புதுவகை
வண்ணாத்தி மீன்
படம் நன்றி: லூயிஸ் ரோச்சா |
கடல்வாழ்
பார் மீன்களில், பட்டர்ஃபிளை பிஷ்
(Butterfily Fish) எனப்படும்
வண்ணாத்தி மீன்களும் அடக்கம். பார் மீன்களுக்கே
உரித்தான விதத்தில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்கள் நிறைந்த மீன்கள் வண்ணாத்தி மீன்கள்.
அறிவியல்
உலகத்தால் இவை நன்றாக ஆராயப்பட்ட மீன்கள் என்பதால், இதற்கு மேல்
வண்ணாத்தி மீன்களில் புதுவகை மீன்கள் இருப்பது அரிது என்று மீனியல் வல்லுநர்கள் கருதி வந்தார்கள். ஆனால் அந்த கருத்தைப் பொய்யாக்கி புதுவகை வண்ணாத்தி மீன் ஒன்று பிலிப்பின்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்
சான்பிரான்சிஸ்கோ நகரைத் தளமாகக் கொண்ட கலிஃபோர்னியா அறிவியல் கழகம், பசிபிக் கடற்பகுதியில்
உள்ள பிலிப்பின்ஸ் நாட்டின் வெர்டி
தீவு அருகே 360 அடி ஆழத்தில் புதுவகை ஆழ்கடல் வண்ணாத்தி மீன் ஒன்றை கண்டு பிடித்துள்ளது.
வண்ணாத்தி மீன்களில் ரோவா வகை வண்ணாத்தி மீன்களில் இதுவரை நான்கு
வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஐந்தாவது வகை.
இந்த
புதியவகை மீனுக்கு, இராக் போரை தலைமை தாங்கி வழிநடத்திய அமெரிக்க ராணுவத் தளபதியான டொனால்டு ரம்ஸ்பெல்டின் நினைவாக ரோவா
ரம்ஸ்ஃபெல்டி (Roa rumsfeldi) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்னும் முடிவுறாத இராக் போருக்கு வித்திட்டவரான ஒரு ராணுவத்
தளபதியின் பெயரை ஓர் அரிய வகை அழகிய பார் மீனுக்குச் சூட்டுவதா என இதற்குக் கண்டனமும் எழுந்து
அடங்கியுள்ளது.
படம் நன்றி: லூயிஸ் ரோச்சா |
முழுக்க
மையிருட்டு இல்லாமல், மிதமான அந்திமாலையின் மந்தமான (Twilight)
ஒளி வந்து ஊஞ்சலாடும் மெசபோடிக் (Mesophotic) பார்ப்பகுதியில்தான் இந்த
புதிய வண்ணாத்தி மீன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த 2 மீன்களை
அறிவியலாளர்கள் தற்செயலாக பிடித்தனர்.
கலிஃபோர்னியா அறிவியல்
கழகத்தைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் லூயிஸ் ரோச்சா (Luiz Rocha) இந்த மீன்களைப் படமெடுத்துள்ளார். இந்த புதிய வகை மீன்கள் எப்போதும்
இணையாகத் திரியும் பழக்கம் கொண்டவை என்றாலும், 2 மீன்களும் தனித்தனியே பிடிபட்டு ஆய்வுக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பழுப்பும், வெள்ளை நிறமும் கொண்ட
இந்த புதுவை ரோவா வண்ணாத்தி மீனுக்கு முழுக்க முழுக்க கருநிறமான அடிப்புறத் தூவி இருப்பது
அனைவரையும் கவர்கிறது.