Tuesday, 29 March 2016

ஓட்டா மீன் (ஓரா மீன், முயல்மீன்) 

சேவல் கோழி போன்ற நச்சுமுள்கள் உள்ள இன்னொரு வகை பார்மீன் இது. சிகானஸ் (Siganaus) என்ற வகைப்பாட்டில் அடங்கும் ஓட்டா மீன்களில் கிட்டத்தட்ட 28 வகை மீன்கள் இருக்கின்றன. முயல் போன்ற வாய் இருப்பதாலும், முழுக்க முழுக்க பாசிகளை இது தின்பதாலும் முயல்மீன் என்றும் இது அழைக்கப்படுகிறது. தமிழக தென் கடல் பகுதியில் இதன் பெயர் ஓரா.
கடல் நோக்கிய பார்ப் பகுதியில் காணப்படும் ஓட்டா, ஒரு பகல் நடமாட்ட மீன்.
இதன்கீழ்ப்புற முன்தூவியில் இரு முட்கள் அமைந்திருக்கும். கீழ்ப்புற பின் தூவியில் 7 முள்களும், முதுகுத்தூவியில் 13 முட்களும் இருக்கும்.
முதுகுத் தூவியின் முதல்முள் மட்டும் முன்னோக்கி நீண்டிருக்கும், மற்றவை பின்னோக்கிச் சாய்ந்திருக்கும்.
ஓட்டா மீனின் முட்கள் நச்சுச் சுரப்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும், இதன் முள் குத்து மிகுந்த வலியை உண்டாக்கும், வலி போனாலும் இதனால் ஏற்பட்ட காயம் விரைவில் ஆறாது.
ஓட்டா மீன்களில் வெள்ளைப்புள்ளி உள்ள மீன், வரிக்கோடுகள் உள்ள மீன், பொன் வரி மீன், இரட்டைப் பட்டை மீன் என்று பல வகைகள் உள்ளன. ஒன்றிரண்டு ரக ஓட்டா மீன்களே ஓரடிக்கு மேலே வளரக்கூடியவை. ஓட்டா மீன்களை சிலர் உண்பார்கள். நச்சுமீன் என்பதால் இதை உண்ணத் தயங்குபவர்களும் இருக்கிறார்கள்.
படத்தில் உள்ள ஓட்டா மீன் siganus javus மீன்.

Friday, 18 March 2016

சேவல்கோழி மீன்  (Lion Fish)

முதல் பார்வைக்கு ஏதோ விண்வெளியில் இருந்து வந்த வேற்றுகோளைச் சேர்ந்த மீன்போல இது தோன்றும். ஆனால் சேவல் கோழி, சாவக்கோழி, சாமீன் என்றெல்லாம் வழங்கப்படும் இந்த பலவண்ண மீன், உண்மையில் இந்தியப் பெருங்கடலைப் பிறப்பிடமாகக் கொண்டது.
கண்ணைக் கவரும் பலவண்ணம் கொண்ட சேவல்கோழியில் ஏறத்தாழ 12 இனங்கள் உள்ளன, பெரிய மீன் முக்கால் அடி நீளம் இருக்கலாம்.
சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கிரீம், கருப்பு வரிகள் என கண்ணைப் பறிக்கும் சேவல் கோழிக்கு, உணர் இழைகளும் அமைந்துள்ளன.
அகன்ற விசிறித் தூவிகளையும், முரணழகு நிறங்களையும் காட்டி இது இரை மீனைக் கவரும். தன் இனத்தையும் உறவுக்கு அழைக்கும்.
சேவல்கோழி, ஒரு பார்க்கடல் மீன். பார்களில் கடல்நோக்கிய பகுதிகளே இதன் வாழ்விடம். இதர பார்மீன்களிடம் எப்போதும் எதிர்ப்பைக் காட்டி தன் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்காமல் இது தக்க வைக்கக் கூடியது. இது நீச்சல் திறமை உள்ள மீன்.
நடுநிலை ஒப்புமை தவறாமல், நீரில் தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டு இரைமீனை மெதுவாக விரட்டி, ஒரு மூலையில் தள்ளி, இது இரை கொள்ளக் கூடியது.
பார்மீன்களில் ஏறத்தாழ 50 வகையான மீன்கள் இதன் இரைமீன்கள். பெரும்பாலும் இளம்மீன்களையே சேவல்கோழி இரையாக்கும். வாயைப் பிளந்து இரையை ஒரே விழுங்கில் இது விழுங்கக்கூடியது. பெரும்பாலும் காலை நேரமே இதன் இரையுண்ணும் வேளை.
இதன் அகன்ற வயிறு வழக்கத்தை விட 30 மடங்கு விரியக்கூடியது. சேவல் கோழியின் வயிற்றில் ஒரே வேளையில் 60 வகை இரைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
பார்களில் வாழும் இளமீன்களை 5 மாதத்தில் 79 விழுக்காடு இது தின்றழிக்கக் கூடியது.
சேவல்கோழி நஞ்சுள்ள மீன். 18 நச்சுமுள்களை இது கொண்டுள்ளது. இதில் 13 முள்கள் முதுகுத் தூவியில் காணப்படும். இதன் வித்தியாசமான வண்ண அமைப்பு எதிரிமீனை திகைக்க வைத்து தாக்குவதை ஊக்கப்படுத்தாது.
எனினும், சுறா, அஞ்சாளை, களவா, சாம்பல் நிற கிளாத்தி  மீன்கள், சேவல் கோழியை இரையாக்கக் கூடியவை. இதன் நஞ்சு, இந்தவகை மீன்களை ஒன்றும் செய்வதில்லை,
உதிர்க்கப்பட்ட சேவல்கோழி, சீலா போன்ற மீன்களுக்கும் இரையாகும். சேவல் கோழி 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.

Friday, 11 March 2016

கருந்திரளி  (Sheepshead)

கருந்திரளி, wrasse எனப்படும் திரளி வகை மீன்களில் ஒரு ரகம். கருந்திரளியில் பலவகைகள் உள்ளன. ஒன்று கறுப்பும், ஆரஞ்சு சிவப்புமான திரளி. மற்றொன்று செங்குத்தாய் 6 வரிப்பட்டைகள் கொண்ட திரளி.
முதல்வகை கருந்திரளியில் ஆண் மீனுக்கு செம்மறி ஆடு போன்ற தலையும், சிவப்பு நிறக் கண்களும் இருக்கும்.  உடலின் முன்பாகமும், வால் உள்பட பின்பாகமும் கறுப்பாகக் காணப்படும். நடுப்பகுதி மட்டும் ஆரஞ்சு கலந்த சிவப்பாக மிளிரும்.  இம்மீனின் முதுகுத் தூவியில் முன்பாதி சிவப்பாகவும், பின்பாதி கறுப்பாகவும் துலங்கும். வாயின் அடிப்புறம் வெண்மையாக இருக்கும். உடல் செவ்வக வடிவமாகக் காட்சி தரும்.
இனப்பெருக்கக் காலத்தில் ஆண்மீனின் தலையில் ஒரு புடைப்பு தோன்றுவதும் உண்டு, ஆனால்,  பெண்மீனின் உடல் மாறுபட்டது. அது ஒரே மாதிரியாக ஆரஞ்சு சிவப்புநிறமாகத் தோன்றும்.
கருந்திரளியில் மற்றொன்று சாம்பல் நிறப் பின்னணியில் 6 வரிப்பட்டைகளுடன் ஏறத்தாழ ஓரடி நீளமுள்ள மீன். இதன் முதுகு வால் நோக்கி மெல்ல சரியும். முதுகுத் தூவியில் முள்தூவிகளும், மென்மையான கதிர்தூவிகளும் காணப்படும்.
பகலில் இரைதேடும் கருந்திரளி, இரவில் ஒரு படலத்தை உருவாக்கி அதற்குள் தங்கும். அதை இரைதேடும் எதிரிமீன்களால் மோப்பத்தால் கண்டுஉணர முடியாது.
தூங்குவதைப் போல தோற்றம் தருவது இந்த வகை கருந்திரளியின் இன்னொரு முக்கியப் பண்பு.

Sunday, 6 March 2016

தேளி (இருங்கெழுது)
(plotosus Canius)


கெளிறு இன மீன்களுக்கு கெழுது, கெழுத்தி என திசைப்பெயர்கள் அதிகம், பூனை போன்ற மீசை இருப்பதால் ஆங்கிலத்தில் கெழுதுக்கு Cat fish என்பது பெயர்.
கெழுது இன மீன்களில் ஒரு பிரிவான தேளியை,  Ell tail catfish வகைகளில் ஒன்றாகக் கருதலாம். இந்தியப் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்ட மீன் தேளி.
நச்சு முள்கள் கொண்ட கெழுது இன மீன்கள் பொதுவாக வரிகலந்த வண்ணங்களுடன் இருப்பதில்லை. ஆனால், தேளிகள் அதற்கு விதிவிலக்கு.
இந்தத் தேளிகளில் ஒன்று இருண்ட கருஞ்சாம்பல் நிறம் கொண்ட தேளி. இதன் உடல் வரிக் கோடுகள் பகலில் தெரியாது. இரவில் தெரியலாம்.
இதன் மீசைகள் கண்களைத் தாண்டியும் நீளமானவை. மீசையால் கடல்தரையைக் கிளறி இது இரைதேடக்கூடியது.
இதன் முதுகிலும், அடியிலும் தூவி
உண்டு. முதுகுப்பின் தூவியும், அடிப்புறப் பின்தூவியும் நீண்டு சென்று வால்தூவியுடன் ஒன்றரக் கலந்து முடியும்.
தேளி மீன் நஞ்சுள்ளது. இதன் முதுகு மற்றும் பக்கத்தூவிகளில் உள்ள முட்கள் நஞ்சுப்பையுடன் இணைந்திருப்பவை. பிடிப்பவர்களின் கைகளைக் குத்தி நஞ்சை செலுத்த வல்லவை.
தேளி உண்ணத்தகுந்த மீன்.




Wednesday, 2 March 2016

புள்ளிக்குறி மீன்


சரிந்த முன்நெற்றி, கூரிய மூக்கு, வெள்ளி உடல், சின்னஞ்சிறு புள்ளிகள்....புள்ளிக்குறி மீனின் அடையாளங்கள் இவை. குறிமீன்களில் 35 வகைகள் உள்ளன. புள்ளிக்குறி மீன் அதில் ஒன்று. தாடையை அரைத்து சத்தம் எழுப்புவது இந்த மீனின் குணம். ஆங்கிலத்தில் Grunter என்ற பெயர் வந்தது இதனால்தான்.
Spotted Grunter என அழைக்கப்படும் புள்ளிக்குறி மீன் இரைதேடும் விதம் அலாதியானது. செவுள் வழியாக நீரை உள்ளிழுத்து, அதை வாய் வழியே செலுத்தி, இது கடல் தரையை ஊதும்.
இது ஊதும் போது மணல் விலக, அதனுள்ளிருக்கும் ஆமை பூச்சி (Mole crab) நண்டுகள் குறிமீனுக்கு உணவாகும். தலைகீழாக நின்று இரையுண்ணும் வழக்கம் இதற்கு உண்டு. கடல்மட்டம் குறைந்த கரையோரப் பகுதிகளில் வால் நீருக்கு மேல் தெரிய இரையுண்பதும் புள்ளிக்குறி மீனின் பழக்கம்.
இது இரையுண்ணும் இடங்களில் சிறுசிறு மணல்குவியல்கள் காணப்படும். குறிமீன் வந்து சென்றதற்கான அழுத்தமான அடையாளங்கள் இவை.

தடித்த உதடு, சிறுவாய், பலவரிசைப் பற்கள், புள்ளிக்குறி மீனின் இதர அடையாளங்கள். தொண்டையில் உள்ள இதன் பல், இரையை நசுக்கப் பயன்படுகிறது.
புள்ளிக்குறி மீன் 15 ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது. இதன் இன்னொரு வகை வெள்ளைக்குறி மீன். 35 வகைகள் கொண்ட மீன் என்பதால் புள்ளிக்குறி மீனுக்கு தமிழில் இன்னும் பல பெயர்கள் இருக்கலாம்.
கொறுக்கை, முள்ளங்கரா போன்ற பெயர்கள் இந்த மீனைச் சுட்டுவதாக இருக்கலாம், உறுதிப்படுத்த தேவை.
சிலவகை மீன்களுக்கு உள்ளது போல புள்ளிக்குறி மீனின் செவுளும் மனிதன் விரல்களைக் கிழிக்கக்கூடியது.


கடல் விரால் (வெறா)

இந்த மீன் செய்த பேறு என்னவோ தெரியவில்லை? தமிழிலும், ஆங்கிலத்திலும் இதற்கு பல பெயர்கள்.
ஆங்கிலத்தில் Black King Fish. Cobia. Lemon Fish. Sergent Fish என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது. தமிழில் கடல்விரால் என்பதைத் தவிர கடச்சீலா, கடவுளா, வெறா என்ற பெயர்கள் இதற்கு வழங்கப்படுகின்றன.
நெய்மீன் எனவும் இது தவறாக அழைக்கப்படுகிறது.
ரிமோரா (Remora) என்ற உருவுமீன் போலவே உருவத்தில் விளங்கும் கடல் விராலுக்கு, உருவுமீனுக்குரியது போல ஒட்டும் உறுப்பு முதுகில் கிடையாது.
Rachycentron canadum என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் கடல்விரால், நீண்ட மெல்லிய உடலும், தட்டையான தலையும், பெரிய வாயும் உடையது.
கீழ்த்தாடை மேல் தாடையை விட சற்று முன்னோக்கி நீண்டிருக்கும். கருநிற பட்டை ஒன்று உடல் நடுவே ஓடி வாலில் முடியும், வால் கவை போல பிளந்திருக்கும்.
பெரிய கறுநிறப் பட்டைக்கு மேலே சிறிய இன்னொரு பட்டையும் அமைந்திருக்கலாம்.
பெரும்பாலும் கருப்பு கலந்த ஒலிவ நிற தோற்றம் கொண்ட கடல்விராலின் முதுகில் 9 முதல்10 முட்கள் இருக்கலாம். இவற்றில் பாதி, மீனின் முதுகுத் தூவியில் அடங்கியிருக்கும். இவற்றை உயர்த்தவோ தாழ்த்தவோ கடல்விராலால் முடியும்.
கடல் விரால் அடிப்படையில் நண்டுகளை அதிகமாக உண்டுவாழும். இந்த நண்டுதின்னி மீன்,சிலவேளைகளில் கூட்டமாக வாழும். பெரும்பாலும் தனித்துத் திரியும்.
 சந்தையில் இது சீலா மீன் என ஏமாற்றி விற்கப்படுவதும் உண்டு.