Friday, 30 December 2016

லோமியா (Notched butterfly threadfin bream)
 
தெளிந்த ரோஸ் மிட்டாய் நிறம் கொண்ட லோமியா மீன் நவரைக்கு உறவுக்கார மீன். பவழப்பாறை களுக்கு அடுத்த பள்ளங்களில் அதாவது பார்விட்டு தாழ்ந்த பகுதிகளில் வாழும் கடலடி மீன் இது. இந்தியப் பெருங்கடல் இதன் இருப்பிடம். குறிப்பாக பாரசீக வளைகுடாவில் இந்தவகை மீன்கள் அதிகம்.
லோமியா மீன் 8 அங்குலம் முதல் 29 சென்டி மீட்டர் வரை நீளமிருக்கும். கடலில் ஆழம் செல்ல செல்ல இந்த வகை மீனின் அளவு பெரிதாக இருக்கும். மீனின் மேற்பகுதி பிங்க் நிறமாகவும், அடிப்பகுதி வெள்ளி நிறமாகவும் மிளிரும். இந்த இருநிறங்களையும் எல்லைப் பிரிப்பது போல மெல்லிய சவ்வுத்தோல் ஒன்று செவுள் முதல் வால் வரை ஓடும். Membrane எனப்படும் அந்த மெல்லியத் தோலை உரித்தெடுத்தால் அதன்அடியில் ஓர் ஈர்க்குக்குச்சியை வைக்கும் அளவுக்கு மெல்லிய பள்ளத்தைக் காணலாம். வெட்டுப்பட்ட (Notched) என்று லோமியா மீனுக்குப் பெயர்வர இந்த பள்ளக் கோடே காரணம்.
லோமியாவின முதுகில் 10 முள்கதிர்தூவிகளும், 9 மென்கதிர்தூவிகளும் காணப்படும். முதுகுத்தூவியின் முனைகள் தோடம்பழ நிறம் எனப்படும் ஆரஞ்சு நிறத்தவை.
வால்அடியில் 9 கதிர்தூவிகள் காணப்படலாம். அடிப்பக்க முன்தூவி கூர்மையானது. வாலடித் தூவியைத் தொட்டுவிடும் அளவுக்கு அது
நீளமானது. லோமியாவின் பக்கத்தூவிகள் நீளமானவை. தூவிகள் அனைத்துமே பிங்க் நிறமானவை. லோமியாவின் வாலின் மேல்நுனி கீழ்நுனியை விட சற்று நீளமானது.
இந்த மீனின் தாடையிலும், விழிகளுக்கு முன்பும் பொன்மஞ்சள் நிற வரிகள் காணப்படும்.
சிறுகூட்டமாகத் திரியும் லோமியா மீன், பகலில் இரைதேடக்கூடியது. முத்துப் படுகைகள் மற்றும் மண்டி பகுதியில் இந்த கடலடி மீன் அதிகம்
காணப்படும்.
17 மீட்டர் முதல் 100 மீட்டர் ஆழத்தில் லோமியா வாழக்கூடியது. Nemipterus peronii என்பது இதன் அறிவியல் பெயர்.
ஓட்டுண்ணிகளுக்கு அதிகம் இடமளிக்கும் லோமியாவில் ஏறத்தாழ 26 வகைகள். அதில், கிளி லோமியா, கிளிப்பச்சை நிற தூவிகள் கொண்டது. ராசியா லோமியா என்பது 8 முதல் 10 கிலோ வரை நிறையுள்ள பெரிய மீன். அழுக்கு சிவப்பு மிட்டாய் வண்ணமாக இது காணப்படும்.

கண்டல், துள்ளுகெண்டை, சங்கரா என்பது லோமியாவுக்கான வேறுசில பெயர்கள் எனக்கருதப்படுகிறன.

Monday, 26 December 2016

கண்ணாடி காரல் (Moon Fish)

மீன்கள் உலகம் வியப்பானதுதான். அந்த மீன்களில் கொஞ்சம் வியப்பான மீன் கண்ணாடி காரல். வடதமிழகத்தில் இதன் பெயர் அம்பட்டன்கத்தி. அறிவியல் பெயர் mena maculate. ஆங்கிலத்தில், நிலாமீன் எனப்பொருள்படும் MOON FISH என இது அழைக்கப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் ஒபா (OPAH).
கார்ச்சக்கரம் அளவுக்கு வளரக்கூடிய மீன் இது. முழுக்க முழுக்க இந்தமீன் தட்டையான, ஏறத்தாழ வட்டவடிவம் கொண்டது. மீனின் பெரும்பகுதி வெள்ளி நிறமாகவும், மேற்பகுதி பசியநீல நிறமாகவும் பொலியும். மேற்பகுதியில் 3 முதல் 4 கருஞ்சாம்பல் நிற திட்டுகள் காணப்படலாம்.
சிறிய முன்துருத்திய வாயும், கவைபோல பிளந்த வாலும் இதன் முக்கிய அடையாளங்கள்.
இவ்வளவு தட்டையான இந்த மீன், இதயம், மூளை போன்றவற்றை எங்கே வைத்துக் கொள்கிறது என்பது புதிர்.
உலகின் முதல்வெப்ப ரத்த மீனாக கண்ணாடி காரல் அறிவியலாளர்களால் கருதப்படுகிறது. கடலில் எவ்வளவு குளிர்நிறைந்த ஆழத்தில் மூழ்கினாலும் தனது உடலை இது வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளும். எவ்வளவு ஆழத்தில் மூழ்கினாலும், இதன் வெப்பநிலை 5 பாகை செல்சியசாகவே இருப்பது அதிசயம்.
சூரை (TUNA) போன்ற மீன்கள் உடலை வெதுவெதுப்பாக கடல்மட்டத்துக்கு அவ்வப்போது வந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால், கண்ணாடிகாரல் அப்படி வரத் தேவையில்லை. சிறகு போன்ற பக்கத் தூவிகள் மூலம் நீந்தும் இந்த மீன், 160 அடி முதல் ஆயிரத்து 300 அடி ஆழத்தில் பெரும்பாலும் தங்கியிருக்கும்.
கண்ணாடி காரல் கூட்டமீன் அல்ல. இது தனித்து திரியக்கூடிய அரிய மீன். இந்தியப் பெருங்கடல் போன்ற வெப்பக்கடல்பகுதியே இதன் முதன்மை வாழ் விடம்.
உடல்வெப்பம் காரணமாக கூரிய பார்வை கொண்ட மீன் இது. கடலின் இருள் ஆழங்களிலும் இம்மீன் தெளிவாகப் பார்க்கக் கூடியது. கொன்றுண்ணியான கண்ணாடி காரல், பெருங்கடல்களில் நீண்ட தொலைவு நீந்தவும் கூடியது.



Monday, 19 December 2016

மீனம்பர் (அம்பர் கிரிஸ்) (Ambergris)

ஓமான் நாட்டின் கடலோரம்
இங்குள்ள சார்கியா, வுஸ்தா, டோஃபார் கடற்கரைகளில் அவ்வப்போது ஓர் அதிசயப் பொருள் கரையொதுங்கும்.
மெழுகு போன்ற ஒரு பொருள் அது. இன்னும் சொல்லப்போனால் உலகின் மிக விலைகூடிய மெழுகு அதுதான்.
அம்பர் கிரிஸ் என்று அதைச் சொல்வார்கள். அண்மையில், ஓமான் நாட்டின் குரயாத் பகுதியில் காலித் அல் சினானி என்பவர் உள்பட 3 மீனவர்கள் இந்த அதிசயப் பொருளைக் கண்டார்கள்.
80 கிலோ எடையில் மிதந்து வந்த அந்தப் பொருள் அம்பர் கிரிஸேதான்.
ஸ்பெர்ம் திமிங்கிலம் எடுத்த வாந்தி அது.
ஆனால், அந்த வாந்தி, வாய்க்கும் வயிற்றுக்கும்பற்றாமல் பிழைப்பு நடத்தி வந்த அந்த 3 ஏழை மீனவர்களையும் ஒரே நொடியில் குபேரர்களாக மாற்றி விட்டது.
ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் ஆழ்கடலின் அடிப்பகுதியில் முக்குளித்துச் சென்று அங்கே பீலிக் கணவாய்களை வேட்டையாடித் தின்பது வழக்கம்.
கணவாயை விழுங்கும் திமிங்கிலத்தால் கணவாயின் தோட்டை (ஓட்டை) செரிக்க வைக்க முடியாது. திமிங்கிலக் குடலில் சிக்கிக் கொள்ளும் இந்த கணவாய் ஓட்டைச்சுற்றி எண்ணெய் வடிவப் படலம் ஒன்று தோன்றும். அதுதான் அம்பர் கிரிஸ்.
சிப்பியின் வயிற்றில் முத்து கிடைப்பது போல, திமிங்கிலத்தின் வயிற்றில் கிடைக்கும் அரிய பொருள் இந்த அம்பர்கிரிஸ். திமிங்கிலம் சில வேளைகளில் வாந்தி எடுத்து இந்த அம்பர்கிரிஸை வெளியே கக்கும். அல்லது இறந்த ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் வயிற்றைப் பிளந்தாலும் ஒருவேளை அம்பர்கிரிஸ் கிடைக்கும்.

மஞ்சள் நிற மெழுகு போன்ற இந்த அம்பர்கிரிஸ் ஆரம்பத்தில் துர்நாற்றம் வீசக்கூடியது. வெட்டி உலரவைத்தால் இதில் இருந்து நறுமணம் வீசும்.

நறுமணம் கமழும் இந்த அம்பர்கிரிஸை, வாசனைப் பொருட்களைத் தயாரிக்கும்  நிறுவனங்கள் அதிகவிலை கொடுத்து வாங்கிக் கொள்ளும்.
திமிங்கில வேட்டைக்காரர்களிடம் ஸ்பெர்ம் திமிங்கிலம் சிக்கினால் அதன் வயிற்றில் அம்பர்கிரிஸ் இருக்கிறதா எனத் தேடிப்பார்ப்பார்கள். அம்பர் கிரிஸ் இருந்தால் அது புதையல் கிடைத்தது போல.
அம்பர் கிரிஸ் என்பது பிரெஞ்சு மொழிச்சொல். சாம்பல் நிற அம்பர் என்பது அதற்குப் பொருள்.
பழசான விண்ட்சர் சோப். வெண்ணெய் போன்ற மஞ்சள் சாம்பல் நிறப் பொருள் அம்பர் கிரிஸ். அது ஒரு அவுன்ஸ் எடை தங்க நாணயத்துக்கு சம ம்.
காலித் அல் சினானி உள்பட 3 மீனவர்களுக்கு கிடைத்த 80 கிலோ அம்பர் கிரிஸ், ஒரு மில்லியன் ஓமானி ரியாலுக்கு விலைபோனது. அதாவது ஏறத்தாழ 2,597,099 அமெரிக்க டாலர். இதன்மூலம் ஒரே நாளில் உலகத்தின் உச்சிக்குப் போய் விட்டார்கள் அந்த 3 மீனவர்களும்.
அம்பர்கிரிஸ் மட்டுமல்ல. ஸ்பெர்ம் திமிங்கிலத்திடம் இருந்து அம்பர் என்ற அரியவகை பொருளும் கிடைக்கும்.
அம்பருக்கும், அம்பர்கிரிஸுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அம்பர் கடற்கரைகளிலும், உள்நாட்டில் நிலத்துக்கு அடியில் இருந்தும் கிடைக்கக் கூடிய பொருள். ஆனால், அம்பர் கிரிஸ் கடலில் மட்டுமே கிடைக்கக் கூடியது.
அம்பர் கடினமானது, ஒளிபுகக் கூடியது. வாசனையற்றது. அம்பர்கிரிஸ் மென்மையானது. மெழுகு போன்றது. நல்மணம் வீசக்கூடியது. துருக்கியர்கள் அம்பர்கிரிஸை சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். மெக்கா செல்லும் திருப்பயணிகள் அம்பர்கிரிஸை உடன் எடுத்துச் செல்வார்கள்.

உலகின் வெப்பக் கடல்களில், குபேரனின் கருவூலத்தில் இருந்து தப்பி மிதக்கும் அரிய பொருள் அம்பர்கிரிஸ்.
பீலிக் கணவாயும், தோட்டுக்கணவாயும்

கணவாய்கள் பொதுவாக அதிக செயல்திறன் கொண்ட, அறிவார்ந்த கடல் உயிர்கள். அதில் பீலிக்கணவாய் என்ற SQUID நீளமான ராக்கெட் போன்ற உடல் கொண்டது. CUTTLEFISH எனப்படும் தோட்டுக்கணவாய் அகலமான குட்டையான உடல் அமைப்பைக் கொண்டது.
இவ்விரு கணவாய்களின் தலையிலும் எட்டு சிறுசிறு கைகளும், 2 நீளமான கைகளும் காணப்படும். நீளக் கைகளின் நுனிகளில் தவறாமல் உறிஞ்சான்கள் இருக்கும்.
இந்த உறிஞ்சான்களை இரைவிலங்கின் மீது இவ்விரு கணவாய்களும் வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அதன்மூலம் இரையை நகர விடாமல் பிடித்துக் கொள்ளும்.
சீண்டப்பட்டால் இவ்விரு கணவாய்களுமே கரும்பழுப்பு நிற மையை பீய்ச்சியடித்து கடல்நீரை கறுப்பாக்கி, தப்பிச் செல்லக்கூடியவை.
இந்த இரு கணவாய்களுமே படுக்கை வசமாக, அழகாக நீந்திச் செல்லக் கூடியவை. உடலின் ஓரங்களில் உள்ள FRILL போன்ற வளைவுநெளிவுகளை அலையைப் போல அசைத்து அசைத்து இவை அழகாக நீந்திச் செல்லும்.
சிபான் (Siphon) என்ற உடல் குழாயில் கடல்நீரை நிரப்பி, அதை வேகமாக வெளியேற்றியும் கணவாய்களால் விரைந்து செல்ல முடியும். முன்னும் பின்னும் கூட கணவாய்கள் நீந்தும்.
இந்த இரு கணவாய்களுக்கும் கிளி போன்ற அலகு உண்டு. அதன்மூலம் இரையை இவற்றால் துணிக்க முடியும். கண்கள் நன்கு மேம்பட்டவை.
கணவாய்களின் தோடு உடலுக்குள் மறைந்திருக்கும்.
பீலிக்கணவாயின் தோடு, மெல்லிய கண்ணாடி போன்ற ஒளிஊடுருவக் கூடியது. இதை பேனா என்பார்கள். கால் அங்குல கனமுள்ள தோல் கொண்டது பீலிக்கணவாய்.
தோட்டுக் கணவாயைப் பொறுத்தவரை, அது, ஏறத்தாழ முக்கால் அங்குல தோல் கொண்டது. தலைப் பகுதி வரிவரியாக காணப்படும். இந்தப் பகுதி நிறம் மாறக்கூடியது.
தோட்டுக் கணவாயின் தோடு, மென்மையானது, கால்சியம் சத்து நிறைந்தது. கோழிப்பண்ணைகளில் கோழிகளின் முட்டை ஓடுகள் கெட்டியாக மாற, இந்தக் கணவாய்த்தோடு கோழிகளுக்குத் தீவனமாக வழங்கப்படுகிறது.
பீலிக்கணவாய், முட்டிக் கணவாய் இரண்டுமே குறிப்பிட்ட காலத்தில் தோடுகளைக் கழற்றக்கூடியவை.

தோட்டுக்கணவாயில் மிகச்சிறியதொரு இனம் முட்டிக் கணவாய்
உடுமீன் அல்லது நட்சத்திர மீன் (STAR FISH)

வட்டவடிமான தட்டையான ஒரு தட்டு. அதிலிருந்து பூவின் இதழ்கள் போல புறப்பட்டு நீளும் தடிமனான ஐந்து கைகள். உடுமீன் அல்லது நட்சத்திர மீனின் பொதுவான அங்க அடையாளம் இதுதான். உடுமீன்களுக்கு ஐந்து கைகள்தான் இருக்கும் என்று சட்டதிட்டம் எதுவும் கிடையாது. 4 அல்லது 6 கைகள் கொண்ட உடுமீன்களும் உண்டு.
உடுமீனின் கை துண்டிக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ந்து விடும் என்பது மட்டுமல்ல, துண்டிக்கப்பட்ட ஒரு கை புதிய ஒரு உடுமீனாக வளரவும் வாய்ப்புண்டு. அதுபோல கையை இழந்த உடுமீனுக்கு மீண்டும் கை முளைக்கவும் வாய்ப்புண்டு.
சிலவகை உடுமீன்களை இரண்டாகப் பிளந்து கடலில் எறிந்தால் அந்த இரு துண்டங்களும் இருவேறு உடுமீன்களாக வளரக்கூடும்.
உடுமீனுக்கு தலை என்று எதுவும் கிடையாது. இதன் கைகளுக்கு அடியில்
எண்ணற்ற, சதைப்பாங்கான, விரல்போன்ற உறுப்புகள் காணப்படும்.
இந்த குழாய் போன்ற கால்களின் ஒவ்வொரு முனையிலும் உறிஞ்சான்கள் இருக்கும். கடல்நீரை உறிஞ்சு வெளியேற்றுவதன் மூலம் உடுமீன்கள், ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த உறிஞ்சுக் கால்கள் மூலம் உடுமீன்களால் நடக்கவும், இரை தேடவும் முடியும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிப்பியை உடுமீன் இறுகப் பற்றி அணைத்துக் கொண்டால் அந்த சிப்பி களைப்படையும் வரை உடுமீன் அதை விடவே விடாது. முடிவில் சலித்துப்போய் சிப்பி வாய் திறக்கும்போது, உடுமீனின் வயிறு அதன் வாய் வழியாக வெளிவந்து சிப்பிக்குள் நுழையும். வயிற்றில் உள்ள சில அமிலங்கள் சிப்பியின் உள்உறுப்புகளை பதமாக்கி உணவாக மாற்றும், சிப்பியின் சதையை உணவாக உண்டபின் உடுமீனின் வயிறு மீண்டும் வாய் வழியே உடலுக்குள் இழுத்துக் கொள்ளப்படும். உடுமீனின் இந்த இரையுண்ணும் பாங்கு மிகமிக அலாதியானது.
உடுமீனில் மிகவும் சிறிய உடுமீன், முழு வளர்ச்சிக்குப்பிறகு கூட 12 மில்லி மீட்டருக்கும் குறைவான குறுக்களவுடன் காணப்படும். மிகப்பெரிய உடுமீன் ஒரு மீட்டர் குறுக்களவு கூட இருக்கலாம்.
உடுமீன்கள் பொதுவாக தெளிந்த மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும், சிலவகை உடுமீன்கள் கண்ணைப் பறிக்கும் கிரிம்சன் அல்லது நீலநிறத்திலும் விளங்கும். உடுமீன்களில் பல ஊன்உண்ணிகள். சிப்பிகளைத் தவிர சிறிய மீன்களையும் இவை இரையாக்கும். உணர்வு உறுப்பு என்று எதுவும் இல்லாவிட்டாலும் தொடு உணர்வால் உடுமீன்கள் இரையை அறியும்.
உடுமீன் வசிக்கும் ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் இறைச்சிக் குழம்பைக் கொட்டினால் மறுகணம் அது சுறுசுறுப்படைவதைக் காண முடியும்.
சிலவகை உடுமீன்கள் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை முட்டையிடக் கூடியவை. கடலில் இடப்படும் இந்த முட்டைகள் வளர்ந்து உடுமீன்களாக மாறுகின்றன.

கரையொதுங்கும் உடுமீன்கள் உலர வைக்கப்பட்டு, அலங்காரப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. உடுமீன், கடல்மூரைகளுக்கு உறவுள்ள உயிர். ஆனால், மூரைகளை இது உணவாக்கக் கூடியது. கடலில் முத்துச்சிப்பிகளுக்கு எதிரிகள் பலப்பல. அந்த எதிரிகள் பட்டியலில் உடுமீனுக்கும் இடமுண்டு.

Saturday, 10 December 2016

பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)


1125. கிளிஞ்சானில் கொண்டைக் கிழிஞ்சான், 1126. விளமீனில் பெருவா விளமீன் (பெரிய வாய் விளமீன்), 1127. கருக்கா விளமீன் (ஊசி போன்ற பற்கள் கொண்டது), 1128. தாடி விளமீன் (காதுபக்கம் பொட்டு உள்ளது. காவல்காரன் விளமீன் என்ற பெயரும் உண்டு), 1129. தெளுவாட்டு விளமீன், 1130. தாழவிளமீன். 1131. தெளிந்த ரோஸ் மிட்டாய் நிறம் கொண்ட மீன் லோமியா. அதில், கிளி லோமியா, கிளிப்பச்சை நிற தூவிகள் கொண்டது. 1132. ராசியா லோமியா (8 முதல் 10 கிலோ வரையுள்ள பெரிய மீன். அழுக்கு சிவப்பு மிட்டாய் வண்ணமாக இது காணப்படும்), 1133. செப்பிலியில் கொண்டை செப்பிலி தெரிந்ததுதான், அதன் இன்னொரு பெயர் கொக்கா செப்பிலி, 1134. மட்ட செப்பிலி, 1135. பொக்குவாயன் செப்பிலி, 1136. கெழுது மீனில் கலிக்கெழுது, 1137. முட்டக் கெழுது (இதன் வாய் V வடிவமானது), 1138. வண்ணக்கெழுது (சாம்பல் நிறத்தது. வயிறு வெள்ளை), 1139. கெழுதில் பெரியது தேடு. அந்த தேடில் நீளமான ஒன்று ஊசித்தேடு. (பழுப்புநிற முதுகும், பொன்னிற வயிறும் 3 கிலோ வரை எடையும் உள்ள மீன் இது), 1140. தடியன் சீலா மீனுக்கு ஊளா என்ற பெயரும் உண்டு. இதே மீனை ஆத்து ஊளா என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 1141. சூரையில் எலிச்சூரைக்கு, உருளன்சூரை என்று ஒரு பெயர் உண்டு. உருளை வடிவம் காரணமாக போத்தல் சூரை என்று இதை அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 1142. சூரையில் கூரிய பல் உள்ள ஒன்று சீலா சூரை. (தொடரும்)

Thursday, 1 December 2016

தேவை கொஞ்சம் மியூக்கஸ்


எவ்ளவோ பண்றோம். இதை பண்ண மாட்டோமா? நாங்க எல்லாம் அப்பவே அப்படி.
இப்படி காலரை கன்னாபின்னான்னு தூக்கி விட்டு பெருமைப்பட்டுக்கிறாங்க ஆஸ்திரேலியாவில் உள்ள சில கடல் ஆராய்ச்சியாளர்கள்…அப்படி அவங்க என்னதான் செய்றாங்க? இதோ இங்கே பாருங்க புரியும்.
கூன்முதுகுத் திமிங்கிலம்.
ஆங்கிலத்தில் இதை ஹம்ப்பேக் (HUMPBACK) திமிங்கிலம்ப்பாங்க.
இந்த வகை திமிங்கிலங்கள் ஆண்டுதவறாம, அண்டார்க்டிக் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவின் தி கிரேட் பேரியர் ரீப் (THE GREAT BARRIER REEF) பகுதிக்கு குழந்தை குட்டிகளோட கும்பலா புறப்பட்டுரும்.
கூன்முதுகுத் திமிங்கிலங்களின் இந்த 10 ஆயிரம் கிலோமீட்டர் வலசைப் பாதையில், அதுகளை அடிக்கடி பார்த்து மகிழக்கூடிய இடம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கோல்ட்கோஸ்ட்தான்.
ஹம்ப்பேக் ஹைவே-ங்கிற இந்த வலசை வழித்தடத்தில் திமிங்கிலங்கள் கூட்டம்கூட்டமா வர்றதை படகுகளில் இருந்தபடி பார்த்து மகிழ்வாங்க மக்கள்.
திமிங்கிலங்களின் முக்கியமான பழக்கமே முதுகுத்துளை வழியா அப்பப்ப சுவாசக்காற்றையும், கொஞ்சூண்டு கடல்நீரையும் பீய்ச்சியடிக்கிறதுதான். கல்யாண வீட்டிலே கலகலப்பா பன்னீரைத் தூவுற மாதிரி, திமிங்கிலங்கள் இப்படி அடிக்கடி பூமழை பொழியும். இந்த பூமழையோடு திமிங்கிலத்தின் குடலில் உள்ள மியூக்கஸ் (MUCOUS) என்கிற ஒரு சவ்வுத் திரவமும் கூட்டணி சேர்த்துக்கும்.
திமிங்கிலம் ஒவ்வொரு முறை இப்படி பூமழை பொழியும்போதும், தான் யார்ங்கிற தகவலையும் சேர்த்தே தூவுது.
திமிங்கிலத்தின் இந்த மியூக்கஸை ஆராய்ந்தால், அது ஆணா பெண்ணாங்கிறதில் தொடங்கி, அதோட ராசி, நட்சத்திரம், ஏன்… ஜாதகத்தையே கண்டுபிடிச்சிறலாம். ஆனால் 30 ஆயிரம் கிலோ எடையிருக்கிற ஒரு திமிங்கிலத்துக்கிட்ட போய் மியூக்கஸை யார் கேட்டு வாங்குறது?
அதனால், கூனல்முதுகுத் திமிங்கிலங்களின் மியூக்கஸை சேகரிக்க ஒரு சூப்பரான வழியை ஆஸ்திரேலிய கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. அதுதான் டுரோன் (DRONE)..
புறா காலில் கடிதத்தைக் கட்டி பறக்க விடுற மாதிரி, டுரோனின் காலில் ஒரு சின்ன பாத்திரத்தைக் கட்டி அதை பறக்க விடுறாங்க ஆய்வாளர்கள்.
முதுகு வழியா திமிங்கிலம், பூவாணம் தூவும்போது கனகச்சிதமா அதை சேகரிச்சுக்கிட்டு வந்திருது டுரோன். அப்புறம் பத்திரமா வந்து படகில் இறங்கிடுது.
திமிங்கிலங்கள் எல்லாம் கேளா ஒலியலைகள் மூலம் பேசக்கூடியவை. அதனால் ஹைட்ரோபோன் (HYDROPHONE) ங்கிற கருவியைக் கடல்ல தள்ளி, திமிங்கிலத்தின் ஒலிமூலம் அதன் மூடு என்னன்னு ஆய்வாளர்கள் தெரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் டுரோன் மூலம் திமிங்கிலத்தின் மியூக்கஸை அவங்க சேகரிக்கிறாங்க. பிறகு அதை ஆய்வகத்தில் அலசு அலசுன்னு அலசி ஆராய்றாங்க.

செம கலக்கல் இல்ல..?
(வழக்கமான நடையில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இது எழுதப்பட்டுள்ளது)