புதிய ஓடு வளரும்
வரை நண்டுகள் கரந்துறைந்து அதாவது மறைந்த வாழும்.
நண்டு, உணவகங்களில் மெனுகார்டு
பார்த்து தேர்வு செய்து உண்ணும் உயிரினம் அல்ல. இறந்தமீன்கள்,
பாசி, கடல்புழு, ஏன் இதர
நண்டினங்களையும் கூட நண்டு உண்ணும். நண்டுகள் எந்த திசையிலும்
நகரக் கூடியவை. ஆனால், ஆபத்து ஏற்பட்டு
விரைவாக ஓட வேண்டும் என்றால் பக்கவாட்டில்தான் நண்டு ஓடும். நண்டுகளில்
நீந்தும் நண்டினங்களும் அதிகம். நண்டின் தட்டையான உடல் பாறை இடுக்குகளில்
நுழைந்து மறைந்து கொள்ள உதவுகிறது.
நண்டின் கண், பலநூறு பொடிப்பொடி உருப்பெருக்கிகள் கொண்டது.
இந்த கண்கள் மூலம், நண்டால் எந்தத் திசையிலும்
பார்க்க முடியும். கடலுக்கு அடியில், ஏன்?
மணலில் அரைகுறையாகப் புதைந்திருந்தாலும்கூட நண்டால் தெளிவாகப் பார்க்க
முடியும்.
நண்டுகளுக்கு வலி உணரும் தன்மை இல்லை என்று ஒருகாலத்தில் நம்பப்
பட்டது. ஆனால், வலி உணரும் தன்மையுடன், அதை நினைவில் கொள்ளும் ஆற்றலும் நண்டுக்கு உண்டு என்பது பிற்காலத்தில்
தெரிய வந்திருக்கிறது.
பெண் நண்டுகளை ஆண் நண்டு தேர்வு செய்தால், (அல்லது
ஆண் நண்டை பெண் நண்டு தேர்வு செய்தால்) பெண் நண்டின் கால்களைப்
(?) பிடித்தபடி 4 நாள்களுக்குமேல் ஆண் நண்டு சுற்றித்திரியும்.
பெண் நண்டு தோட்டைக் கழற்றும்வரை ஆண் நண்டு காத்திருந்து, அதை தலைகீழாகப்புரட்டி, அதனுடன் காதல் கொள்ளும்.
களிநண்டு அதன் தோட்டைக் கழற்ற இறுகிய களிபோன்ற நிலமே உதவுகிறது. நீலக்கால்
நண்டு, மூன்றுபுள்ளி நண்டு உள்பட நீந்தும் நண்டினங்களில் மிகப்பெரியது
களிநண்டே. நண்டின் கால்களில், கடைசி இணை
கால்களின் முனையில் உள்ள உள்ள துடுப்பு போன்ற பகுதி, நண்டுகள்
நீந்துவதற்குப் பயன்படுகிறது.
உலகில், மீன்கள் அளவுக்கு மனிதர்களால் உண்ணப்படும் ஓர்
உயிரினம் நண்டுதான். ஆண்டுக்கு
15 லட்சம் டன் நண்டுகள் உண்ணப்படுகின்றன.
சிலவகை நண்டுகளுக்கு உள்ள ஆற்றல் வியக்கத்தக்கது. கையில்
எடுத்தால் பிஸ்கட் போல உடைந்துவிடக்கூடிய மெல்லிய ஓடுடைய ஒருநண்டு, சீலா மீனின் கூரிய பற்களால் கூட துண்டிக்க முடியாத கனமான மீன்பிடி வலையை சில
மணித்துளிகளில் கடித்துக் குதறி விடும்.
No comments :
Post a Comment