பெருந்தலை ஆமை (Logger head turtle)
பெயருக்கேற்ற பெரிய தலை கொண்ட ஆமை இது. Caretta
caretta என்பது இதன் அறிவியல் பெயர். தடித்த ஓடுடைய ஆமைகளில் மிகப்பெரியது பெருந்தலை
ஆமையே. அதுபோல பெருங்கடல்களைத் தாண்டி மிக பெரும் பரப்பில் நீந்தித் திரியும் ஆமை இனமும்
இதுவே.
வளர்ந்த பெருந்தலை ஆமையின் நீளம் ஏறத்தாழ 1.20 மீட்டர்.
எடை 250 கிலோ வரை. இதன் ஓடு செம்பழுப்பு நிறமானது. வயிற்றுப்பக்கம் வெளிர் மஞ்சள் நிறம்
கொண்டது.
பெருந்தலை ஆமையின் முன்னங்கால்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு
நகங்கள் இருக்கும்.
மிகவும் பலமான தாடை கொண்ட இந்த ஆமை, நண்டுகள், ராணி
சங்கு, மட்டி, கிளிஞ்சல் வகைகளை அலகால் உடைத்து உண்ணும். சொறிமீன்கள், கடற்பஞ்சு, பாசி.
கணவாய், பறக்கும் கோலா மீன் போன்றவையும் இதன் இரைகள். பெருந்தலை ஆமைக்கு மீன் தின்னும்
பழக்கம் இருந்தாலும் அதை முழுக்க முழுக்க மீன் தின்னியாக கொள்ள முடியாது.
பெருந்தலை ஆமையின் இறைச்சி மிகவும் சுவைமிகுந்தது.
பஞ்சலை ஆமையின் கறியில் உள்ள ஒருவகை வெறி இதில் இருக்காது. அதுபோல, Plastron என்ற வயிற்று
ஓட்டைக் கழற்றியதும், பெருந்தலை ஆமையின் உடலில் உள்ள ஒட்டுமொத்த இறைச்சியையும் ஒருவர்
கைக்கொள்ள முடியும்.
இறைச்சியை நீக்கியபின் பெருந்தலை ஆமையின் ஓட்டின்
உள்ளே உள்ள கொழுப்பை வாட்டினால் அது எண்ணெய்யாகவும், மணல்போலவும் திரியும்.
இதன் எண்ணெய் தீய சக்திகளை ஓட்டும் என்ற நம்பிக்கையில்
வீட்டு முன் வாயில்களில் கண்ணாடிக் குப்பிகளில் அடைத்து தொங்கவிடப்படுவது வழக்கம்.
பெருந்தலை ஆமைகள் 35 வயதில் பருவம் எய்தும். பெண்
ஆமை, தான் குஞ்சாக தோன்றிய அதே கடற்கரையைத் தேடி வந்து 100 முட்டைகள் வரை இடும். மற்ற
கடலாமை குஞ்சுகளைப் போலவே பெருந்தலை ஆமையிலும் ஆயிரத்தில் ஒரு குஞ்சே உயிர்பிழைக்க
வாய்ப்புண்டு.
No comments :
Post a Comment