Monday, 2 January 2017

கட்டைச்சுறா (Black tip reef Shark)

கடலின் மிக மூத்த குடிகள் என்றால் அது சுறாக்கள்தான். ஏறத்தாழ 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்தகுடி சுறா. (திமிங்கிலம் தோன்றியது வெறும் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான்) வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்பது போல, கடந்த பல மில்லியன் ஆண்டுகளில் ஏராளமான சுறா இனங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன.
இன்றைய நம் உலகில் 440 முதல் 450க்கும் மேற்பட்ட சுறா இனங்கள் உள்ளன.
சுறாக்களில் ஒருவகை சிறிய சுறா கட்டைச்சுறா அல்லது கட்டசுறா. பார்வைக்கு இது மிகவும் அழகான சுறாவும் கூட. 6 அடி நீளம் கொண்ட கட்டைச்சுறா சிறியது ஆனால் மின்னல்போல வேகம் மிக்கது. இதன் நிறை வெறும் 20 முதல் 25 கிலோதான்.
பவழப்பாறைகள், மணற்பாங்கான ஆழம் குறைந்த கடல்களில் சிறு கூட்டமாக கட்டைச்சுறா சுற்றித்திரியும்.
கடலில் முக்குளிப்பவர்கள் அடிக்கடி காணக்கூடிய சுறா இது. சிறிய சுறா என்பதால் இது ஆபத்தற்ற சுறா. கடல்நீர் கலங்கியிருக்கும் வேளையில் சீண்டியபோது மட்டுமே கட்டைச்சுறா மனிதர்களைத் தாக்கியிருக்கிறது. மற்றபடி இது மனிதர்களின் அண்மையை வெறுத்து, ஒதுங்கிச் செல்லக் கூடிய சுறா.
கட்டைச்சுறாவை பயமுறுத்துவது எளிது. பயப்படும்போது இந்த சுறா S வடிவில் நெளியும்.
கட்டைச்சுறாவின் அனைத்து தூவிகளின் முனைகளிலும் சிறு கறுப்புத்திட்டு காணப்படும். குறிப்பாக முதுகுத்தூவியில் இந்த கறுப்புத்திட்டு ஒரு முக்கோணம் போல அழகுபட துலங்கும். கட்டைச்சுறாவின் முக்கிய அடையாளமே இதுதான்.
உடலின் அளவு மற்றும் மொண்ணையான மூக்கு காரணமாக கட்டைச்சுறா என்ற பெயர் இதற்கு ஆகி வந்திருக்கிறது.
கட்டைச்சுறா ஓரடி ஆழமுள்ள கடற்கரைப்பகுதிக்கு கூட வந்து செல்லும். அப்படி வரும் போது இதன் முதுகுத்தூவி கடல்மட்டத்துக்கு மேல் தெரிந்து பயமுறுத்தும். சின்னஞ்சிறு பார்மீன்களே கட்டைச்சுறாவின் முதன்மை உணவுஇரைமீன்களை வேட்டையாடும்போது தன்னின சுறாவுடன் இணைந்து இது கூட்டாகச் செயல்படும். ஓங்கல்களைப் போலவே மீன்கூட்டத்தை ஒரு பந்தாகத் திரட்டி கட்டைச் சுறாக்கள் விருந்துண்ணும். கணவாய், இறால்களையும் இது தின்னும்.
கடல்நீரை விட்டு முழுவதுமாக வெளியே துள்ளிக்குதிக்கும் ஒருசில சுறாக்களில் கட்டைச்சுறாவும் ஒன்று. இரைமீன்கூட்டத்தை உளவு பார்க்க கட்டைச்சுறா இப்படி கடல்மேல் துள்ளும். இதை ஒற்றன் துள்ளல் (SPY HOPPING) என்பார்கள். கட்டைச்சுறாவின் கர்ப்பக் காலம் 16 மாதங்கள். 2 முதல் 4 குட்டிகளை இது ஈனும்.
கட்டைச்சுறா பவழப்பாறைகளையும் ஆழம்குறைந்த கடல்பகுதிகளிலுமே அதிகம் சுற்றித்திரியும் சுறா. கட்டைச்சுறாவைப் போலவே தூவிகளில் கருந்திட்டு உள்ள மற்றொரு சுறாவும் இருக்கிறது. அது குண்டன் சுறா. சாம்பல் அல்லது கருநீல நிறமான இந்த சுறாவின் பின்புற அடித்தூவியைத் தவிர்த்து மற்ற தூவிகள் அனைத்திலும் கருந்திட்டு காணப்படும். முகம் வட்டமாக சற்று நீண்டுகாணப்படும். இதன் முதுகு முன்புறதூவி அரிவாள் போன்றது. பின்புற முதுகுத்தூவி சிறியது. இரு தூவிகளும் இணைப்பு எதுவுமின்றி தனித்தனியாக காணப்படும். குண்டன் சுறாவின் நிறம் சாம்பல் முதல் பழுப்பு. எளிதாகக் காணக்கூடிய வகையில் இதன் உடலின் இரு பக்கங்களிலும் வெண்வரிகள் தென்படும்.
262 அடி ஆழ கடலில் குண்டன்சுறா காணப்படும். திருக்கை, கணவாய் போன்றவை இதன் முதன்மை உணவுகள். கட்டைச்சுறா போலில்லாமல், குண்டன் சுறா பெரும்பாலும் தனிமை விரும்பி.

இரை உண்ணும் போது இது கண்களை தலைக்குள் உருட்டிக் கொள்ளும். கரையோரம் வந்து மனிதர்களைத் தாக்கும் பழக்கமும் குண்டன் சுறாவுக்கு உண்டு. 
நீங்கள் கடலில் முக்குளிப்பவராக இருந்தால் கட்டைச்சுறாவுக்கும், குண்டன் சுறாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது நல்லது. மாறாக குண்டன் சுறாவை கட்டைச்சுறா எனத் தவறான புரிதல் ஏற்பட்டால் அது ஆபத்துக்கு வழிவகுக்கும்.
(குறிப்பு: படத்தில் உள்ள இருசுறாக்களும் கட்டைச்சுறாக்களே)

No comments :

Post a Comment