முழுநிலவும்
கடலுயிர்களும்
‘பூ’தூவும் பவழப்பாறைகள் |
பௌர்ணமி என்ற
முழுநிலா நாளுக்கு தமிழில் அழகான பெயர்கள் உள்ளன. ஆனால் நாம் அதையெல்லாம்
பயன்படுத்துவதில்லை.
பழந்தமிழில்
வெள்ளுவா என்பது பௌர்ணமியைக் குறிக்கும். காருவா என்பது இருள்நிலா நாளான
அமாவாசையைக் குறிக்கும். நிறைமதி, முழுநிலா என்று பௌர்ணமியை நாம் குறிப்பிட்டாலும்
ஒன்றும் குறைந்து போய்விடாது.
தென்தமிழக
மீனவர்களிடம் ‘வெறிச்ச நிலா‘ என்ற ஒரு சொல் உண்டு. இது பௌர்ணமியைக் குறிக்கும் சொல்.
சரி! போகட்டும். இந்த முழுநிலா நாளுக்கும் கடல்
உயிர்களுக்கும் இடையில் எப்போதும் நெருக்கமான ஒரு தாக்கம்-தொடர்பு உண்டு.
கடல் உயிர்கள்
பலவற்றுக்குள் உறைந்திருக்கும் உயிரியல் கடிகாரம் நிலவை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது.
(கடல் உயிர்கள் மட்டுமல்ல, தரையில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிர்களிடம் கூட நிலா
தொடர்பான சர்கேடியன் இசைவு இருக்கிறது.)
கடலில்
பெருங்கூட்டமாக வாழும் கவுர்கள் (Plankton) இரவில் ஒளிசிந்தியபடி கடல்மட்டத்துக்கு
மேலே வந்து பாசி போன்ற இரைகளை உண்டுவிட்டு, பொழுது புலரும் தறுவாயில் கடலடிக்குப்
போய் விடக்கூடியவை.
கடலடியில் ‘ஹோலி’ |
கடலில் கவுர்களை
உண்டு வாழும் அம்மணி உழுவை (Whale shark), மேய்ச்சல் சுறா (Basking Shark) போன்ற உயிர்கள்
அதிகம் வெளிச்சம் குறைந்த இடங்களில் கவுர்களை இவற்றால் இரைகொள்ள முடியாது. இதனால்தான்
புலர்காலைக் கதிரொளி வரும்முன் கடலின் அடிஆழத்தில் சென்று மறைந்து கொள்வதை
கவுர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன.
வடதுருவமான ஆர்ட்டிக்
பகுதியில் முழுநிலா வெளிச்சம் சில நாள்களுக்குத் தொடர்ந்து நீடித்திருக்கும்
என்பதால் அந்த காலகட்டங்களில் கவுர்கள் கடல்மட்டத்துக்கு மேலே வருவதே இல்லை. நிலா
வெளிச்சம் மறையும் காலங்களில் இவை மீண்டும் மேலே வந்து தலைகாட்டி இரை தேடுவதை கடல்
ஆய்வாளர்கள் குறித்து வைத்துள்ளனர்.
சிப்பிகளைப்
பொறுத்தவரை முழுநிலா நாளில் அவை வாய்மூடிக்கிடக்கின்றன. வளர்பிறை காலங்களில்
சிப்பிகள் மெல்ல மெல்ல மலர்கள் விரிவதைப் போல வாய் திறக்கின்றன. முதலாம் பிறை நாளை
விட மூன்றாம் பிறைநாளில் சிப்பிகள் 20 விழுக்காடு அளவுக்குப் பெரிதாகத்
திறந்திருப்பது ஆய்வுகளில் தெரிய
வந்துள்ளது.
முழுநிலாவுக்குப்பின்
மூன்று அல்லது நான்கு நாள்கள் கழித்து பவழப்பாறைகள் அவற்றின் முட்டைகளை வெளியிடுகின்றன.
இவற்றைப் பவழப்பாறைகளின் ‘பாலியல் திருவிழா’ காலம் என கடல் ஆய்வாளர்கள்
வர்ணிக்கிறார்கள்.
களவா (Grouper)
இனத்தைச் சேர்ந்த பலவகை மீன்கள் கூட்டம் கூட்டமாக கூடி அவற்றின் முட்டைகளை வெளியிடும்
காலமும் முழுநிலா காலமே!